Header image alt text

கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சைகள் நாளை ஆரம்பம்-

கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சைகள் நாளை ஆரம்பமாகி எதிர்வரும் 29ம் திகதி வரை நடைபெறவுள்ளன. இதன்படி இதற்கான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கல்வித் திணைக்களம் தெரிவித்துள்ளது. நயினாதீவு, நெடுந்தீவு உள்ளிட்ட நாடு பூராகவுமுள்ள 2020 பரீட்சை மத்திய நிலையங்களில் இந்தப் பரீட்சைகள் இடம்பெறவுள்ளன. இம்முறை கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சைகளுக்காக 2லட்சத்து 96ஆயிரத்து 313 பரீட்சார்த்திகள் தோற்றவுள்ளனர். மேலும் பரீட்சை தொடர்பான மோசடிகள் இடம்பெறின் அது தொடர்பில் 1911 அல்லது பரீட்சைகள் திணைக்களத்தின் 0112 784208 மற்றும் 0112 784537 ஆகிய இலக்கங்களுக்கு தொடர்பு கொண்டு அறியத்தருமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

முதலமைச்சருக்கு அந்த அதிகாரம் இல்லை-

மாகாண சபை பிரதம செயலாளருக்கு உத்தரவிட மக்கள் சேவைகள் ஆணைக்குழுவுக்கே அதிகாரம் உள்ளது எனவும் முதலமைச்சருக்கு இல்லை எனவும் இலங்கை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனால் தனது அடிப்படை உரிமை மீறப்பட்டதாக வட மாகாண பிரதம செயலாளர் விஜயலட்சுமி ரமேஸ் தாக்கல் செய்த மனித உரிமைகள் மனு மீதான விசாரணையின்போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பிரதம நீதியரசர் மொஹான் பீரிஸ், கே. சிறீபவன் மற்றும் ரோஹினி மாரசிங்க ஆகிய மூவரடங்கிய நீதியரசர்கள் முன்னிலையில் இன்றையதினம் இந்த மனு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டிருந்தது.

வவுனியாவில் அடிகாயங்களுடன் இளைஞரின் சடலம் மீட்பு

வவுனியா வைரவப்புளியங்குளம், ஆதிவிநாயகர் ஆலயத்திற்கு அருகாமையில் அமைந்துள்ள வீடொன்றின் மொட்டைமாடியில் இருந்து அடிகாயங்களுடன் இளைஞர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. இன்று அதிகாலையில் குறித்த வீட்டில் வசிப்பவர்கள் பொலீசாருக்கு வழங்கிய தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த வவுனியா பொலீசார் இது தொடர்பிலான விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். தமது வீட்டில் வேலைசெய்யும் மேற்படி நபர் நேற்றிரவு மதுபோதையில் வீதியில் சிலருடன் தகராறில் ஈடுபட்டிருந்ததாகவும், அதற்குப் பின்னர் தமது வீட்டின் மொட்டைமாடியில் வந்து உறங்கியதாகவும் தெரிவித்த அவர்கள், அதிகாலையில் பார்த்தபோது சடலமாக காணப்படுவதாகவும் கூறியுள்ளனர். உயிரிழந்தவர் வத்தளையைச் சேர்ந்த 28வயதுடைய எஸ் சரவணன் என்று விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.

காணாமற்போனோரின் உறவுகள்; இரகசியமாகச் சாட்சியமளிப்பர்-

ஐ.நா விசாரணைக்குழு முன்பாக காணாமற் போனோரின் உறவுகள் இரகசியமாகச் சாட்சியமளிக்கவுள்ளனர். அதற்குரிய ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன என காணாமற் போனோரைத் தேடிக் கண்டறியும் குழுவின் செயலாளர் சுந்தரம் மகேந்திரன் கூறியுள்ளார். இறுதிக் கட்டப்போரில் இடம்பெற்ற சர்வதேச மனிதாபிமான சட்டமீறல்கள், மனித உரிமை மீறல்கள் தொடர்பில் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகத்தால் விசாரணை முன்னெடுக்கப்பட்டுள்ளது. இந்த விசாரணைகள் வெளிநாடுகளில் பல்வேறு நகரங்களில் நேரடியாக இடம்பெற்று சாட்சிகள் திரட்டும் நடவடிக்கை இடம்பெற்று வருகின்றது. அத்துடன் ஸ்கைப் உள்ளிட்ட நவீன தொடர்பு சாதனங்களின் ஊடாகவும் சாட்சியங்கள் பதிவு செய்யப்பட்டு வருகின்றன. அதனடிப்படையில் இலங்கையிலுள்ள காணாமற் போனோரின் உறவுகளும் நவீன தொடர்பு சாதனங்கள் ஊடாக சாட்சியமளிப்பதற்குரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. சாட்சியமளிப்பு இரகசியமாகவே மேற்கொள்ளப்படும். எப்போது சாட்சியமளிப்பு இடம்பெறும் என்பதைப் பற்றி எந்தவொரு பகிரங்க அறிவித்தலும் விடுக்கப்படாது என காணாமற் போனோரைத் தேடிக் கண்டறியும் குழுவின் செயலாளர் சுந்தரம் மகேந்திரன் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

முகமாலை மாணவன்மீது, தாக்குதல்;, சப்ரகமுவ பல்கலையின் பாதுகாப்பு அதிகரிப்பு-

சப்ரகமுவா பல்கலைக்கழகத்தில் கல்வி பயிலும் கிளிநொச்சி மாணவர் ஒருவர் கடுமையாகத் தாக்கப்பட்ட சம்பவத்தை அடுத்து, பல்கலைக்கழகத்தின் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு பல்கலைக்கழக நிர்வாகமும் பொலிஸாரும் இது தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். நேற்று அதிகாலை 2 மணியளவில், மாணவர்கள் விடுதிக்குள் புகுந்த முகமூடி அணிந்த சிலர், இந்த தாக்குதலை நடத்தியுள்ளனர் என்று தெரிவிக்கப்படுகின்றது. கிளிநொச்சி, முகமாலையைச் சேர்ந்த சந்திரகுமார் சுதர்சன் என்ற மாணவனே இவ்வாறு தாக்குதலுக்கு உள்ளாகியிருக்கிறார். இரவு நெடுநேரம் படித்துவிட்டு உறங்கச் சென்றிருந்த அந்த மாணவன் இடையில் கழிப்பறைக்குச் சென்றபோதே தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. முகமூடி அணிந்த ஒரு நபர் தனது வாயைப் பொத்திப் பிடித்திருக்க, மற்றுமொருவர் தன்னைத் தடியொன்றினால் பலமாகத் தலையில் தாக்கியதாகவும் இதனால் தான் மயங்கி விழுந்துவிட்டதாகவும் காயமடைந்த மாணவன் தெரிவித்துள்ளார். மயக்கம் தெளிந்தபோது விடுதிக்கு வெளியே பற்றையொன்றில் தான் வீசப்பட்டு கிடந்ததாகவும் கழுத்தில் கயிறு ஒன்று இறுக்கப்பட்டிருந்ததாகவும் அந்த வேதனையோடு விடுதிக்குச் சென்றபோது சக மாணவர்கள் தன்னை வைத்தியசாலையில் சேர்த்ததாகவும் அவர் கூறியுள்ளார். Read more

சங்கானைப் பகுதியில் நெல்சிப் திட்டத்தின் ஊடான பணிகள்-

வலி மேற்கு பிரதேச சபைக்கு உட்படட்ட சங்கானைப் பகுதியில் 320 இலட்சம் ரூபா செலவில் நெல்சிப்தி;ட்டம்மூலம் மீன்சந்தை அமைக்கும் ஆரம்பபணிகள் ஆரம்பமாகியுள்ளது. 2011ம் ஆண்டு முதலாக சங்கானை பகுதி பட்டிண அபிவிருத்திச் சபை மற்றும் பொது அமைப்புக்கள் தொடர்ச்சியாக வலி மேற்கு பிரதேச சபையிடம் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து புதிய சந்தைக்கான தெரிவு பற்றிய கலந்துரையாடல்களை மேற்கொண்டது. இந்நிலையில் வலி மேற்கு பிரதேச சபைத் தவிசாளர் திருமதி நாகரஞ்சினி ஐங்கரன் அவர்கள் சங்கானை பிரதேச பொது அமைப்புகளுடன் பலசுற்று பேச்சுவார்த்தைகளையும் மேற்கொண்டு மேற்படி சந்தைக்கான சாத்தியப்பாடுகள் பற்றிய அறிக்கையை தயார் செய்து அனுப்பினார். தொடர்ந்து சங்கானை பட்டின அபிவிருத்தி சபை மேற்கொண்ட முயற்சி காரணமாக பிரதேச சபைக்கு புதிய நிலம் மீன் சந்தை அமைப்பதற்கான நிலம் பிரதேச செயலகத்திற்கு பின் உள்ள பகுதியில் அன்பளிப்பாக வழங்கப்பட்டது. இதேவேளை மேற்படி மீன்சந்தை அமைப்பு பணிக்கு எதிர்ப்பு தெரிவித்து மேற்படி சந்தையை அமைக்காது இவ் நிதிமூலம் வீதிகளை செப்பனிடலாம் என கோரிக்கையையும் முன்வைத்து இப்பணிகளை முடக்குவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது. ஆயினும் இவ் சந்தை அமைப்பதன் வாயிலாக பெறப்படும் நிதி தொடர்ச்சியாக பிரதேச அபிவிருத்திக்கு பயன்படமுடியும் என்பதை கருத்தில்கொண்டு மேற்படி திட்டம் தவிசாளரால் முன்மொழியப்பட்டு தற்போது ஆரம்ப கட்ட பணிகளை மேற்கொள்ள நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. மேற்படி வியம் தொடர்பில் கருத்து தெரிவித்த ஓய்வுநிலை புவியியலாளர் சங்கானை பிரதேசத்தினை நகரமாக்கும் செயன்முறையின் முதல்கட்ட படிமுறையாக இவவிடயம் அமையும் என்றார்.

தொல்புரம் கலாலயத்தின் நரகாசுரன் இசைநாடக கலைஞர் கௌரவிப்பு இறுவெட்டு வெளியீடு-

யாழ். தொல்புரம் கலாலயத்தின் நரகாசுரன் இசைநாடக கலைஞர் கௌரவிப்பு இறுவெட்டு வெளியீடு மற்றும் தசரதன் செல்வன் இசை நாடகத்திற்கான அங்குராட்பண வைபவம் என்பன கடந்த 27.07.2014 ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 3.00 மணிக்கு கலாலய நிறுவனத்தின் தலைவர் மு.சடாற்சரம் தலைமையில் இடம்பெற்றது. இவ் நிகழ்வில் பிரதம விருந்தினராக பாராஞமன்ற உறுப்பினர் கௌரவ .ஈ.சரவணபவன் அவர்களும் சிறப்பு விருந்தினராக பிரதேச சபைத் தலைவர் திருமதி. நாகரஞ்சினி ஐங்கரன் அவர்களும் கலந்து சிறப்பித்தனர். இவ் வெளியீ;டு நிகழ்வில் ஆய்வுரையினi சங்கானை பிரதேசசெயலக கலாச்சார உத்தியோகஸ்தர் திருமதி நிரூபா.காசிநாதர் அவர்கள் வழங்கினார். ஏற்புரையை கலாலய நிறுவனத்தின் நெறியாளர் செ. உதயச்சந்திரன் வழ்ங்கினார். பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ. ஈ.சரவணபவன் அவர்கள் நடிகர் குணபாலன் அவர்களுக்கு விருது வழங்கி கௌரவித்தார். பிரதேச சபைத் தலைவர் திருமதி. நாகரஞ்சினி ஐங்கரன் அவர்கள் இவ் நிறுவனத்தின் பெண் நடிகரை கௌரவித்து மலர்மாலை அணிவித்தார் இந்நிகழ்வில் திருமதி நாகரஞ்சினி ஐங்கரன் அவகள் உரையாற்றும்போது- Read more

வலி மேற்கு பிரதேசசபை தவிசாளரின் பஜனைப் பாடசாலைத் திட்டம்-

01.08.2014 வெள்ளிக்கிழமை அன்று வலி மேற்கு பிரதேச சபைத் தவிசாளார் திருமதி நாகரஞ்சினி ஐங்கரன் அவர்களால் முன்னெடுக்கப்பட்டு வரும் பஜனைப் பாடசாலைத் திட்டம் வட்டுக்கோட்டை கண்ணகாம்பா சமேத கண்ணலிங்கேஸ்வரர் ஆலயத்தில் (கண்ணகை அம்மன் ஆலயத்தில்) ஆரம்பித்து வைக்கப்பட்டது. இவ் நிகழ்வில் மேற்படி ஆலய பரிபாலன சபைத் தலைவரும் சமூக சேவகருமான கலக் விஸ்வநாதன் தலைமையில் இடம்பெற்றது. இவ் நிகழ்வில் உரையாற்றும்போது, பிரதேச சபைத் தவிசாளரது சேவையைப்பாராட்டிய ஆலய பரிபாலன சபைத் தலைவர் பிரதேச சபைத் தவிசாளரது முயற்சியால் நாம் பல நன்மைகளை பெற்றுள்ளதாகவும் இதேவேளை தவிசாளர் தனது 6 மாத மாதாந்த கொடுப்பனவின் வாயிலாக ஆலய பூசகரது இல்லத்தினை புனரமைத்து வழங்கியமையையும் இவ் இடத்தில் குறிப்பிட்டு பாராட்டினார். இவ் நிகழ்வினைத் தொடர்ந்து வலி மேற்கு பிரதேச சபைத் தவிசாளார் திருமதி நாகரஞ்சினி ஐங்கரன் அவர்களால் ஆரம்பித்து வைக்கப்பட்டது. இவ் நிகழ்வில் தவிசாளரால் மாணவர்களுக்கு சுவாமி விவேகாணந்தரது நூல்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டது. மேற்படி ஆலயமானது வரலாற்று பெருமைவாய்ந்த ஆலயம் ஆகும் இவ் ஆலயத்தினை மாதா ஆலயம் எனவும் அழைப்பர் இதேவேளை 01.08.2014 அன்று வலி மேற்கு பிரதேச சபைத் தவிசாளார் திருமதி நாகரஞ்சினி ஐங்கரன் அவர்களால் முன்னெடுக்கப்பட்டு வரும் பஜனைப் பாடசாலைத் திட்டம் தொல்புரம் பத்தானைகேணியடி வைரவர் ஆலயத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. இவ் நிகழ்வில் ஆலய பரிபாலன சபையினர் மற்றும் மாணவர்கள் பலரும் கலந்து கொண்டனர். இவ் நிகழ்வில் தவிசாளரால் மாணவர்களுக்கு சுவாமி விவேகானந்தரது நூல்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டது. மேற்படி ஆலயமானது வரலாற்று பெருமைவாய்ந்த ஆலயம் ஆகும் இவ் ஆலயத்தினை அடுத்துள்ள பகுதியில் யானைகள் கட்டப்பட்டு பரிபாலிக்கப்பட்டதாக கூறப்படுகின்றது.