கடத்தப்பட்ட நான்கு வயது சிறுவன் மீட்பு-

siruvan kadaththalகடத்திச் செல்லப்பட்ட மீகலெவ – குணுபொலகம பிரதேச வியாபாரியின் 04 வயது மகன் இன்று மீட்கப்பட்டுள்ளார். டனிது யசீன் என்ற சிறுவனே குற்ற புலனாய்வு பிரிவினரால் கல்கமுவ பிரதேசத்தில் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். கடந்த 28ஆம் திகதி இரவு சிறுவன் கடத்திச் செல்லப்பட்டார். மோட்டார் சைக்கிளில் குறித்த வியாபாரியின் வீட்டுக்கு வந்த அடையாளம் தெரியாத நால்வர் இந்த கடத்தலை மேற்கொண்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர். மேலும் இதன்போது சந்தேகநபர்களால் வியாபாரி மற்றும் அவரது ஆறு வயது மகளும் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளனர்.

மோடி, ஜெயலலிதாவிடம் இலங்கை மன்னிப்புக் கோரியது- 

srilanka_apology_001சர்ச்சைக்குரிய கட்டுரையை வெளியிட்டதற்காக இலங்கை அரசாங்கம், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் தமிழக முதல்வர் ஜெயலலிதாவிடம் நிபந்தனையற்ற மன்னிப்பு கோரியுள்ளது. இலங்கை பாதுகாப்பு மற்றும் நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சகத்தின் அதிகாரப்பூர்வ வலைதளத்தில், “நரேந்திர மோடிக்கு ஜெயலலிதா எழுதும் காதல் கடிதங்கள் எந்த அளவுக்கு அர்த்தமுள்ளவை?” என மிகவும் கீழ்த்தரமாக அந்தக் கட்டுரைக்கு தலைப்பும் வைக்கப்பட்டிருந்தது. அத்துடன், ஜெயலலிதா மற்றும் மோடி ஆகியோரின் புகைப்படங்களைக் கொண்டு, சர்ச்சைக்குரிய சித்தரிப்புப் படம் ஒன்றும் வெளியாகியிருந்தது. இந்தப் பதிவு தமிழகத்தில் பெரும் சர்ச்சையை கிளப்பியது. தமிழக அரசியல் தலைவர்கள் தங்கள் கண்டனங்களை பதிவு செய்தனர். இதன் தொடர்ச்சியாக, சர்ச்சைக்குரிய அந்தக் கட்டுரையை தமது தளத்தில் இருந்து இலங்கை பாதுகாப்பு அமைச்சகம் உடனடியாக நீக்கியது. இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி, தமிழக முதல்வர் ஜெயலலிதாவிடம் இலங்கை அரசு நிபந்தனையற்ற மன்னிப்பு கோரியுள்ளது.  சர்ச்சைக்குரிய கட்டுரை வெளியான அதே அரசாங்க வலைதளத்தில் பகிரங்க மன்னிப்புக் கடிதமும் இடம்பெற்றுள்ளது. பிரதமர் நரேந்திர மோடியின் படத்துடன் அக்கடிதம் பிரசுரிக்கப்பட்டுள்ளது.  இலங்கை வெளியிட்டுள்ள மன்னிப்புக் கடிதத்தில்,  “தகுந்த பரிசீலனைக்கு உட்படுத்தப்படாமல் பதிவேற்றப்பட்டுவிட்டது. அந்தக் கட்டுரையானது இலங்கை அரசின் நிலைப்பாட்டையோ, பாதுகாப்பு மற்றும் நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சகத்தின் கருத்தையோ எந்தவகையிலும் பிரதிபலிக்கவில்லை. அதை நீக்கிவிட்டோம். பிரதமர் நரேந்திர மோடியிடமும், தமிழக முதல்வர் ஜெயலலிதாவிடமும் நிபந்தனையற்ற மன்னிப்பை கேட்டுக்கொள்கிறோம்”  எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கை அகதிகள் நவுரு தீவுக்கு மாற்றம்-

tamil-asyl-04இந்தியாவில் இருந்து அவுஸ்திரேலியாவுக்கு அகதிகளாக சென்ற 157 இலங்கையர்களும் நவுரு தீவுக்கு மாற்றப்பட்டுள்ளனர். 50 சிறார்கள் உள்ளடங்களாக அனைத்து அகதிகளும் நேற்று இரவு அவர்கள் நவுரு தீவுக்கு மாற்றப்பட்டுள்ளனர். குறித்த அகதிகள் அனைவரும் முன்னர் கர்டீன் முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்தனர். அவர்களை இந்தியாவுக்கு திரும்பிச் செல்லுமாறு அவுஸ்திரேலிய அரசாங்கம் வலியுறுத்தி வந்தபோதிலும், இதற்கு அகதிகள் இணங்க மறுத்து வந்தனர். இந்நிலையில் நேற்றையதினம் இரவு மூன்று விமானங்களின் மூலம் அவர்கள் அவுஸ்திரேலியாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ராமேஸ்வரம் மீனவர்களின் பயணம் ஒத்திவைப்பு-

பத்து நாட்களுக்குள் தமிழக மீனவர்களையும், அவர்களின் படகுகளையும் விடுவிப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுப்பதாக இந்திய அரசாங்கம் வழங்கிய வாக்குறுதியை அடுத்து வெள்ளைக் கொடியுடன் கச்சத்தீவு நோக்கிய ராமேஸ்வரம் மீனவர்களின் பயணம் தற்காலிகமாக பயணம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்திய மத்திய கனரக தொழில் மற்றும் பொதுத்துறை இணை அமைச்சர் பொன் இராதாகிருஷ்ணன் வழங்கிய வாக்குறுதியை அடுத்து கச்சத்தீவு நோக்கியப் பயணத்தை தற்காலிகமாக ஒத்திவைக்க தீர்மானித்துள்ள போதிலும் தமது வேலைநிறுத்த போராட்டம் தொடர்ந்து முன்னெடுக்கப்படுவதாக ராமேஸ்வரம் மீனவர் சங்கத் தலைவர் என்.தேவதாசன் ஊடகங்களுக்கு வழங்கிய செவ்வியில் தெரிவித்துள்ளார்.

கடத்தப்பட்ட சிறுவன் பாதுகாப்பாக மீட்கப்பட்டமை தொடர்பில் விளக்கம்-

கடத்தப்பட்ட நிலையில் பாதுகாப்பாக மீட்கப்பட்ட மீகலேப பகுதியைச் சேர்ந்த சிறுவன் தினிந்து யஷேன் ஏக்கநாயக்க இன்று கொழும்பிற்கு அழைத்துவரப்பட்டார். சிறுவன் மீட்கப்பட்டமை தொடர்பில் தெளிவுப்படுத்துவதற்காக பொலிஸ் தலைமையகத்தில் ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்று இடம்பெற்றது. இந்த ஊடக சந்திப்பில் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன பிள்ளை மீட்கப்பட்டமை தொடர்பில் விளக்கமளித்தார். பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்த அதேவேளை, குற்றப்புலனாய்வு பிரிவு நேற்று முன்தினம் இரவு விசாரணைகளை ஆரம்பித்து 24 மணித்தியாலங்களுக்குள் சிறுவன் மீட்கப்பட்டதாக அஜித் ரோஹண தெரிவித்தார். சிறுவனின் பெற்றோரிடம் தொலைபேசியில் தொடர்புகொண்ட சந்தேகநபர் முல்தொட்டுவ, பகுதியில் நேற்றிரவு 8.30 அளவில் கைது செய்யப்பட்டதாகவும், குறித்த நபர் வழங்கிய தகவலுக்கு அமைய மேலும் மூன்று சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.