கிளிநொச்சி தர்மபுரம் பகுதியில் கிணற்றிலிருந்து ஆயுதங்கள் சில மீட்பு-

கிளிநொச்சி தர்மபுரம் பகுதியிலுள்ள பாடசாலையின் கிணற்றிலிருந்து ஆயுதங்கள் சில மீட்கப்பட்டுள்ளன. கிணற்றை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்ட போது இன்று முற்பகல் 10.30 அளவில் ஆயுதங்கள் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். மீட்கப்பட்டுள்ள ஆயுதங்களை கிளிநொச்சி தலைமையக பொலிஸாரிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பழைய துப்பாக்கி பாகங்கள் சிலவும் மீட்கப்பட்டுள்ளன.

கிளிநொச்சியில் ஆணொருவரின் சடலம் மீட்பு-

கிளிநொச்சி விஸ்வமடு பகுதியில் ஆணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. கிடைத்த தகவலுக்கு அமைய இன்று அதிகாலை சடலம் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். மீட்கப்பட்டுள்ள சடலம் அடையாளம் காணப்படாத நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர். சடலம் தொடர்பான நீதவான் விசாரணைகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் புதுகுடியிருப்பு பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

ஊவா தேர்தல்; தபால் மூலம் வாக்களிப்பதற்கு 41,867 பேர் விண்ணப்பம்-

ஊவா மாகாண சபைத் தேர்தலில் தபால் மூலம் வாக்களிப்பதற்கு 41,867 பேர் விண்ணப்பித்துள்ளனர். கிடைத்துள்ள விண்ணப்பங்கள் குறித்து பரீசிலனை செய்து வருவதாக தேர்தல் அதிகாரிகள் குறிப்பிடுகின்றனர். இதன்பிரகாரம் பதுளை மாவட்டத்தில் தபால் மூலம் வாக்களிப்பதற்கு 25,870 பேர் விண்ணப்பித்துள்ளனர். மொனராகலை மாவட்டத்தில் 15,997 தபால் மூல வாக்களிப்பிற்கான விண்ணப்பங்கள் கிடைக்கப்பெற்றுள்ளதாக தேர்தல்கள் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். விண்ணப்பங்கள் பரீசிலனை செய்யப்பட்டு , எதிர்வரும் தினங்களில் தபால்மூலம் வாக்களிப்பதற்கு தகுதி பெற்றுள்ளவர்களின் விபரங்கள் வெளியிடப்படும் என தேர்தல்கள் செயலகம் தெரிவித்துள்ளது.