உயர் நீதிமன்ற தீர்ப்பு, மாகாண சபைக்கு மிகப்பெரிய பின்னடைவை கொடுத்திருக்கிறது -“புளொட்” தலைவர் த.சித்தார்தன் (சிறப்புப் பேட்டி) 
1புலம்பெயர் தமிழ்ச் சமூகம் ஈழத் தமிழர்களின் வாழ்வாதாரப் பிரச்சினை மற்றும் அரசியல் தீர்வு விடயத்தில் மிகவும் அக்கறையுடனும், விரைவான நடவடிக்கைகளை மும்முரமாக மேற்கொண்டும் வருவதையும்  என்னால் அவதானிக்கக்கூடியதாக இருந்தது. எல்லாப் பக்கங்களினாலும் பாதிக்கப்பட்டு நலிவடைந்திருக்கும் மக்களினுடைய வாழ்வாதாரத்தை உயர்த்துவதற்கும் அழிக்கப்பட்டிருக்கும் தமிழரின் பூர்வீகத்தை கட்டியெழுப்பவும் அவர்கள்  ஆர்வமாக இருக்கிறார்கள். ஆனால் அந்த வேலைத்திட்டங்களை எவ்வாறு – எதனூடாக செய்வது என்ற குழப்பத்தில் இருக்கும் அதேவேளை, இலங்கையில் தங்களுடைய உதவிகள் வந்து சேர்ந்து அது தமிழரின் நலனுக்கு பயன்படக்கூடியவாறான கட்டுமஸ்தானத்தை  உருவாக்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொண்டதாகத் தெரிவித்தார் புளொட் தலைவர் சித்தார்த்தன்.
 
ஐரோப்பிய நாடுகளுக்குச் சென்று அங்குள்ள புலம்பெயர் தமிழர்களுடன் சந்திப்புகளை நடத்திவிட்டு நாடு  திரும்பிய பின்னர் ஞாயிறு தினக்குரலுக்கு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
 
மேலும் அண்மையில் வடமாகாண முதலமைச்சர் மற்றும் பிரதம செயலாளர் தொடர்பில் உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு அரசியல் ரீதியாக மாகாண சபைக்கு மிகப் பெரியதொரு பின்னடவை கொடுத்திருக்கிறது. எனவே, கசப்புணர்வுகள், பகைமையுணர்வுகள் மறந்து சபையும் அதிகாரிகளும் ஒன்றிணைந்து நலிவடைந்து எல்லா விதத்திலும் பாதிக்கப்பட்டிருக்கும் மக்களுக்கு சேவையாற்ற முன்வரவேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்தார்.
 
அவருடனான நேர்காணல் வருமாறு;..
 
கேள்வி- உங்களுடைய ஐரோப்பிய நாட்டு விஜயத்தின் போது நீங்கள் சந்தித்த புலம்பெயர் சமூகத்தினர் ஈழத்தமிழர் தொடர்பிலும் அரசியல் தீர்வு தொடர்பிலும் எவ்வாறான அக்கறையை கொண்டிருக்கிறார்கள்?
பதில்-வடக்கில் வாழும் மக்களின் அடிப்படை வாழ்வாதாரப் பிரச்சினைகள் விடயத்தில் புலம்பெயர் மக்கள் பெரிதளவில் அக்கறை எடுத்து என்னுடன் பேசியிருந்தார்கள். அதற்கு நானும் தெளிவான பதில்களை வழங்கி ஆலோசனை நடத்தியிருந்தேன்.
 
இலங்கை அரசாங்கம் எக்காலத்திலும்  எங்களுடைய மக்களுக்கு வாழ்வாதார உதவிகளை வழங்கவோ, தமிழ் மக்களுடைய பிரச்சினைகளுக்கு நியாயமான தீர்வொன்றை காண எத்தனிக்காது என்பதை நாம் மாகாண சபைத் தேர்தலுக்கு முன்பிருந்தே கூறிவருவதுடன்,–இதனை தேர்தல் வேளையிலும் கூறியே போட்டியிட்டோம் என்பதை மிகத் தெளிவாக புலம் பெயர் தமிழர்களுக்கு கூறினேன்.
 
புலம் பெயர் தமிழர்கள் எங்களுடைய மக்களின் வாழ்வாதாரப் பிரச்சினைகளுக்கு தீர்வைக் காணுவதற்கு தயாராகவே இருக்கிறார்கள். ஆனால், அந்த உதவிகளை எவ்வாறு செய்வது என்ற குழப்பத்தில் இருக்கிறார்கள்.
 
எனவே, புலம்பெயர் தமிழர்கள் உதவிகளை வழங்குவதற்கான கட்டுமஸ்தானத்தை இலங்கையில் உருவாக்கினால் தான் தங்களால் வேண்டிய வாழ்வாதார உதவிகளை வழங்கலாம் என்ற கருத்தை முன்வைத்தார்கள். இது தொடர்பில் கூட்டமைப்பின் தலைவருக்கும் மற்றும் ஏனையோருக்கும்  கூறியிருக்கிறேன்.
 
மேலும், இதற்கான நடவடிக்கைகள் ஏற்கனவே மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கூட்டமைப்பின் தலைவர் மற்றும் வடமாகாண முதலமைச்சரின் முயற்சியில் மிகப்  பெரிய அளவில்- சர்வதேச அளவில் நன்மதிப்பைப் பெற்றவர்களைக் கொண்டு பெரியளவிலான நிதியம் ஒன்று ஆரம்பிக்கப்படவேண்டும் என்ற முயற்சி ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
 
எனவே, இவ்வாறானதொரு நிதியம் உருவாகினால் அந்நிதியத்தினூடாக உதவிகளை வழங்குவதற்கு புலம்பெயர் தமிழர்கள் தயாராக இருக்கிறார்கள்.
கேள்வி- இன்றைய சூழ்நிலையில் இவ்வாறானதொரு நிதியத்தை ஆரம்பிக்கக்கூடிய சாத்தியங்கள் இருக்கின்றனவா?
பதில்-அதுவொரு கஷ்டமான விடயம்தான். இவ்வாறானதொரு நிதியத்தை நாம் தொடங்குவோமானால் அதனை தடுத்து நிறுத்துவதற்கான முயற்சிகளை அரசாங்கம் நிச்சியமாக எடுக்கும்.
 
இருந்தாலும் பல விடயங்களிலும் பாதிக்கப்பட்டு நலிவடைந்திருக்கும் எங்களுடைய மக்களின் வாழ்வை கட்டியெழுப்புவதற்கான தேவை பெருமளவில் காணப்படும் நிலையில் இவ்வாறானதொரு நிதியம் உருவாவதற்கான முயற்சிகளை நாம் எடுக்கவேண்டும். சட்டரீதியாக இவ்வாறான முயற்சிகளை நாம் எடுக்கும்போது அதனை தடுத்துவிடாது அனுமதிக்கவேண்டிய நிலைமைக்கு சிலவேளைகளில் அரசு தள்ளப்படலாம். எனவே, இதனை  உருவாக்க வேண்டியது எங்களுடைய கடமை.
கேள்வி- ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் இலங்கைக்கு எதிரான விசாரணைகள் தொடங்கியிருக்கும் சூழ்நிலையில் புலம் பெயர் தமிழர்கள் எவ்வாறான நிலைப்பாட்டைக் கொண்டிருக்கிறார்கள்?
பதில்- உண்மையில் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிரான தீர்மானத்தைக் கொண்டுவருவதில் புலம்பெயர் தமிழர்கள்தான் முக்கிய காரணமாக இருந்துள்ளார்கள். இவர்கள் மிகுந்த அர்ப்பணிப்புடன் செயற்பட்டு இவ்வாறானதொரு விசாரணையைக்  கொண்டுவருவதற்காக ஒவ்வொரு நாடுகளினூடாக செயற்பட்டிருந்தார்கள்.
 
இந்நிலையில், இலங்கையில் விசாரணைகளை நடத்தமுடியாது என்ற தங்களுடைய நிலைப்பாட்டை அரசாங்கம் தெரிவித்திருக்கும் நிலையில், சர்வதேச நாடுகளில்தான் விசாரணைகளை நடத்தவேண்டிய நிலைமை தோன்றியுள்ளது.
 
இவ்விசாரணை தொடர்பில் புலம்பெயர் மக்களுடன் கலந்துரையாடியபோது; 2009 இறுதி யுத்தத்துக்குப் பின்னர் வெளிநாடுகளுக்கு இலங்கையிலிருந்து புலம்பெயர்ந்தவர்களை இவ்விசாரணையில் பயன்படுத்துவதற்காக அவர்களை  கண்டறியும் வேலைகளில் ஈடுபட்டுள்ளதாகவும், அங்கிருந்துகொண்டே இலங்கையிலுள்ள பாதிக்கப்பட்டவர்களை எவ்வாறு விசாரணை செய்யலாம் என்பது பற்றி பரிசீலித்துவருவதாகவும் கூறினார்கள்.
 
புலம்பெயர் தமிழர்கள் மனித உரிமைகள் பேரவையின் விசாரணைக்கான ஆயத்தங்களில் மும்முரமாக ஈடுபட்டு வருவதை என்னால் உணரமுடிந்தது.
கேள்வி- மத்திய அரசாங்கத்துக்கும் வடமாகாண சபைக்குமிடையிலான முறுகல் நிலைமை சமீபகாலமாக தீவிரமான போக்கில் சென்று கொண்டிருப்பதை காணக்கூடியதாக இருக்கிறது. இது தொடர்பில்…
பதில்- வடமாகாண சபையை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கைப்பற்றிய  நாளிலிருந்து இன்றுவரை மத்திய அரசாங்கம் ஏதோவொரு வகையில் தொடர்ந்தும் முரண்பாடான வகையிலேயே செயற்பட்டு வருகிறது. இது எமக்கு புதிய விடயமல்ல. அண்மையில் பிரதம செயலாளர் விடயத்தில் உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு அரசியல் ரீதியாக மாகாண சபைக்கு மிகப்பெரியதொரு பின்னடைவைக் கொடுத்திருக்கிறது.  இத்தீர்ப்பு முதலமைச்சர் பிரதம செயலாளருக்கு கட்டளைகளை இடமுடியாது என்ற நிலைமையை உருவாக்கியது மட்டுமல்லாது, பிரதம செயலாளர் தானாகவே இயங்கக் கூடியவாறான தோற்றப்பாட்டைக் கொடுத்திருக்கிறது.
 
இந்த விதமான தோற்றப்பாடு சபைக்கும் அதிகாரிகளுக்குமிடையில் முரண்பாட்டையும் நம்பிக்கையீனத்தையும் உருவாக்கியுள்ளதுடன், மாகாணசபையின் காத்திரமான செயற்பாடுகளுக்கு மேலும் மேலும் பிரச்சினைகளையும் முரண்பாடுகளையுமே  உருவாக்கும் என்றே நான் கருதுகிறேன்.
 
இருப்பினும்,  இந்த மாகாண சபையூடாக இருக்கும் சொற்ப அதிகாரங்களை வைத்துக் கொண்டாவது மக்களுக்கு தேவையான உதவிகளை செய்வதற்காகவே நாம் மாகாண சபைத் தேர்தலில் போட்டியிட்டு இந்தச் சபைக்கு வந்துள்ளோம். எனவே, நாம் அரச அதிகாரிகளுடன் சேர்ந்து மக்களுக்கான சேவைகளை செய்வதற்கு நிதானத்துடன் கூடியதான மனோபாவத்துடன் செயற்பட முயற்சிக்க வேண்டும். ஏனெனில், இச்சபையின் நோக்கம் மக்கள் நலன் சார்ந்ததாகவே இருக்கவேண்டும். இதில் நாம் இருதரப்பினரும் முரண்பட்டுக் கொண்டிருப்போமேயானால் மக்கள்தான் மேலும் மேலும் பாதிப்படைந்து கொண்டு போவார்கள். இதனை கருத்திற்கொண்டு இருதரப்பினரும் ஒன்றிணைந்து மக்கள் சேவையை செய்வதற்கான வேலைத்திட்டங்களை முன்னெடுக்கவேண்டும்.
கேள்வி-இவ்வாறான முறுகல் நிலையை 13 ஆவது திருத்தத்தை முழுமையாக அமுல்செய்வதனூடாக சுமுகமான நிலைமைக்கு கொண்டுவர முடியும் என நீங்கள் கருதுகிறீர்களா?
பதில்-இல்லை என்பதே என்னுடைய கருத்து. 13 ஆவது திருத்தம் கொண்டுவரப்பட்டபோதே, 13 ஆவது திருத்தமோ அல்லது மாகாணசபை முறைமையோ தமிழ் மக்களுடைய அரசியல் அபிலாஷைகளுக்கு ஒரு தீர்வாக அமையாது என்பதை மிகத் தெளிவாக நாங்கள் மாத்திரமல்ல, பல கட்சிகளும் உறுதியாக தெரிவித்திருந்தன. அதே நிலைப்பாட்டில்தான் இன்றும் நாங்கள் இருக்கின்றோம்.
 
எந்தவொரு அதிகாரமுமில்லாத இந்த மாகாண சபை முறைமையினால், மிகப் பெரும் அழிவைக் கண்டிருக்கும் பிரதேசத்தை கட்டியெழுப்புவது- அபிவிருத்தி செய்வது என்பது நடக்கக்கூடியதல்ல.
 
எனவே, நியாயமான அரசியல் தீர்வை நோக்கிச் செல்லவேண்டிய வேலையை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மேற்கொள்ளும் அதேநேரம், மாகாண சபை, இருக்கக்கூடிய அதிகாரங்களின் கீழ் மக்களுடைய வாழ்வாதாரங்களை உயர்த்துவதற்கான முயற்சிகளை மேற்கொள்ளவேண்டும்.
 
இரு தரப்பினரும் தனித்தனியே இவ்விரு விடயங்களையும் முன்னெடுத்துச் செல்லவேண்டும். அவ்வாறு சென்றால்தான் நிரந்தரமான-நியாயமான தீர்வை நோக்கி நாம் முன்னேறமுடியும்.
 
மேலும்,சகலவற்றையும் இழந்து நலிந்துபோய் இருக்கும் சமுதாயத்தை கட்டியெழுப்பவேண்டிய தேவை இருக்கிறது. அவ்வாறு கட்டியெழுப்பப்படும் ஆரோக்கியமான சமுதாயம்தான் எதிர்காலத்தில் இன விடுதலைக்கான போராட்டத்துக்கு தகுதியான சமுதாயமாக இருக்கமுடியும். இதனை விரைவாகவும் கட்டாயமாகவும் செய்யவேண்டும் என்பதுதான் என்னுடைய தனிப்பட்ட அபிப்பிராயம்.
கேள்வி- காணாமல் போனோர் தொடர்பான ஆணைக்குழுவுக்கு ஆலோசனை வழங்குவதற்காக மூன்று சர்வதேச  நிபுணர்களை நியமித்திருக்கும் அதேவேளை, அதன் பரப்பெல்லைகளையும் ஜனாதிபதி விரிவுபடுத்தியுள்ளார். இது தொடர்பில் உங்களுடைய நிலைப்பாடு என்ன?
பதில்- ஐ.நா.மனித உரிமைகள் பேரவையின் விசாரணைகள் தொடங்கியிருக்கும் வேளையில் ஜனாதிபதி இவ்வாறானதொரு விடயத்தில் இறங்கியிருக்கிறார் என்றால் அது அந்த விசாரணையை மழுங்கடிப்பதற்காகவும், அதற்கு போட்டியாக ஒன்றை நடத்தி சர்வதேச சமூகத்தையும் நாட்டு மக்களையும் திசை திருப்பும் முயற்சியாகவுமே நான் பார்க்கிறேன். இந்தக் குழுவினால் காணாமல் போனோர் விடயத்தில் சரியான முடிவு கிடைக்கப்போவதில்லை என்பது அனைவரும் அறிந்த விடயம்.
 
சர்வதேச நிபுணர்கள் என்று கூறப்படுபவர்கள் எந்தளவுக்கு நடுநிலைமையாகச் செயற்படப் போகிறார்கள் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.
 
கடந்த காலங்களிலும் இவ்வாறான பல விசாரணைக் குழுக்கள் நியமிக்கப்பட்டதுடன், விசாரணைகளும் நடைபெற்றன. ஆனால், அவற்றின் முடிவுகள் சரியான முறையில் வெளிப்படுத்தப்பட்டதுமில்லை- அமுல்படுத்தப்பட்டதுமில்லை. இறுதியாக இடம்பெற்ற கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகள் கூட இன்றுவரை அமுல்படுத்தப்படவில்லை.
 
எனவே, இந்த  காணாமல் போனோர் தொடர்பான விசாரணைக் குழுவின் அறிக்கைக்கும் முன்னர் நடைபெற்ற விசாரணை குழுவின் அறிக்கைகளின் நிலைமையே ஏற்படும்.
பேட்டி கண்டவர்.. திரு.ந.லெப்ரின்ராஜ்
நன்றி: தினக்குரல்