யாழ்ப்பாணத்தில் கிருஷ்ணா குழு கைது-

krushna kulu  (1) krushna kuluயாழ்ப்பாணத்தில் வாள்வெட்டுச் சம்பவங்கள் மற்றும் சமூகவிரோதச் செயல்களில் ஈடுபட்டு வந்தததாக கூறப்படும் கிருஷ்ணா என்ற குழுவைச் சேர்ந்த நான்குபேரை கைதுசெய்துள்ளதாக மானிப்பாய் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ஆர்.ஏ.டி.றொஹான் மகேஷ் இன்று தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், யாழ்.மாவட்டத்தில் இடம்பெறுகின்ற சமூக விரோதச் செயல்களில் கிருஷ்ணாக் குழு ஈடுபட்டு வருவதாகவும் அந்தக் குழு மானிப்பாய் பகுதியை மையமாக வைத்து இயங்கி வருவதாகவும் பொலிஸ் புலனாய்வுப் பிரிவினரிடம் இருந்து தகவல்கள் கிடைக்கப்பெற்றன. இந்நிலையில், நேற்று அதிகாலை ரோந்து பணியில் ஈடுபட்ட பொலிஸார், மானிப்பாய் சந்தைக்கருகில், சந்தேகத்திற்கிடமான முறையில் மோட்டார் சைக்கிள்கள், சைக்கிள்களில் வாள்களுடன் 8 பேர் நிற்பதை அவதானித்தனர். மானிப்பாய் பொலிஸ் நிலையத்திலிருந்து மேலதிகப் பொலிஸார் வரவழைக்கப்பட்டு, அந்தக் குழு சுற்றிவளைக்கப்பட்டபோது, அவர்கள் தப்பிஓட முயன்றனர். இதனையடுத்து, காலுக்குக் கீழ் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டு, நால்வர் கைதுசெய்யப்பட்டனர். மிகுதி நால்வரும் தப்பி ஓடியுள்ளனர். இவர்களில், 18, 21, 24 மற்றும் 25 வயதையுடையவர்களே கைதுசெய்யப்பட்டனர். இவர்களிடமிருந்து 4 மோட்டார் சைக்கிள்கள், 2 துவிச்சக்கர வண்டிகள், 2 வாள்கள், 3 பொல்லுகள், 3 கத்திகள் என்பன மீட்கப்பட்டன. துப்பாக்கிச்சூடு நடத்தியதில் சந்தேக நபர்களில் ஒருவர் காயமடைந்ததுடன் அவருக்கு மானிப்பாய் வைத்தியசாலையில் சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. தப்பியோடிய ஏனையோரை கைதுசெய்யும் பணியில் விசேட பொலிஸ் குழு ஈடுபட்டு வருகின்றது என மானிப்பாய் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி மேலும் குறிப்பிட்டுள்ளார்.

சுங்க பொருட்களை பெற குறுந்தகவல்-

sunka porutkalaiஇலங்கை சுங்கத்திற்கு வரும் பொருட்களை உரிமையாளர்கள் மீண்டும் பெற்றுக்கொள்ளும் போது குறித்த உரிமையாளர்களுக்கு அது தொடர்பில் குறுந்தகவல் அனுப்பும் முறைமை அறிமுகச் செய்யப்படவுள்ளதாக இலங்கை சுங்க திணைக்களம் அறிவித்துள்ளது. இந்த செயற்பாடு எதிர்வரும் திங்கட்கிழமை முதல் நடைமுறைக்கு வரும் என திணைக்களத்தின் பேச்சாளர் லெஸ்லி காமினி தெரிவித்துள்ளார். பல்வேறு தரப்பினர் போலியான ஆவணங்களை சமர்ப்பித்து பொருட்களை பெற்றுச் செல்ல முற்படுகின்றனர். இந்த தவாறான மோசடிகளை இதனூடாக குறைக்க முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

முல்லைத்தீவு விபத்தில் ஏழு எருமை மாடுகள் உயிரிழப்பு-

mullaitive vipaththail (1)முல்லைத்தீவு, தட்டாமலை பிரதேசத்தில் இன்று அதிகாலை இடம்பெற்ற விபத்தில் 7 எருமை மாடுகள் உயிரிழந்துள்ளதாக ஒட்டுசுட்டான் பொலிஸார் தெரிவித்துள்ளனர். நெடுங்கேணியிலிருந்து முல்லைத்தீவு நோக்கிச் சென்றுகொண்டிருந்த விசுவமடு விவசாயிகள் பலநோக்கு கூட்டுறவுச் சங்கத்துக்கு சொந்தமான பிக்கப் ரக வாகனம் ஒன்று, வீதியில் கடந்து சென்றுகொண்டிருந்த எருமை மாடுகளை மோதியுள்ளதாகவும், இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் ஒட்டுசுட்டான் பொலிஸார் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.

பம்பலப்பிட்டியில் கெப்ரக வாகனம் திடீரென தீப்பற்றியது-

கொழும்பு, பம்பலப்பிட்டி, கடற்கரை வீதி பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கெப் ரக வண்டியொன்று தீப்பிடித்துள்ளது. இன்றுகாலை இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார். தீ விபத்துக்கான காரணம் இதுவரை தெரியவராத நிலையில், பம்பலபிட்டி பொலிஸார் இச்சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மடு தலைமன்னாருக்கான புகையிரத சேவை டிசம்பரில் ஆரம்பம்-

மடுவுக்கும் தலைமன்னாருக்கும் இடையிலான புகையிரத சேவை, எதிர்வரும் டிசெம்பர் மாதத்தில் ஆரம்பிக்கப்படுமென எதிர்பார்ப்பதாக யாழ். இந்திய துணைத்தூதரக தற்காலிக கொன்சலட் ஜெனரல் எஸ்.டி.மூர்த்தி இன்று தெரிவித்துள்ளார். யாழ் மருதடி வீதியில் அமைந்துள்ள இந்தியத் துணைத்தூதரகத்தில் இடம்பெற்ற இந்தியாவின் 68ஆவது சுதந்திரதின நிகழ்வில் உரையாற்றும்போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். இந்திய துணைத்தூதரகம் யாழில் திறக்கப்பட்ட்ட 4 வருடங்களில் பாரிய அபிவிருத்தி திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இதன்படி, பலருக்கு வேலைவாய்ப்பை பெற்றுத்தரக்கூடிய அச்சுவேலி கைத்தொழில் பேட்டை நிர்மாணிக்கப்பட்டு வருதல், வவுனியா வைத்தியசாலைக்கான கட்டிடத்தொகுதி, யாழ் பல்கலைக்கழக விவசாய மற்றும் பொறியியற் பீடங்கள் கிளிநொச்சியில் நிறுவுவதற்கான உதவித்திட்டம், துரையப்பா விளையாட்டரங்கினை புனரமைத்தல், யாழில் கலாசார நிலையமொன்றை அமைத்தல் உள்ளிட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேலும் 2012ஆம் ஆண்டு முதல் வடமாகாணத்தில் ஆரம்பிக்கப்பட்ட இந்திய வீட்டுத்திட்டமானது பாரிய முன்னேற்றத்தை கண்டுள்ளது. இதுவரை 14,514 வீடுகள் நிர்மாணித்து முடிக்கப்பட்டுள்ளன. அத்துடன், 19,703 வீடுகள் நிர்மாணிக்கப்பட்டு வருகின்றன. நுண்கலைகளை வளர்க்கவும், கலாசார உறவுகளை பலப்படுத்தவும், இளம் கலைஞர்களுக்கு ஊக்கமளிக்கும் செயற்பாடுகளையும் மேற்கொண்டு வருகின்றோம். அந்தவகையில், நல்லூர் திருவிழாக் காலத்தில் இம்மாதம் 24, 25 ஆகிய திகதிகளில் நடன, இசைக் கச்சேரிகளை சங்கிலியன் தோப்பில் நடத்தவுள்ளோம் என கொன்சலட் ஜெனரல் எஸ்.டி.மூர்த்தி மேலும் குறிப்பிட்டுள்ளார்.