மன்னாரில் காணாமல் போனோர் தொடர்பான விசாரணை-
காணாமல் போனோர் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் ஆறாவது அமர்வு நாளையதினம் மன்னாரில் ஆரம்பிக்கப்படவுள்ளது. நாளை முதல் எதிர்வரும் 11ஆம் திகதி வரையில் இந்த அமர்வு நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, நாளையும் நாளை மறுதினமும் மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் விசாரணைகள் இடம்பெறவுள்ளன. ஓகஸ்ட் மாதம் 10ஆம் திகதி மன்னார் பிரதேச செயலாளர் பிரிவிலும், 11ஆம் திகதி மடு பிரதேச செயலாளர் பிரிவிலும் விசாரணைகள் இடம்பெறவுள்ளதாக ஆணைக்குழு தெரிவித்துள்ளது. ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கு இதுவரையில் 19 ஆயிரத்து 284 காணாமல் போனோர் தொடர்பான முறைபாடுகள் கிடைக்கப்பெற்றிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் பாகிஸ்தான் விஜயம்-
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ பாகிஸ்தானுக்கான விஜயம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளார். வெளிவிவகார அமைச்சின் அறிக்கை ஒன்றில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது பாகிஸ்தானில் உள்ள இலங்கையின் வெளிவிவகார செயலாளர் ஷேனுகா டி செனேவிரட்ன அங்கு பல்வேறு சந்திப்புகளை மேற்கொண்டிருந்தார். இது தொடர்பில் பாகிஸ்தான் மற்றும் இலங்கை வெளிவிவகார அமைச்சுக்கள் வெளியிட்டுள்ள கூட்டறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி இந்த மாதத்தின் இறுதிப் பகுதியில் ஜனாதிபதி பாகிஸ்தானுக்கான விஜயத்தை மேற்கொள்வார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அகதிகளை நாடுகடத்த 3 மில்லியன் டொலர் செலவு-
இலங்கை உள்ளிட்ட நாடுகளின் அகதிகளை நாடுகடத்துவதற்காக, அவுஸ்திரேலியாவின் ரொனி எபட் அரசாங்கம் 3 மில்லியன் டொலர்களை செலவிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஆஸி குடிவரவுத் திணைக்களத்தின் ஆவணங்களை மேற்கோள்காட்டி இச்செய்தி வெளியிடப்பட்டுள்ளது. தங்களின் சுய விருப்பத்தின் அடிப்படையில் அவுஸ்திரேலியாவிலிருந்து வெளியேற தீர்மானித்த அகதிகளுக்கே இந்த தொகை வழங்கப்பட்டுள்ளது. அத்துடன் இந்த ஆவணத்தின்படி, கடந்த வருடம் செப்டம்பர் மாதம்முதல் கடந்த ஜுலைவரையில் ஆயிரத்து 151 அகதிகள் அவுஸ்திரேலியாவிலிருந்து நாடுகடத்தப்பட்டுள்ளனர். இதறகிடையில் அவுஸ்திரேலியாவின் எல்லை பாதுகாப்பு ஆணையாளர் மைக்கேல் நூனன் இலங்கைக்கு விஜயம் செய்துள்ளார். அவர் இலங்கையில் பல்வேறு தரப்பினரை சந்தித்து, அகதிகளின் இடப்பெயர்வை தடுப்பதற்கான வழிமுறைகள் தொடர்பில் ஆராய்ந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தபால் கட்டணங்கள் திருத்தியமைப்பு-
திருத்தப்பட்ட தபால் கட்டணங்கள் இன்றையதினம் முதல் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது. ஆகஸ்ட் முதலாம் திகதிமுதல் நடைமுறைப்படுத்தப்படும் வகையில் அரசாங்கத்தினால் தபால் கட்டணங்கள் திருத்தியமைக்கப்பட்டன. எனினும் குறித்த கட்டணத் திருத்தம் தொடர்பில் மக்களுக்கு அறியப்படுத்தும் நோக்கில் ஒரு வாரகாலம் அதனை பிற்போட்டதாக தபால் மா அதிபர் ரோஹன அபேரத்ன குறிப்பிட்டுள்ளார். இதன்படி சாதாரண கடிதங்களுக்கான கட்டணம் ஐந்து ரூபாயில் இருந்து 10 ரூபாவாக உயர்த்தப்பட்டுள்ளது. மேலும் தபால் அட்டைகளுக்கான விலை எட்டு ரூபா வரை அதிகரிக்கப்பட்டுள்ளது.
மொனராகலை பலத்த காற்றில் 26 வீடுகள் சேதம்-
மொனராகலை மாவட்டத்தின் பல பகுதிகளை ஊடறுத்து வீசிய பலத்த காற்றின் காரணமாக சுமார் 26 வீடுகளுக்கு சேதம் ஏற்பட்டுள்ளது. மொனராகலை சிரிகல கீழ்ப்பிரிவு குடியிருப்பின் 26 வீடுகளுக்கு நேற்றையதினம் வீசிய பலத்த காற்றினால் சேதம் ஏற்பட்டுள்ளது. மொனராகலை மஹாநாம தேசிய பாடசாலையின்மீது மரங்கள் முறிந்து வீழ்ந்துள்ளமையால், பாடசாலையில் இயங்கும் உயர்தர பரீட்சை மத்திய நிலையங்களுக்கு பாதிப்பு ஏற்பட்டது. மின்கம்பங்கள் மற்றும் தொலைத்தொடர்பு கம்பங்களின்மீது மரம் முறிந்து வீழ்ந்து அவற்றுக்கு சேதம் ஏற்பட்டதுடன், தற்போது வழமை நிலைக்கு திரும்பியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவால் விசாரணைகளை எடுக்க முடியாது-இராணுவப் பேச்சாளர்-
இலங்கையின் இறுதிப் போரின்போது இடம்பெற்றதாகக் கூறப்படும் போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் குறித்து பாதுகாப்பு செயலர் கோட்டாபய ராஜபக்சவுக்கு எதிராக வழக்குத் தொடர அமெரிக்காவால் முடியாதென இராணுவப் பேச்சாளர் ருவன் வணிகசூரிய நேற்றுத் தெரிவித்துள்ளார். ஒரு நபரை கைதுசெய்ய அல்லது விசாரணைக்குட்படுத்த வேண்டுமெனில் விசாரணை செய்யும் தரப்பிடம் அந்நபருக்கு எதிரான ஆதாரங்கள் மற்றும் சாட்சியங்கள் இருத்தல் அவசியமாகும். அதைவிடுத்து ஒருநபரை எவ்வித ஆதாரங்களுமின்றி கைது செய்வதானது சட்டத்திற்குப் புறம்பான காரியமாகும். அதேபோல்தான் இந்த விவகாரமும் காணப்படுகிறது. கோட்டாபாய ராஜபக்சவுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டுமெனில் அவருக்கெதிராக சாட்சியங்களும், ஆதாரங்களும் நிச்சயமாக இருக்க வேண்டும். ஆகவே, அமெரிக்காவால் இவருக்கெதிராக வழக்குத்தொடர முடியாது எனவும் அவர் கூறியுள்ளார்.
வலிமேற்கில் – கலட்டிவீதி புனரமைப்பு, சங்கானையில் புதிய நூலகம், குருபூசை நிகழ்வு-
வலி மேற்கில் மிக நீண்ட காலமாக புனரமைக்கப்படாதிருந்த வட்டுகிழக்கு கலட்டி வீதி வலி மேற்கு பிரதேச சபையின் நிதி 1.5 மில்லியன் ஊடாக புனரமைக்கப்பட்டு வருகின்றது. பெரும்பாலான மாணவர்கள் மக்கள் பயனிக்கும் மிக பிரதான வீதியான இவ்வீதி பல வருடகாலமாக புனரமைக்கப்படாதிருந்து பிரதேச பொதுமக்கள் விடுத்த கோரிக்கைக்கு அமைவாக வீதி புனரமைப்பு வேலைகள் தற்போது ஆரம்பமாகியுள்ளன. இதேவேளை வலி மேற்கு பிரதேச சபையின் புதிய நூலகம் சங்கானை பட்டினசபை வீதியில் துரித கதியில் வேலை நடைபெற்று வருகின்றது. வலி மேற்கு பிரதேச சபை 4 உப அலுவலகங்களை உள்ளடக்கியது. இவ் உப அலுவலகப்பகுதிகளில் ஒன்றாக உள்ளதே சங்கானைப் பகுதியாகும். இப்பகுதியில் இயங்கும் பிரதேச சபையின் நூலகமானது தற்காலிகமான வீடு ஒன்றிலேயே பாதுகாப்பு மிக குறைவான நிலையில் இயங்கி வருகிறறது. இவ்விடயம் தொடர்பில் பொதுமக்களும் நலன் விரும்பிகளும் தொடர்ச்சியாக விடுத்த வேண்டுகோளினால் தற்போது ஏறத்தாழ 3.5 மில்லியன் ரூபா செலவில் இவ் நூலகத்திற்கான இரண்டாம்கட்ட பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்து சமய கலாச்சார அலுவல்கள் திணைக்களம் சித்தன்கேணி சிவசிதம்பரேஸ்வரர் ஆலயத்தில் 07.08.2014 அன்று மாலை 2.00 மணிக்கு சுந்தரழூர்த்தி நாயனார் குருபூசை நிகழ்வு சங்கானை பிரதேச செயலர் திரு. அ.சோதிநாதன் தலைமையில் நடைபெறவுள்ளது. இவ் நிகழ்வில் சித்தன்கேணி சிவசிதம்பரேஸ்வரர் ஆலய பிரதம குரு சிவஸ்ரீ.சபா.வாசுதேவக்குருக்கள் ஆசியுரையினை வழங்கவுள்ளார். இவ் நிகழவில் பிரதம விருந்தினராக கலாநிதி. ஆறுதிருமுருகன் அவர்களும் சிறப்பு விருந்தினர்களாக சண்டிலிப்பாய் பிரதேச செயலக சமூகசேவைகள் உத்தியோகஸ்தர் திரு.வே.சிவராஜா, கிராமசேவகர் திரு.சர்வாணந்தன் மற்றும் ஆலய பரிபாலன சபைத்தலைவர் திரு இ.இராஜ்குமார் என்போர்கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.
சாட்சியமளிக்கும் விபரங்களை வெளியிட்டது ஐ.நா-
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் விசாரணைக்குழுவில் போரின் போது இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பாக தமிழ், மற்றும் சிங்கள மொழியிலும் சாட்சியமளிக்கலாம் என ஐ.நா சபை தெரிவித்துள்ளது. குற்றச்செயல் இடம்பெற்ற 21.02.2002 முதல் 15.11.2011 வரை (அதனோடு தொடர்புடைய நிகழ்வுகள் அல்லது அதன் தொடர்ச்சி அதற்கு பின்னர் நடைபெற்றாலும் அது தொடர்பாகவும் முறைப்பாடுகள்) தெரிவிக்கலாம். முறைப்பாடுகள் ஒக்ரோபர் மாதம் 30 ஆம் திகதிக்கு முன்னர் அனுப்பப்படவேண்டும்.
மின்னஞ்சல் மூலம் அனுப்ப: OISL_submissions@ohchr.org அஞ்சல் மூலம் அனுப்ப, OISL UNOG-OHCHR 8-14 Rue de la Paix CH-1211 Geneva 10 Switzerland
முறைப்பாடுகள் அனைத்தும் 10 பக்கங்களுக்கு உட்பட்டதாக இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. காணொளிகள், நிழற்படங்கள், ஒலிப்பதிவுகள் போன்ற வடிவில் ஆதாரங்களை அனுப்பி வைக்க விரும்புபவர்கள் முதலில் மின்னஞ்சல் மூலம் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் செயலகத்துடன் தொடர்பை ஏற்படுத்த வேண்டும் என்றும், அதன் பின்னர் சம்பந்தப்பட்ட ஆதாரங்களை உரியவர்கள் அனுப்புவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படும் என்றும் ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளரின் செயலகம் அறிவித்துள்ளது. மேலும் விவரங்களுக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பில் காணலாம் :OHCHR Investigation on Sri Lanka http://www.ohchr.org/EN/HRBodies/HRC/Pages/OISL.aspx