சார்க் உச்சி மாநாட்டில் கலந்துகொள்ள ஜனாதிபதி எதிர்பார்ப்பு-

janathipathi mahinda rajapakseநேபாளத் தலைநகர் காத்மண்டுவில் எதிர்வரும் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள 18வது சார்க் உச்சி மாநாட்டில் கலந்துகொள்ள எதிர்பார்த்துள்ளதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். சார்க் அமைப்பின் பொதுச் செயலாளர் அர்ஜுன் பீ.தபாவுடன் கண்டியிலுள்ள ஜனாதிபதி மாளிகையில் இன்று முற்பகல் இடம்பெற்ற சந்திப்பின்போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார் சார்க் மாநாட்டிற்கான தயார்படுத்தல்களின் தற்போதைய நிலைமை குறித்து பொதுச் செயலாளரால் ஜனாதிபதிக்கு இதன்போது விளக்கமளிக்கப்பட்டுள்ளது. இளம் சமூகத்தினர்மீது தாக்கம் செலுத்தக்கூடிய விடயங்களை வெளிக்கொணரும் வகையில் பிராந்தியத்தியத்திலுள்ள இளைஞர் யுவதிகளை ஒன்றிணைத்து இளைஞர் மாநாடொன்றை சார்க் அமைப்பு ஏற்பாடு செய்வதன் முக்கியத்தும் குறித்தும் தெற்காசிய பிராந்தியத்திலுள்ள மத மற்றும் கலாசார முக்கியத்துவம் வாய்ந்த இடங்களுக்கு இடையிலான தொடர்புகளை ஊக்குவிக்கும் அமைப்பொன்றை உருவாக்கும் திட்டத்தையும் சார்க் அமைப்பின் பொதுச் செயலாளருடனான சந்திப்பின்போது ஜனாதிபதி முன்மொழிந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஊவா மாகாண சபை தேர்தல்; தபால்மூல வாக்களிப்பு-

ஊவா மாகாண சபைத் தேர்தலுக்கான தபால்மூல வாக்களிப்பை செப்டெம்பர் 4 மற்றும் 05ஆம் திகதிகளில் நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. தபால்மூல வாக்களிப்புக்காக ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ள விண்ணப்பங்களின் அடிப்படையில் வாக்காளர் பட்டியல் தயாரிக்கப்பட்டு வருவதாக உதவித் தேர்தல்கள் ஆணையாளர் எம்.எம். மொஹமட் கூறியுள்ளார். இதேவேளை, குறித்த தினங்களில் தபால்மூலம் வாக்களிக்க தவறும் பட்சத்தில் செப்டம்பர் 11ஆம் திகதி அலுவலக நேரத்தில் மாவட்ட தேர்தல்கள் அலுவலகத்தில் வாக்களிக்க முடியம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த தினங்களில் கொழும்பிலுள்ளவர்கள் தபால் மூலம் வாக்களிப்பதற்காக தேர்தல்கள் செயலகத்தில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் தேர்தல்கள் ஆணையாளர் கூறியுள்ளார். இதேவேளை, ஊவா மாகாணசபைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கான விருப்பு இலக்கங்கள் வழங்கும் நடவடிக்கைகளும் இன்றுமுதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக உதவித் தேர்தல்கள் ஆணையாளர் குறிப்பிட்டுள்ளார்.

காணாமல் போனோர் குடும்பங்களின் தேவைகள் தொடர்பில் கணிப்பீடு-

காணாமல் போனோரின் குடும்பங்களின் தேவைகள் தொடர்பில் தரவுகளை சேகரிப்பதற்கு சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் தீர்மானித்துள்ளது. இதன்படி குறித்த வேலைத்திட்டம் எதிர்வரும் செப்டம்பர் மாதம் முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மேலும் இந்தப் பணிகளை ஒரு வருடத்துக்குள் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் அரசிடம் தமது யோசனையை சமர்ப்பித்துள்ளதாக செஞ்சிலுவைச் சங்கம் தெரிவித்துள்ளது. இதேவேளை காணாமல் போனோர் தொடர்பான விசாரணைக் குழு, மன்னார் மாவட்டத்தில் முன்னெடுத்துள்ள முறைப்பாடுகளைப் பதிவு செய்யும் நடவடிக்கைகள் இன்றுடன் நிறைவடைந்துள்ளன. இதன்படி மடு பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் இன்றையதினம் முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.