கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சைகள் நாளை ஆரம்பம்-
கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சைகள் நாளை ஆரம்பமாகி எதிர்வரும் 29ம் திகதி வரை நடைபெறவுள்ளன. இதன்படி இதற்கான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கல்வித் திணைக்களம் தெரிவித்துள்ளது. நயினாதீவு, நெடுந்தீவு உள்ளிட்ட நாடு பூராகவுமுள்ள 2020 பரீட்சை மத்திய நிலையங்களில் இந்தப் பரீட்சைகள் இடம்பெறவுள்ளன. இம்முறை கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சைகளுக்காக 2லட்சத்து 96ஆயிரத்து 313 பரீட்சார்த்திகள் தோற்றவுள்ளனர். மேலும் பரீட்சை தொடர்பான மோசடிகள் இடம்பெறின் அது தொடர்பில் 1911 அல்லது பரீட்சைகள் திணைக்களத்தின் 0112 784208 மற்றும் 0112 784537 ஆகிய இலக்கங்களுக்கு தொடர்பு கொண்டு அறியத்தருமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
முதலமைச்சருக்கு அந்த அதிகாரம் இல்லை-
மாகாண சபை பிரதம செயலாளருக்கு உத்தரவிட மக்கள் சேவைகள் ஆணைக்குழுவுக்கே அதிகாரம் உள்ளது எனவும் முதலமைச்சருக்கு இல்லை எனவும் இலங்கை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனால் தனது அடிப்படை உரிமை மீறப்பட்டதாக வட மாகாண பிரதம செயலாளர் விஜயலட்சுமி ரமேஸ் தாக்கல் செய்த மனித உரிமைகள் மனு மீதான விசாரணையின்போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பிரதம நீதியரசர் மொஹான் பீரிஸ், கே. சிறீபவன் மற்றும் ரோஹினி மாரசிங்க ஆகிய மூவரடங்கிய நீதியரசர்கள் முன்னிலையில் இன்றையதினம் இந்த மனு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டிருந்தது.
வவுனியாவில் அடிகாயங்களுடன் இளைஞரின் சடலம் மீட்பு
வவுனியா வைரவப்புளியங்குளம், ஆதிவிநாயகர் ஆலயத்திற்கு அருகாமையில் அமைந்துள்ள வீடொன்றின் மொட்டைமாடியில் இருந்து அடிகாயங்களுடன் இளைஞர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. இன்று அதிகாலையில் குறித்த வீட்டில் வசிப்பவர்கள் பொலீசாருக்கு வழங்கிய தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த வவுனியா பொலீசார் இது தொடர்பிலான விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். தமது வீட்டில் வேலைசெய்யும் மேற்படி நபர் நேற்றிரவு மதுபோதையில் வீதியில் சிலருடன் தகராறில் ஈடுபட்டிருந்ததாகவும், அதற்குப் பின்னர் தமது வீட்டின் மொட்டைமாடியில் வந்து உறங்கியதாகவும் தெரிவித்த அவர்கள், அதிகாலையில் பார்த்தபோது சடலமாக காணப்படுவதாகவும் கூறியுள்ளனர். உயிரிழந்தவர் வத்தளையைச் சேர்ந்த 28வயதுடைய எஸ் சரவணன் என்று விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.
காணாமற்போனோரின் உறவுகள்; இரகசியமாகச் சாட்சியமளிப்பர்-
ஐ.நா விசாரணைக்குழு முன்பாக காணாமற் போனோரின் உறவுகள் இரகசியமாகச் சாட்சியமளிக்கவுள்ளனர். அதற்குரிய ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன என காணாமற் போனோரைத் தேடிக் கண்டறியும் குழுவின் செயலாளர் சுந்தரம் மகேந்திரன் கூறியுள்ளார். இறுதிக் கட்டப்போரில் இடம்பெற்ற சர்வதேச மனிதாபிமான சட்டமீறல்கள், மனித உரிமை மீறல்கள் தொடர்பில் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகத்தால் விசாரணை முன்னெடுக்கப்பட்டுள்ளது. இந்த விசாரணைகள் வெளிநாடுகளில் பல்வேறு நகரங்களில் நேரடியாக இடம்பெற்று சாட்சிகள் திரட்டும் நடவடிக்கை இடம்பெற்று வருகின்றது. அத்துடன் ஸ்கைப் உள்ளிட்ட நவீன தொடர்பு சாதனங்களின் ஊடாகவும் சாட்சியங்கள் பதிவு செய்யப்பட்டு வருகின்றன. அதனடிப்படையில் இலங்கையிலுள்ள காணாமற் போனோரின் உறவுகளும் நவீன தொடர்பு சாதனங்கள் ஊடாக சாட்சியமளிப்பதற்குரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. சாட்சியமளிப்பு இரகசியமாகவே மேற்கொள்ளப்படும். எப்போது சாட்சியமளிப்பு இடம்பெறும் என்பதைப் பற்றி எந்தவொரு பகிரங்க அறிவித்தலும் விடுக்கப்படாது என காணாமற் போனோரைத் தேடிக் கண்டறியும் குழுவின் செயலாளர் சுந்தரம் மகேந்திரன் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
முகமாலை மாணவன்மீது, தாக்குதல்;, சப்ரகமுவ பல்கலையின் பாதுகாப்பு அதிகரிப்பு-
சப்ரகமுவா பல்கலைக்கழகத்தில் கல்வி பயிலும் கிளிநொச்சி மாணவர் ஒருவர் கடுமையாகத் தாக்கப்பட்ட சம்பவத்தை அடுத்து, பல்கலைக்கழகத்தின் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு பல்கலைக்கழக நிர்வாகமும் பொலிஸாரும் இது தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். நேற்று அதிகாலை 2 மணியளவில், மாணவர்கள் விடுதிக்குள் புகுந்த முகமூடி அணிந்த சிலர், இந்த தாக்குதலை நடத்தியுள்ளனர் என்று தெரிவிக்கப்படுகின்றது. கிளிநொச்சி, முகமாலையைச் சேர்ந்த சந்திரகுமார் சுதர்சன் என்ற மாணவனே இவ்வாறு தாக்குதலுக்கு உள்ளாகியிருக்கிறார். இரவு நெடுநேரம் படித்துவிட்டு உறங்கச் சென்றிருந்த அந்த மாணவன் இடையில் கழிப்பறைக்குச் சென்றபோதே தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. முகமூடி அணிந்த ஒரு நபர் தனது வாயைப் பொத்திப் பிடித்திருக்க, மற்றுமொருவர் தன்னைத் தடியொன்றினால் பலமாகத் தலையில் தாக்கியதாகவும் இதனால் தான் மயங்கி விழுந்துவிட்டதாகவும் காயமடைந்த மாணவன் தெரிவித்துள்ளார். மயக்கம் தெளிந்தபோது விடுதிக்கு வெளியே பற்றையொன்றில் தான் வீசப்பட்டு கிடந்ததாகவும் கழுத்தில் கயிறு ஒன்று இறுக்கப்பட்டிருந்ததாகவும் அந்த வேதனையோடு விடுதிக்குச் சென்றபோது சக மாணவர்கள் தன்னை வைத்தியசாலையில் சேர்த்ததாகவும் அவர் கூறியுள்ளார். காயமடைந்த மாணவர் தற்போது பலாங்கொடை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார். சபரகமுவ பல்கலைக்கழகத்தில் முதலாம் வருடத்தில் கல்வி பயிலும் தமிழ் மற்றும் முஸ்லிம் மாணவர்களை அங்கிருந்து வெளியேறுமாறு கொச்சைத் தமிழில் கொலை அச்சுறுத்தல் விடுத்து கடந்த மாதம் 20ஆம் திகதி மாணவர்களின் கழிப்பறையில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்தன. இதனையடுத்து அதேபோன்ற சுவரொட்டிகள் ஞாயிறன்று மீண்டும் ஒட்டப்பட்டிருந்ததாகவும் அந்த கழிப்பறையில் வைத்தே மேற்படி மாணவன் தாக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இச் சம்பவத்தையடுத்து, சபரகமுவ பல்கலைக்கழக பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு பல்கலைக்கழக நிர்வாகமும், காவல்துறையினரும் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.