வவுனியா ஊடகவியலாளருக்கு அச்சுறுத்தல்-

vavuniya oodakaviyalaalarukkuவவுனியா மாவட்ட ஊடகவியலாளரும் வன்னி பத்திரிகையாளர் சங்கத்தின் உப தலைவருமான நவரத்தினம் கபிலநாத்துக்கு நேற்று இரவு தொலைபேசி மூலம் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. இவ்வச்சுறுத்தல் தொடர்பாக குறித்த ஊடகவியலாளர் உடனடியாக வவுனியா பொலிஸில் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். மேற்படி ஊடகவியலாளரின் கையடக்கத் தொலைபேசிக்கு இருவேறு கையடக்கத் தொலைபேசி இலக்கங்களிலிருந்து அழைப்பை மேற்கொண்டுள்ள சந்தேகநபர்கள், தகாத வார்த்தைப் பிரயோகங்களால் அச்சுறுத்தல் விடுத்துள்ளனர் என்று பொலிஸ் முறைப்பாட்டில் கூறப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பில் வவுனியா பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

சிறீலங்கன் எயார்லைன்ஸ் அலுவலகம்மீது தாக்குதல்-

sri lankan airlines aluvalaham meethuஇந்தியா – தமிழகம் திருச்சியில் உள்ள சிறீலங்கன் எயார்லைன்ஸ் அலுவலகம்மீது கல்லெறி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த சம்பவம் நேற்றையதினம் மாலை இடம்பெற்றதாக இந்திய தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த சம்பவத்துடன் தொடர்புடைய மக்கள் ஜனாநாயக குடியரசு கட்சியின் மாவட்ட இணைப்பாளர் மற்றும் மாவட்ட அமைப்பாளர் ஆகியோரை கைது செய்யப்பட்டனர். இவர்கள் இருவரும் வாடிக்கையாளர்களை போன்று குறித்த அலுவலகத்துக்குள் சென்று அங்கு தாக்குலை நடத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையின் பாதுகாப்பு இணையத்தளத்தில் தமிழக முதல்வரை அபகீர்த்திக்கு உள்ளாக்கும் வகையில் மேற்கொள்ளப்பட்ட பிரசாரத்தை கண்டித்தே இத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதேவேளை இலங்கை பாதுகாப்பு அமைச்சின் கட்டுரையை பார்த்த பின்னர் தற்கொலைக்கு முயன்ற அண்ணா திராவிட முன்னேற்றக் கழக சேலம் மாவட்ட பெண்கள் அமைப்பு உறுப்பினரான விஜயலட்சுமி ஆபத்தான கட்டத்தை தாண்டிவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

படகில் வரும் எவருக்கும் அவுஸ்திரேலியாவில் இடமில்லை-டோனி அபொட்-

சட்டவிரோதமாக படகில் வரும் எவருக்கும் தமது நாட்டில் இடமில்லை என அவுஸ்திரேலிய பிரதமர் டோனி அபொட் மீண்டும் வலியுறுத்தியுள்ளார். இலங்கை அகதிகள் 157 பேர் நவ்ரு தீவிற்கு அனுப்பிவைக்கப்பட்டமை தொடர்பில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்தபோதே அவர் இதனை வலியுறுத்தியதாக பிபிசி செய்தி வெளியிட்டுள்ளது. குறித்த புகலிடக் கோரிக்கையாளர்கள் நீண்டகாலம் இந்தியாவில் வசித்துவந்தவர்கள் என்பது தெரியவந்ததாகவும், அவர்களில் அநேகமானவர்களுக்கு இந்திய குடியுரிமை உள்ளதாகவும் அவுஸ்திரேலிய பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளார். இதற்கமைய நவ்ருவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 157 பேரும் இந்தியாவுக்கு திருப்பி அனுப்பப்படுவார்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

சர்வதேச விசாரணை குறித்த நிலைப்பாட்டில் மாற்றமில்லை-சையிட் அக்பர்தீன்-

இலங்கை தொடர்பில் மேற்கொள்ளப்படுகின்ற சர்வதேச விசாரணை குறித்த நிலைப்பாட்டில் மாற்றம் இல்லை என இந்திய வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் சையிட் அக்பர்தீன் தெரிவித்துள்ளார். ஒருநாட்டின் உள்விவகாரம் குறித்த சர்வதேசகுழு ஒன்று அத்துமீறி விசாரணை நடத்த முற்படக்கூடாது என அவர் ஏற்கனவே தெரிவித்திருந்தார். இந்நிலைப்பாட்டில் இருந்து இந்தியா மாறவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை இலங்கை தொடர்பான சர்வதேச விசாரணைக் குழுவுக்கு வீசா வழங்குவது தொடர்பில் இந்தியா ஆலோசித்து தீர்மானம் மேற்கொள்ளும். எனினும் ஏற்கனவே இந்தியா அவர்களுக்கான வீசாவை நிராகரித்துள்ளதாக வெளியான செய்தி உறுதியானது இல்லை. எவ்வாறாயினும் இதுவரையில் அந்த குழு இந்தியாவிடம் வீசாவை கோரி விண்ணப்பிக்கவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

பாகிஸ்தானியர்களை இலங்கை சட்டவிரோதமாக நாடு கடத்துகிறது – ஐநா-

untitledபுகலிடம் கோரும் பாகிஸ்தானியர்களை இலங்கை அரசாங்கம் சட்டவிரோதமான ரீதியில் நாடு கடத்துவதாக ஐக்கிய நாடுகளின் அகதிகளுக்கான முகவர் நிறுவனம் (யூ.என்.எச்.சீ.ஆர்) சுட்டிக்காட்டியுள்ளது. எனவே இந்நடவடிக்கையை இலங்கை கைவிட வேண்டும் என அந்நிறுவனம் கோரிக்கை விடுத்துள்ளது. கடந்த ஜூன் 9ம் திகதிமுதல் இலங்கையில் புகலிடம் கோரியுள்ள பாகிஸ்தானியர்களை கைதுசெய்யும் நடவடிக்கைகளை இலங்கை அரசாங்கம் ஆரம்பித்துள்ளது. இதுவரையில் 214 பாகிஸ்தானியர்களை இலங்கை அதிகாரிகள் கைதுசெய்துள்ளது. சர்வதேச சட்டத்தின் அடிப்படையில் புகலிடக் கோரிக்கையாளர்கள் நாடு கடத்துவது தடைசெய்யப்பட்ட ஓர் விடயமாகும். பலவந்தமான அடிப்படையில் புகலிடக் கோரிக்கையாளர்களை அரசாங்கம் நாடு கடத்தக்கூடாது. சித்திரவதைகளுக்கு எதிரான சர்வதேச பிரகடனத்தின் அடிப்படையில் பலவந்தமான அடிப்படையில் புகலிடக் கோரிக்கையாளர்கள் சொந்த நாட்டுக்கு அனுப்பி வைக்க முடியாது என ஐ.நாவின் அகதிகளுக்கான முகவர் நிறுவனம் மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.

சிம் கார்ட் பெற ஆளடையாளம் உறுதிப்படுத்தப்பட வேண்டுமென அறிவுறுத்தல்-

உரியமுறையில் ஆளடையாளத்தை உறுதிப்படுத்தாமல் சில நிறுவனங்கள் சிம் கார்ட்களை விநியோகிக்கின்றன. எனவே சில குற்றச்செயல்களில் ஈடுபடுகின்றவர்களுக்கு இவை வாய்ப்பாக அமைந்துள்ளது. ஆகையால் இனிமேல் இவ்வாறு ஆளடையாளத்தை உறுதிப்படுத்தாமல் சிம் கார்ட் விநியோகிப்போருக்கு சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமென பொலிஸ் ஊடகப்பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார். அதாவது சிம்காட்கள் வாங்குவதற்கு வரும் ஒருவரிடம் தேசிய அடையாள அட்டை இல்லையெனில் சில சிம்கார்ட் நிறுவன பிரதிநிதிகள் ஏற்கனவே சிம்கார்ட் வாங்கிய ஒருவரது தேசிய அடையாள அட்டை பிரதியை பயன்படுத்தி சிம்கார்ட்களை பெற்றுக்கொள்கின்றனர். அவ்வாறான செயற்பாடு தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அதாவது இவ்வாறான செயற்பாடுகளுக்கு உடந்தையாக செயற்பட்டமை தொடர்பிலேயே அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. எனவே இனிவரும் காலங்களில் முறையாக ஆள் அடையாளத்தை உறுதிப்படுத்தாமல் சிம்கார்ட்கள் விநியோகிக்கும் நிறுவனங்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் அவர்.

உள்நாட்டு இறைவரி திணைக்களத்தின் புதிய பதில் ஆணையாளர் நியமனம்-

ul naaddu iraivari thinaikkalamஆகஸ்ட் மாதம் முதலாம் திகதி வெள்ளிக்கிழமை முதல், (01.08.2014) உள்நாட்டு இறைவரி திணைக்களத்தின் பதில் ஆணையாளர் நாயகமாக ஆர்.எம்.ஆர்.டபிள்யூ. மஞ்சநாயக்க நியமிக்கப்பட்டுள்ளதாக நிதித்திட்டமிடல் அமைச்சு இன்றையதினம் அறிவித்துள்ளது.