தடைப்பட்டியலிலிருந்து மூவரின் பெயர் நீக்கம்-

imagesCA47OAWZபயங்கரவாத தடைப்பட்டியலில் இருந்து தம்முடைய பெயர்களை நீக்கிக்கொள்ள வேண்டுமாயின் அது தொடர்பில் விண்ணப்பிக்க வேண்டும். அத்துடன் தமது பெயர் நீக்கப்பட வேண்டியமைக்கான உரிய காரணத்தை முன்வைக்க வேண்டும் என இராணுவ பேச்சாளரும் பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் ஊடகமைய பணிப்பாளருமான பிரிகேடியர் ருவன் வணிகசூரிய இன்று ஊடகத்தினரிடம் தெரிவித்துள்ளார். இதேவேளை, பயங்கரவாத செயற்பாடுகளுடன் தொடர்புடையதாக, அடையாளம் காணப்பட்டு கடந்த மார்ச் மாதம் வர்த்தமானி அறிவித்தலில் வெளியிடப்பட்ட 424 நபர்களில் மூன்று நபர்களின் பெயர்கள் நீக்கப்பட்டு அது தொடர்பில் வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். ஐ.நா பாதுகாப்பு சபையின் உறுப்புரைக்கு அமைவாக தயாரிக்கப்பட்டுள்ள இப்பட்டியலில் இருந்து தமது பெயரை நீக்குமாறு மூவர் விண்ணப்பித்திருந்தனர். அவர்கள் தொடர்பில் ஆராய்ந்து உண்மைத்தன்மை தொடர்பில் கண்டறியப்பட்ட பின் வெளிவிவகார அமைச்சின் உத்தரவுக்கு அமைய குறித்த மூவரும் நீக்கப்பட்டுள்ளது என பிரிகேடியர் ருவன் வணிகசூரிய மேலும் கூறியுள்ளார்.

சர்வதேச விசாரணைக் காலக்கட்டம் குறித்து அதிர்ச்சி-பாதுகாப்பு அமைச்சு

இலங்கை தொடர்பில் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளரது விசாரணைக் குழுவினால் மேற்கொள்ளப்படும் விசாரணைக் காலகட்டம் குறித்து பாதுகாப்பு அமைச்சு அதிர்ச்சி வெளியிட்டுள்ளது. கொழும்பில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின்போது, இராணுவப் பேச்சாளர் ருவாண் வணிகசூரிய இதனைத் தெரிவித்துள்ளார். நல்லிணக்க ஆணைக்குழு பரிசீலனை நடத்திய காலக்கட்டத்துக்குள்ளேயே விசாரணை நடத்தப்படும் என மனித உரிமைகள் ஆணைக்குழு அறிவித்திருந்தது. ஆனால் அதனையும் தாண்டி வேறொரு காலக்கட்டத்தை அடிப்படையாக வைத்து சர்வதேச விசாரணை நடத்தப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அழகு சத்திர நிலையத்தில் பெண் வைத்தியர் மரணம் ஆண் வைத்தியர் கைது

தனது அழகை மெருகூட்டுவதற்காக பம்பலப்பிட்டி பிரதேசத்திலுள்ள அழகு நிலையமொன்றில், ஊசி ஏற்றிக்கொண்ட நாவலையைச்சேர்ந்த 47 வயதான கொழும்பு றிஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் பெண் வைத்தியரான ஈ.ஏ.பிரியங்கா, அழகு சத்திர சிகிச்சை நிலையத்தில் ஊசி ஏற்றிக்கொண்ட நிலையில் உயிரிழந்தார். இந்த மரணத்துக்கான காரணம் இதுவரையில் கண்டறியப்படவில்லை. இந்நிலையிலேயே, உயிரிழந்தவரின் உடற் பாகங்களை அரச பகுப்பாய்வுக்கு அரச பகுப்பாய்வு திணைக்களத்துக்கு அனுப்ப உட்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. பிரியங்கவின் மரணம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ள ஆண் வைத்தியரான நிமல் கமகேவை எதிர்வரும் 18 ஆம் திகதி வரையிலும் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு, இல-5 நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கொழும்பு பொலிஸ் மரணபரிசோதனை நிலையத்தில் இடம்பெற்ற மரண விசாரணைகளை அடுத்தே இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.

மூன்று சட்ட மேதைகளை உள்ளடக்கிய சர்வதேச நிபுணர்கள் குழு இலங்கை வந்தடைந்துள்ளது.

Desmonகாணாமல் போனவர்கள் தொடர்பிலான முறைப்பாடுகள் தொடர்பில் ஆலோசனை வழங்குவதற்காக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் நியமிக்கப்பட்டுள்ள மூன்று சட்ட மேதைகளை உள்ளடக்கிய சர்வதேச நிபுணர்கள் குழு நாட்டை வந்தடைந்துள்ளது.
கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையில் 4.359 ஆம் பந்தியில்  குறிப்பிடப்பட்டிருந்த விடயங்கள் தொடர்பில் விசாரணை செய்வதற்கான ஆணையுடன் இந்த விசாரணை ஆணைக்குழு 2013 ஓகஸ்ட் 15ஆம் திகதிய 182342 வர்த்தமானி அறிவித்தலின் மூலம் நியமிக்கப்பட்டது.
சேர் டெஸ்மன் டி சில்வா தலைமையிலான இந்தக் குழுவில் சேர் ஜெப்ரி நைஸ் மற்றும் பேராசிரியர் டேவிட் எம். கிரேன் ஆகியோர் அங்கம் வகிக்கின்றனர். இந்த ஆலோசனைக் குழுவிடம் ஆணைக்குழுவின் பணிகளுடன் தொடர்புடைய விடயங்கள் தொடர்பாக அவர்களது வேண்டுகோளின் பேரில் விசாரணை ஆணைக்குழுவின் தலைவர் மற்றும் உறுப்பினர்களுக்கு ஆலாசனை வழங்கும் பணி ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட ஆணைக்குழுவின் தலைவர் மெக்ஸ்வெல் பராக்கிரம பரணகம தலைமையிலான குழுவினரையும் அவர்கள் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளனர். ஜனாதிபதி ஆணைக்குழுவில், திருமதி பிரியந்தி சுரஞ்சனா வைத்தியரத்ன, திருமதி மனோ ராமநாதன் ஆகியோர் இவ்வாணைக்குழுவில் இடம்பெற்றுள்ளனர்.

மட்டக்களப்பில் பொலிஸ் பொதுமக்கள் மோதல்

மட்டக்களப்பு மாவட்டத்தின் கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவிலுள்ள காஞ்சிரங்குடா, பனையறுப்பான் கிராமத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை (12) இரவு பொலிஸாருக்கும் பொதுமக்களுக்கும் இடையில் ஏற்பட்ட மோதலில் காயமடைந்த 11 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதேவேளை, சந்தேகத்தின் பேரில் இளைஞர்கள் இருவரை நேற்று செவ்வாய்க்கிழமை இரவு கைதுசெய்துள்ளதாக மட்டக்களப்பு பொலிஸார் தெரிவித்தனர். மேற்படி கிராமத்திலுள்ள வீடு ஒன்றில் கசிப்பு எனப்படும் (கள்ளச்சாராயம்) விற்பனை செய்யப்படுவதாக கொக்கட்டிச்சோலை பொலிஸாருக்கு தகவல் கிடைத்தது. இதனைத்  தொடர்ந்து அங்கு சென்ற பொலிஸார் வீட்டைச் சோதனை செய்து,   அந்த வீட்டு உரிமையாளரை கைதுசெய்ய முற்பட்டனர். இந்த நிலையில்,  அங்கு பதற்ற நிலைமை தோன்றியதுடன்,  ஜீப் வண்டி ஒன்றும் தீக்கிரையாக்கப்பட்டது. இதன்போது, அங்கு கூடிய பொதுமக்கள் பொலிஸார் மீது தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.  இதில் பெண் பொலிஸ் உத்தியோகஸ்தர் ஒருவர் உட்பட 07 பொலிஸார் காயமடைந்துள்ளனர். மேலும், பொலிஸாரின்  துப்பாக்கிச் சூட்டில் பெண்கள் இருவர்  காயமடைந்துள்ளதுடன்,  இளைஞர்கள் இருவரும்  இந்த மோதலில் காயமடைந்துள்ளனர். மேற்படி இளைஞர்கள் இருவரையுமே சந்தேகத்தின் பேரில் பொலிஸார் கைதுசெய்துள்ளனர். இந்தச் சம்பவத்தில் காயமடைந்த பொலிஸ் உத்தியோகத்தர்களான ஜே.விக்ரமசிங்க, வீரசிங்க ஆகியோரும்;  வேல்முருகு சுகந்தினி, ஆறுமுகம் வள்ளியம்மை,  முருகேசு டிலக்சன்,  முருகேசு ஜெயகரன் ஆகியோரும் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். காயமடைந்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவருக்கு சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.   இந்தச் சம்பவத்தை தொடர்ந்து குறித்த பகுதியில் பொலிஸாரும் இராணுவத்தினரும்  விசேட அதிரடிப்படையினரும் பாதுகாப்புக் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். தற்போது குறித்த பகுதியில் அமைதி நிலவுவதுடன்,  சம்பவம் இடம் பெற்ற பகுதியில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். இன்று புதன்கிழமை (13)   காலை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேந்திரன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் இரா.துரைரட்ணம் ஆகியோர் சம்பவ இடத்துக்குச் சென்று நிலைமைகளை பார்வையிட்டதுடன், பொதுமக்களையும் சந்தித்துக் கலந்துரையாடினர். 

 .