ஜெனிவாவை தளமாக கொண்டே விசாரணைக்குழு இயங்கும் – நவநீதம்பிள்ளை-

navipillai aluvalagamஇலங்கைக்கு விஜயம் செய்யாது வெளிநாடுகளில் இருந்தவாறே இலங்கை போர்க்குற்றங்கள் குறித்த விசாரணைகளை மேற்கொள்ள முடியும் என ஐ.நா மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளை தெரிவித்துள்ளார். ஐ.நா விசாரணைக்குழு தகவல்களை சேகரிக்க இலங்கைக்குள் வர அனுமதி வழங்கப்பட மாட்டாது என இலங்கை அரசாங்கம் அறிவித்திருந்தமை தொடர்பில் கருத்து வெளியிடும்போதே அவர் இதனைக் கூறியுள்ளார். இலங்கைக்கு வெளியில் தகவல்களை பெறக்கூடிய சிறந்த வாய்ப்புகள் இருக்கின்றது. விசாரணைக்குழுவினர் நாட்டுக்கு அனுமதிக்கப்பட்டாலும் அனுமதிக்கப்படாவிட்டாலும் ஆதாரங்களை உறுதிப்படுத்துவது சரியான தரத்தை பிரதிபலிக்கும் வகையில் அமைந்திருக்கும். வடகொரிய மற்றும் சிரியா ஆகிய நாடுகள் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகள் இதற்கு சிறந்த உதாரணமாகும். இந்த இரு நாடுகள் தொடர்பான விசாரணைக்கு இலங்கை சம்பந்தமான விசாரணைக்கும் வித்தியாசங்கள் இருப்பதாக நான் காணவில்லை. இந்தியா மற்றும் தாய்லாந்து வீசா விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டதாக ஊடகங்களில் வெளியாக செய்திகளில் உண்மையில்லை. 12 பேர் கொண்ட விசாரணைக்குழு ஜெனிவாவை தளமாக கொண்டு இயங்கும். தேவை ஏற்பட்டால் வேறு நாடுகளுக்கு விஜயம் செய்யும் விசாரணைகளில் அவர்கள் கண்டறியும் விடயங்களை எதிர்வரும் மார்ச் மாதம் ஐ.நா மனித உரிமை பேரவையில் சமர்பிப்பார்கள். குற்றச்செயல்களுக்கு யார் பொறுப்புக் கூறவேண்டும் என்பதை கண்டறியவே விசாரணைக்குழு அமைக்கப்பட்டது. சமாதானம், நல்லிணக்கத்தை ஏற்படுத்த ஒரு வழியை உருவாக்கி கொடுக்க இந்த விசாரணையானது சகல இலங்கையர்களுக்கு நன்மையாக அமையும் என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும் எனவும் ஆணையாளர் நவநீதம்பிள்ளை மேலும் குறிப்பிட்டுள்ளார்.

சர்வதேச ஆலோசனை சபைக்கான அழைப்பை ஏற்றார் இந்திய பிரதிநிதி-

காணாமல் போனோர் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் சர்வதேச ஆலோசனை சபைக்கான அழைப்பை பெற்றுள்ள இந்திய மனித உரிமைகள் செயற்பாட்டாளரான அடாஸ் கௌஷால், அதனை தாம் ஏற்றுக்கொண்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். த ஹிந்து நாளிதழுக்கு செவ்வி வழங்கிய அவர் இந்த ஆணைக்குழுவில் திருப்தியுடன் இணைந்துக் கொள்வதாக தெரிவித்துள்ளார். ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ தமக்கு தனிப்பட்ட முறையில் விடுத்த அழைப்பை ஏற்றுக்கொண்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். இந்திய கிராமிய சட்ட உதவி மையத்தின் அரச சார்பற்ற அமைப்பின் தலைவராக அடாஸ் கௌஷால் செயற்படுகிறார். அவர் வட இந்தியாவின் இமாலய அடிவாரத்தில் வசிக்கும் பூர்வீக சமூகத்தின் உரிமைகளை பாதுகாக்கும் செயற்பாடுகளையும் மேற்கொண்டு வருகிறார். காணாமல் போனோர் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் சர்வதேச ஆலோசனை சபையை மேலும் விரிவுப்படுத்த உள்ளதாக அண்மையில் ஜனாதிபதி அறிவித்திருந்தார். இதன்படி மேலும் சர்வதேச ஆலோசகர்கள் மூவரை தெரிவு செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த ஆலோசனைக் குழுவில் தற்போது சர்வதேச ஆலோசகர்களாக ஸ்ரீமத் டெஸ்மன் டி சில்வா, ஸ்ரீமத் ஜெப்ரி நைஸ் மற்றும் போராசிரியர் டேவிட் கிரேன் ஆகியோர் அங்கம் வகிக்கின்றமை இங்கு குறிப்பிடத்தக்கது.

சப்ரகமுவ பல்கலை தமிழ் மாணவன்மீது தொடர்ந்தும் விசாரணை-

சப்ரகமுவ பல்கலைக்கழகத்தில் தாக்குதல் காயங்களுக்கு உள்ளாகி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்ற தமிழ் மாணவன் தொடர்ந்தும் பயங்கரவாத தடுப்புப் பிரிவினரால் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். இம் மாணவன் தன்னைத் தானே தாக்கி காயத்தை ஏற்படுத்திக் கொண்டதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் அஜித் ரோஹன குறிப்பிட்டுள்ளார். எனினும் சப்ரகமுவ பல்கலைக்கழக விடுதியில் தங்கியிருந்த போது தம்மை மாணவர்கள் தாக்கியதாக குறித்த மாணவர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தார். பயங்கரவாத தடுப்புப் பிரிவினர் நடத்திய விசாரணைகளின் போது தான்னைத் தானே தாக்கியும், கீறியும் காயங்களை ஏற்படுத்திக் கொண்டதாக தெரியவந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.