ஊடக சுதந்திரத்தை வலியுறுத்தி யாழில் கண்டன ஆர்ப்பாட்டம்-
ஊடக சுதந்திரத்தினை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டமொன்று யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்திற்கு முன்பாக இன்று நண்பகல் 12 மணியளவில் இடம்பெற்றது வடக்கில் தொடரும் ஊடக அடக்குமுறைகளை கண்டித்தும் பொய்க்குற்றச்சாட்டுக்களின் கீழ் ஊடகவியலாளர்களை சிறையிலடைக்கும் அரசாங்கத்தின் சதி முயற்சிகளைக் கண்டித்தும் இந்த கண்டன ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டதாக ஆர்ப்பாட்டத்தின் ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர். மேற்படி ஆர்ப்பாட்டத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜாh, சுரேஸ் பிரேமச்சந்திரன், வட மாகாண சபை விவசாய அமைச்சர் ஐங்கரநேசன், வடமாகாண சபை உறுப்பினர்களான அனந்தி சசிதரன், கஜதீபன் மற்றும் ஊடகவியலாளர்கள் எனப் பலரும் கலந்துகொண்டிருந்தனர்.
இராணுவ பஸ் விபத்தில் சிக்கியதில் 17 பேர் காயம்-
திருகோணமலையில் இருந்து அளுத்கம நோக்கி விசேட அதிரடிப் படைவீரர்கள் பயணித்த பஸ் 91ஆவது கட்டைப் பகுதியில் விபத்துக்குள்ளானதில் 17 பேர் காயமடைந்துள்ளனர். திருகோணமலை முகாமில் இருந்து அளுத்கம நகருக்கு விசேட பணிகளுக்காக சென்று கொண்டிருந்தபோது இன்று காலை 8 மணியளவில் கொள்கலன் வாகனமொன்றை முந்திச்செல்ல முற்பட்ட சந்தர்ப்பத்தில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு குறிப்பிட்டுள்ளது. மேற்படி விபத்தில் காயமடைந்த இராணுவத்தினர் கந்தளாய் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அரசியல் கலாசாரத்தில் மாற்றம் கொண்டுவருவது குறித்து பொதுமக்களிடம் கருத்து-
அரசியல் கலாசாரத்தில் மாற்றம் கொண்டு வருவது தொடர்பில் பொதுமக்களிடம் கருத்துக்களை பெறும் ஆய்வொன்றை பெப்ரல் அமைப்பு ஆரம்பித்துள்ளது. சமூகத்தின் பலவித தரப்பினர் மத்தியிலிருந்தும் பெறப்படும் கருத்துக்களை உள்ளடக்கி அறிக்கையொன்றை தயாரிக்க எதிர்பார்த்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெப்ரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹன ஹெட்டிஆராய்ச்சி இந்த தகவலை வெளியிட்டுள்ளார். தயாரிக்கப்படும் அறிக்கை அனைத்து அரசியல் கட்சிகள் மற்றும் பொதுமக்களின் கவனத்திற்கு கொண்டுவரப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மனைவியை வெட்டி கொலை செய்தவர், தானும் தற்கொலை-
வவுனியா, மாகாரம்பைக்குளம் பகுதியில் மனைவியை கோடரியால் வெட்டிக் கொலை செய்துவிட்டு குடும்பஸ்தர் ஒருவர் தானும் தற்கொலை செய்துள்ளார். குறித்த பகுதியை சேர்ந்த செ.ராசேந்திரன் (வயது-45) என்பவர் நேற்றிரவு 11.30 மணியளவில் தனது மனைவியான அமுதாவை (வயது-38) வெட்டிப் படுகொலை செய்துள்ளார். தொடர்ந்து தனது மாமி மற்றும் மாமாவையும் கோடரியால் தாக்கிவிட்டு. மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். சம்பவத்தில் படுகாயமடைந்த இருவரும் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இருவரின் சாவுக்கும் குடும்பத்தகராரே காரணமென வவுனியா பொலிஸார் மேற்கொண்ட ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக கூறப்படுகின்றது.
ஊனமுற்ற படையாலும் 18 கோடி ரூபா வருமானம்-
போரில் பாதிக்கப்பட்ட இராணுவத்தினர் மூலம் அரசாங்கத்துக்கு வருடாந்தம் 18 கோடி ரூபா வருமானம் கிடைப்பதாக பாதுகாப்பமைச்சு அறிவித்துள்ளது. புலிகளுக்கு எதிரான போரில் ஈடுபட்டதன் கராணமாக விசேட தேவையுடையோராக மாற்றப்பட்ட 1500 இராணுவத்தினர் யக்கலையில் இயங்கும் ஆடைத் தயாரிப்பு நிலையத்தில் இராணுவ சீருடைகளைத் தயாரிப்பில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதன் காரணமாக அரசாங்கம் இராணுவ சீருடைகள் கொள்வனவு செய்ய வருடாந்தம் தனியார் நிறுவனங்களுக்கு வழங்கும் 18 கோடி ரூபா சேமிக்கப்படுகிறது. இங்கு ஆடைத் தயாரிப்பில் ஈடுபட்டுள்ள இராணுவத்தினருக்கு சம்பளத்துக்கு மேலதிகமாக மாதாந்தம் ஐயாயிரம் ரூபா வழங்கப்படுவதுடன் பாதுகாப்பு படையினருக்குத் தேவையான சீருடைகளில் 60 சதவீதமானவற்றை இந்த நிறுவனம் உற்பத்தி செய்துவருவதாக குறிப்பிட்டுள்ளது.
மாகாண கைத்தொழில் கண்காட்சி ஆரம்பித்து வைப்பு-
வடமாகாண கைத்தொழில் திணைக்களத்தின் ஏற்பாட்டில் மாகாணக் கைத்தொழில் கண்காட்சி இன்றுகாலை 9.30 மணியளவில் யாழ்.மத்திய கல்லூரியில் இடம்பெற்றது. இக் கண்காட்சியை வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் நாடா வெட்டி ஆரம்பித்து வைத்தார். மேலும் இந்நிகழ்வில் கைத்தறி நெசவு உற்பத்திப் பொருட்கள், மட்பாண்ட உற்பத்திப் பொருட்கள், சிற்பியிலான கைப்பணிப் பொருட்கள், பனை தெங்குசார் உற்பத்திப் பொருட்கள் என்பன காட்சிப்படுத்தப்பட்டதுடன் இக்கண்காட்சி இன்றும் நாளையும் இடம்பெறவுள்ளது. மேலும் இந்நிகழவில் பிரதம செயலாளர் விஜயலட்சுமி, வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர் சத்தியசீலன் மற்றும் கைத்தொழில் திணைக்கள அதிகாரிகள் என பலரும் கலந்துகொண்டனர்.