யுத்தகால உயிர் – சொத்து சேதம் குறித்த கணக்கெடுப்பு நிறைவு-

இலங்கையில் 30 வருடங்களாக நிலவிய யுத்த காலப்பகுதியில் இடம்பெற்ற உயிர் மற்றும் சொத்து சேதம் குறித்த கணக்கெடுப்பு அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளதாக குடிசன வீட்டு தொகை மதிப்பீட்டு திணைக்களம் தெரிவித்துள்ளது. குறித்த அறிக்கை எதிர்வரும் தினங்களில் ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்கவிடம் சமர்ப்பிக்கப்படவுள்ளது. 1983ஆம் ஆண்டு தொடக்கம் 2009ஆம் ஆண்டு வரையான காலத்தில் இடம்பெற்ற மோதலின்போது ஏற்பட்ட உயிரிழப்புக்கள் மற்றும் சொத்து சேதம் குறித்த கணக்கெடுப்பு நடவடிக்கை கடந்த நவம்பர் மாதத்தில் ஆரம்பிக்கப்பட்டது. கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கைப்படி இந்த கணக்கெடுப்பு ஆரம்பிக்கப்பட்டது. நாட்டின் சகல மாவட்டங்களிலும் இந்த கணக்கெடுப்பு மேற்கொள்ளப்பட்டதாகவும் இதன் முதற்கட்ட அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு உள்ளதாகவும் குடிசன வீட்டு தொகை மதிப்பீட்டு திணைக்களம் தெரிவித்துள்ளது.

இலங்கைக்கு தொடர்ந்தும் ஒத்துழைப்பு வழங்கப்படும் – இந்தியா

இலங்கையின் புனர்வாழ்வு, புனர்நிர்மான மற்றும் நல்லிணக்க முயற்சிகளுக்காக இந்தியா மேலும் ஒத்துழைப்பு வழங்கும் என இந்திய அரசாங்கம் தெரிவித்துள்ளது. இந்திய தூதரக நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய இந்திய உயர்ஸ்தானிகர் வை.கே.சின்கா இதனைத் தெரிவித்துள்ளார். இந்திய திட்டங்களை சுமூகமான முறையில் முன்னெடுப்பதற்கு உதவியதற்காக இலங்கை அரசிற்கு நன்றி தெரிவித்துள்ள அவர் இந்தியாவும் எப்போதும் தனது நட்புறவையும் ஒத்துழைப்பையும் இலங்கைக்கு வழங்கியுள்ளதாகவும் கூறியுள்ளார். இரு நாட்டு உறவுகளும் தற்காலத்திற்கு பொருத்தமான சகல துறைகளையும் உள்ளடக்கி தற்போது மேலும் வளர்ச்சி கண்டுள்ளது. இலங்கையுடனான இந்தியாவின் அபிவிருத்தி ஒத்துழைப்பு தனித்துவமானது, அரசியல் ரீதியான புரிந்துணர்வு, பொதுவான சமுக கலாச்சார தொடர்புகள், புவியல் ரீதியிலான நெருக்கம், இலங்கையின் முகவர் அமைப்பகளுடனான ஒத்துழைப்புடன் கூடிய அமுலாக்கம் என்பவற்றினை அடித்தளமாக கொண்டு கட்டியெழுப்;பட்டது. தற்போது வரையில் இலங்கையில் மேற்கொள்ளப்படும் அபிவிருத்தி பணிகளுக்காக இந்தியா, 1.3 பில்லியன் நிதியுதவி வழங்கியுள்ளது என வை.கே.சின்கா மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை அகதிகள் தொடர்பில் ஆஸி நீதிமன்றம் ஆய்வு-

இலங்கை அகதிகளின் விடயத்தில் அவுஸ்திரேலிய அரசாங்கம் சட்டரீதியாக செயற்பட்டுள்ளதா? என்பது தொடர்பில் அவுஸ்திரேலியாவின் மேல் நீதிமன்றம் ஆராய்ந்து வருகிறது. மேல் நீதிமன்ற நீதிபதி கென்னீத் ஹெயின் இதனைத் தெரிவித்துள்ளார். அவுஸ்திரேலியாவில் அகதி அந்தஸ்து கோரி சென்ற 157 இலங்கை அகதிகளை அவுஸ்திரேலிய அரசாங்கம் நடுக்கடலில் ஒரு மாத காலம் வரையில் தடுத்து வைத்திருந்தது. இந்தியாவுடன் ஒப்பந்தம் ஒன்றை ஏற்படுத்தி அவர்களை நாடுகடத்தும் நோக்கில் இவ்வாறு தடுத்து வைக்கப்பட்டிருந்தமையானது, சட்டத்துக்கு முரணானது என்று குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இது தொடர்பான வழக்கு இன்று விசாரணைக்கு வந்தவேளையில் நீதிபதி இதனைக் கூறியுள்ளார். இதேவேளை இந்திய அரசாங்கத்துடன் அகதிகளை நாடுகடத்துவது தொடர்பில் எந்தவிதமான உடன்படிக்கைகளும் ஏற்படுத்திக் கொள்ளாத நிலையில், அவர்களை தற்காப்பு படகுகளின்மூலம் திருப்பி அனுப்ப அவுஸ்திரேலியா முயற்சித்துள்ளது. இது அவர்களுக்கு உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் என்பதோடு, அவர்கள் இந்தியாவை சென்றடைந்திருந்தால், ஐந்து வருடங்கள் வரையில் சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருப்பார்கள் என அகதிகள் சட்டத்தரணிகள் தெரிவித்துள்ளனர். இந்த வழக்கு அடுத்தவாரம் வியாழக்கிழமை மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.

இந்திய மீனவர்கள் 74 பேரும் விடுவிப்பு-

இலங்கைக் கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்டனர் என்ற குற்றச்சாட்டில் யாழ்ப்பாணத்தின் தீவகக் கடற்பரப்புக்களில் வைத்துக் கைதுசெய்யப்பட்ட 69 மீனவர்களும், படகின்றி நீந்திக் கரை சேர்ந்த 5 மீனவர்களுமாக மொத்தம் 74 மீனவர்கள் இன்று யாழ். நீதிமன்றங்களால் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். இந்தியாவின் சுதந்திர தினத்தையொட்டி நல்லெண்ண அடிப்படையில், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பணிப்புரையின் பேரிலேயே மேற்படி மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். ஜுலை 22ஆம் திகதி எழுவைதீவுக் கடற்பரப்பில் வைத்து 5 படகுகளுடன் கைது செய்யப்பட்ட 18 இந்திய மீனவர்களையும் ஊர்;காவற்றுறை நீதிமன்ற நீதவான் செல்வநாயகம் லெனின்குமார் இன்று விடுவித்துள்ளார். அத்துடன், யாழ். நயினாதீவுக் கடற்கரையில் ஜுலை 17ஆம் திகதி கரையொதுங்கிய ஐந்து பேரையும் இதன்போது, நீதவான் விடுவித்துள்ளார். அதேபோல், ஜுலை 29ஆம் திகதி நெடுந்தீவிற்கு அண்மிய கடற்பரப்பில் வைத்து 7 படகுகளுடன் கைது செய்யப்பட்ட 51 இந்திய மீனவர்களை பருத்தித்துறை நீதவான் நீதிமன்ற பதில் நீதவான் பொன்னம்பலம் குமாரசாமி இன்று விடுவித்துள்ளார். ஆனால், 69 மீனவர்களின் 12 படகுகளும் அவர்களின் மீன்பிடி உபகரணங்களும் தொடர்ந்து தடுத்து வைக்கும்படி நீதவான்கள் உத்தரவிட்டிருந்தனர். இதனையடுத்து, மேற்படி மீனவர்கள் யாழ். இந்தியத் துணைத்தூதரகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். இந்த மீனவர்களை நாளை மறுதினம் இலங்கை கடற்படையின் ஊடாக இந்தியாவிற்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்படுமென தெரியவருகின்றது. இதேNவுளை இந்தியாவின் கர்நாடகா மாநிலத்தில் தடுத்துவைக்கப்பட்டிருந்த இலங்கை மீனவர்கள் 16பேர் விடுவிக்கப்பட்டுள்ளதுடன், மாநில அதிகாரிகளால் தடுத்துவைக்கப்பட்டிருந்த இலங்கை மீனவர்களின் படகுகளும் விடுவிக்கப்பட்டுள்ளன. எவ்வாறாயினும் இந்திய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் அதிகாரிகளால் கைதுசெய்யப்பட்ட இலங்கை மீனவர்கள் 23 பேர் தொடர்ந்தும் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக கடற்றொழில் திணைக்களம் தெரிவித்துள்ளது.