காணாமற்போனோர் தொடர்பில் மேலும் 6 மாதங்கள் விசாரணை-

காணாமற்போனோர் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணைக் காலம் மேலும் 6 மாதங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளது. இதன்படி 2015ஆம் ஆண்டு பெப்ரவரி 15ஆம் திகதிவரை இவ் ஆணைக்குழு செயற்படவுள்ளது. இந்த ஆணைக்குழுவை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ 2013ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் நியமித்திருந்தார். இவ்ஆணைக்குழுவின் காலம் கடந்த பெப்ரவரி மாதத்துடன் நிறைவடைந்த நிலையில், இம் மாதம்வரை ஆணைக்குழுவின் காலத்தை ஜனாதிபதி நீடித்தார். இந்நிலையில் இந்த ஆணைக்குழுவுக்கு சட்ட ஆலோசனைகளை வழங்குவதற்காக மூவர் அடங்கிய விசேட குழுவை ஜனாதிபதி நியமித்துள்ளார். இந்நிலையில் காணாமற்போனோர் தொடர்பான முறைப்பாடுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவின் காலம் மேலும் 6 மாதங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளது. மெக்ஸ்வெல் பரணகம தலைமையில் மூவரடங்கிய குழு காணாமற்போனோர் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டுள்ளது.

செப்டெம்பர் 20ல் ஊவா மாகாண சபைத் தேர்தல்-

ஊவா மாகாண சபைத் தேர்தல் செப்டெம்பர் 20ஆம் திகதி நடைபெறவுள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய அறிவித்துள்ளார். ஊவா மாகாண சபை தேர்தலுக்காக வேட்புமனு தாக்கல் செய்யும் நடவடிக்கை இன்று நண்பகல் 12 மணியுடன் நிறைவடைந்ததை அடுத்து தேர்தல்கள் ஆணையாளர் தேர்தல் நடைபெறவுள்ள திகதியை அறிவித்துள்ளார் பதுளை மற்றும் மொனராகலை மாவட்ட செயலகங்களில் இன்றும் பல அரசியல் கட்சிகளும் சுயேட்சைக் குழுக்களும் வேட்புமனுக்களை தாக்கல் செய்தன. ஊவா மாகாண சபைக்கு 32 உறுப்பினர்களை தெரிவு செய்வதற்கான தேர்தல் செப்டெம்பர் 20 ஆம் திகதி நடைபெறவுள்ளது. பதுளை மாவட்டத்தில் இருந்து 18 உறுப்பினர்களும் மொனராகலை மாவட்டத்தில் இருந்து 14 உறுப்பினர்களும் ஊவா மாகாண சபைக்கு தெரிவு செய்யப்படவுள்ளனர். ஊவா மாகாண சபைத் தேர்தலில் வாக்களிப்பதற்கு 9,42,730 வாக்காளர்கள் தகுதி பெற்றுள்ளனர்.

ராம் மாதவோ பாதுகாப்புச் செயலர் சந்திப்பு-

பாரதிய ஜனதா கட்சியின் பொதுச்செயலர் ராம் மாதவோ, பாதுகாப்பு செயலர் கோத்தபாய ராஜபக்ஷவை சந்தித்து இருதரப்பு நல்லுறவு குறித்து பேசியதாக கூறப்படுகிறது. பாதுகாப்புத்துறை இணையதளத்தில் தமிழக முதல்வர் ஜெயலலிதா, பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக மீனவர்கள் பிரச்சனை குறித்து எழுதும் கடிதங்களை கொச்சைப்படுத்தி கட்டுரை எழுதப்பட்டிருந்தது. இதற்கு ஒட்டுமொத்த தமிழக அரசியல் கட்சிகளுமே கடும் கண்டனம் தெரிவித்திருந்தன. தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக போராட்டங்கள் நடைபெற்றும் வருகின்றன. இப்படியான நிலையில் பாரதிய ஜனதா கட்சியின் பொதுச்செயலர் ராம் மாதவ், அதே பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவை நேரில் சந்தித்து இருதரப்பு நல்லுறவு குறித்து ஆலோசனை நடத்தியுள்ளதாக ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பொதுக்கூட்டங்களில் அவதானமாக செயற்படுமாறு வெளிவிவகார அமைச்சு கோரிக்கை-

பொதுக்கூட்டங்களில் பங்கேற்கும்போது அவதானமாக செயற்படுமாறு வெளிவிவகார அமைச்சு கோரிக்கை விடுத்துள்ளது. வெளிவிவகார அமைச்சின் அறிக்கை ஒன்றில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அண்மையில் மருதானையில் காணாமல் போனோரின் உறவினர்கள் ஒழுங்கு செய்திருந்த கூட்டம் ஒன்றின் போது, சில பௌத்த பிக்குகள் அத்துமீறி பிரவேசித்து குழப்பத்தை விளைவித்திருந்தனர். இது தொடர்பிலேயே இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இவ்வாறான சம்பவங்கள் நாட்டில் ஒற்றுமையை சீர்குழைக்கும் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவத்துக்கு கடும் கண்டனத்தை தெரிவித்துள்ள அமெரிக்கா, பிரான்ஸ், ஜேர்மன், பிரித்தானியா மற்றும் சுவிட்சர்லாந்து போன்ற நாடுகள், இலங்கையின் ஒன்று கூடல் மற்றும் கருத்து சுதந்திரத்தை பாதுகாக்குமாறு அரசாங்கத்தை கோரியிருந்தது.

போர்க் குற்ற விசாரணை ஆரம்பம்-

இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் போர்க்குற்றம் தொடர்பான ஐ.நா மனித உரிமைகள் ஆணைக்குழுவின் விசேட குழு தனது விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. இவ் விசாரணைக் குழுவுக்கு தகவல் மற்றும் ஆதாரங்கள் வைத்திருப்பவர்கள் அக்டோபர் மாதத்திற்குள் சமர்ப்பிக்க வேண்டும் என ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையம் கேட்டுக்கொண்டுள்ளது. இது தொடர்பாக மனித உரிமைகள் ஆணையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், கடந்த 2002 பெப்ரவரி 21ஆம் திகதிமுதல் 2011 நவம்பர் 15 ஆம் திகதிவரை இலங்கையில் நடைபெற்ற போர்க் குற்றங்கள், மனித உரிமை மீறல்கள் தொடர்பான தகவல்களை தெரிவிக்கலாம் எனக் கூறப்பட்டுள்ளது. தகவல்களை வரும் அக்டோபர் 30ஆம் திகதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. அவ்வாறு கிடைக்கும் தகவல்களை விசாரணைக்கு குழு தனது அறிக்கையை அளிப்பதற்கு முன்பு ஆய்வு செய்யும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆவணங்களை அளிப்பவர்கள், தங்களை தொடர்பு கொள்வதற்கான மின்னஞ்சல், தொலைபேசி உள்ளிட்ட தகவல்களை சேர்த்து அனுப்புமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. தகவல்களை ஆங்கிலம், சிங்களம், தமிழ் ஆகிய 3 மொழிகளிலும் அனுப்பலாம் என்றும், 10 பக்கங்களுக்கு அதிகம் இல்லாது அனுப்ப வேண்டும் என்றும் செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

பாகிஸ்தான் பிரஜைகள் நாடு கடத்தல்-

இலங்கையில் சட்டவிரோதமாக தங்கியிருந்த பாகிஸ்தான் பிரஜைகள் 36பேர் கடந்த முதலாம் திகதி தொடக்கம் நாடு கடத்தப்பட்டு வருகின்றனர். ஐ.நா சபையின் அகதிகள் பேரவை இவ் விடயம் குறித்து கவலை வெளியிட்டுள்ளது. இவ்வாறு நாடு கடத்தப்பட்டவர்களில் பல பெண்களும் சிறுவர்களும் அடங்குவதாக கூறப்பட்டுள்ளது. சட்டவிரோதமாக இலங்கையில் தங்கியிருக்கும் பாகிஸ்தான் பிரஜைகளை கைது செய்வதற்கான விசாரணைகளை குடிவரவு குடியகல்வு திணைக்களம் மேற்கொண்டிருந்தது. இந்நிலையில் கைதானோரை நாடுகடத்தும் நடவடிக்கையை அரசு முன்னெடுத்தது. எனினும் இந்நடவடிக்கை குறித்து ஐ.நா சபை அகதிகள் பேரவை கவலை வெளியிட்டுள்ளது. எவ்வாறாயினும் கைது செய்யப்பட்டவர்களை நாடு கடத்துவதற்கான உதவிகளை ஐக்கிய நாடுகள் சபை அகதிகள் பேரவை மேற்கொள்ள தவறி விட்டதாக இலங்கை அரசாங்கம் குற்றஞ்சுமத்தியுள்ளது. இதேவேளை பாகிஸ்தான் பிரஜைகள் 205 பேர், ஆப்கானிஸ்தான் மற்றும் ஈரான் அகதிகளும் கைதுசெய்யப்பட்டு இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகள் பேரவை கூறியுள்ளது.

சிங்கள மாணவர்கள் மத்தியில் பேசி நல்லுறவை நிலைநாட்டுவதாக அமைச்சர் வாசுதேவ கலாநிதி குமரகுரபரன் அவர்களிடம் உறுதியளிப்பு-

அமைச்சர் வாசுதேவ நாணயக்கார சப்ரகமுவ பல்கலைக்கழகத்திற்க்கு சென்று சிங்கள மாணவர்களுடன் இந்த நாட்டில் பல்லின சகவழ்வின் தேவை, சகோதரத்துவம் பற்றி பேசுவேன் நல்லுறவை நிலைநாட்டுவேன் என தன்னிடம் உறுதியளித்ததாக ஜனநாயக தேசிய முன்னணி தலைவர் கலாநிதி குமரகுரபரன் ஊடகங்களுக்கு தெரிவித்தார். அப்பாவி தமிழ் சப்ரகமுவ பல்கலைக் கழக முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு புலி முத்திரை குத்த முனைய முயலும் சக்திகளுக்கு இடமளிக்க வேண்டாம்- அமைச்சர் வாசுதேவவிடம் குமரகுருபரன் கோரிக்கை.

புனர்வாழ்வு பெற்றவர்களும் க.பொ.த உயர்தரம் எழுதினார்கள் அவர்களும் பல்கலைக்கழகம் வந்தால் மீண்டும் புலி என் குற்றம் சுமத்தலாமா? மரத்தால் விழுந்தவனை மாடேறி மிதிச்சதாக அன்றோ இருக்கும். எதிர்கால நல்லெண்ணம் கருதி அமைச்சர் வாசுதேவ நாணயக்கார சப்ரகமுவ பல்கலைக்கழகத்திற்க்கு சென்று சிங்கள மாணவர்களுடன் பல்லின சகவழ்வின் தேவை, சகோதரத்துவம் பற்றி உரையாடி சிங்கள தமிழ் மாணவர்களிடையே நல்லுறவை ஏற்படுத்த வேண்டும் என நான் விடுத்த கோரிக்கையை புரிந்து கொண்டு அமைச்சர் ஏற்றுக்கொண்டமை மகிழ்ச்சியளிக்கின்றது – கலாநிதி குமரகுருபரன், தலைவர் ஜனநாயக தேசிய முன்னணி. 

இன்றும் அவர் தனது செயலாளர் மற்றும் இணைப்பு செயலாளர் கலாநிதி மோகன்சிதம்பரம் ஆகியோரை அனுப்பி தமிழ் மாணவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த நடவடிக்கை எடுத்திருந்தார் தனது இணைப்பு செயலாளர் கலாநிதி மோகன் சிதம்பரம் அவர்களுடன் ஒரு சட்டதரணியையும் பல்கலைகழகத்திற்றுக்கு அனுப்பி தமிழ் மாணவர்களின் நலனையும் நல்லுறவையும் கவனித்துவருவதாகத் அமைச்சர் வாசுதேவ தெரிவித்தார். அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தானும் சென்று சிங்கள மாணவர்கள் மத்தியில் பேசுவேன் நல்லுறவை நிலைநாட்டுவேன் என தன்னிடம் உறுதியளித்ததாக கலாநிதி குமாரகுரபரன் ஊடகங்களுக்கு தெரிவித்தார். இது ஒரு புறமிருக்க உடனடியாக தமிழ் மாணவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த உயர் கல்வி அமைச்சர் எஸ்.பி திசாநாயக்க நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். பல்கலை கழகத்தில் இனவாததிற்கு இடமளிக்ககூடாது ஜனநாயக தேசிய முன்னணி தலைவர் கலாநிதி குமாரகுருபரன் வேண்டுகோள் விடுத்தார். சப்ரகமுவ பல்கலைக்கழகத்தின் மாணவர் விடுதிக்குள் நேற்று அதிகாலை பிரவேசித்த சிலர் சமூக விஞ்ஞானம் மற்றும் மொழியியல் பீடத்தின் முதலாம் ஆண்டு மாணவர் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். யாழ்ப்பாணம், முகமாலை பிரதேசத்தை சேர்ந்த சந்திரகுமார் சுதர்ஷன் என்ற மாணவரே சம்பவத்தில் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளார். தாக்குதல் நடத்தியவர்கள் விடுதியின் கழிவறையில் இனவாத ரீதியான வாசகங்கள் சிலவற்றை எழுதி வைத்து விட்டுச் சென்றுள்ளனர். இப்படியான நிலைமைகள் எதிர்காலத்தில் ஏற்படாதவாறு ஜனாதிபதியும் உயர்கல்வி அமைச்சர் எஸ் பி திசநாயக்கவும் மாணவர்களுடன் பேச வேண்டும் பல்கலை கழகத்தில் இனவாததிற்கு இடமளிக்ககூடாது எனவும் ஜனநாயக தேசிய முன்னணி தலைவர் கலாநிதி குமரகுருபரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்