ஏழாலையில் புலமைப்பரிசில் பரீட்சைக்கான இலவச வகுப்பும், பெற்றோர் மாணவர்களுடனான கலந்துரையாடலும்-

pulamai parisil (3)யாழ். ஏழாலை மேற்கு சைவ சன்மார்க்க அறநெறி பாலர் முன்பள்ளியில் புளொட் தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வடக்கு மாகாணசபை உறுப்பினருமான திரு. தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களின் வழிகாட்டலில் திரு. சே.ஞானசபேசன் அவர்களின் ஏற்பாட்டில் புலம்பெயர்ந்து வாழும் திரு. வே.மணிவண்ணன் அவர்களின் அனுசரணையுடன் இலவச புலமைப்பரிசில் பரீட்சை வகுப்புக்கள் நடைபெற்று வந்தது. இம்மாணவர்களுக்கான இறுதிநாள் வகுப்பும் பெற்றோர்களுடனான கலந்துரையாடலும் கடந்த 14-08-2014 வியாழக்கிழமையன்று மாலை 3.30 மணிக்கு திரு. வே.ஹரிவண்ணன் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் ஆசிரியர் திரு. க. அருந்தவநேசன் (புலமைப்பரிசில் பரீட்சை ஆசிரியர்), திரு. இ. நவகேதீஸ்வரன் மற்றும் பெற்றோரும் கலந்து சிறப்பித்தனர்.

pulamai parisil (5)தலைவர் திரு. வே.ஹரிவண்ணன் தலைமையுரையில், மாணவர்கள் தமது கல்வி மீதான அக்கறையை புலமை பரிசில்பரீட்சையின் பின்னரும் தொடரவேண்ர்டும் எனவும் தன்னம்பிக்கையுடன் பரீட்சைக்கு தோற்றுவதற்கான சூழலை பெற்றோர் ஏற்படுத்த வேண்டும் எனவும் தெரிவித்தார்.

திரு. இ. நவகேதீஸ்வரன் தனது கருத்துரையில், பரீட்சைக்கான மாவட்ட ரீதியில் வெட்டுப்புள்ளி பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களில் 10 வீதத்தினர் சித்தியடையும் வகையில் சித்திப்புள்ளி தீர்மானிக்கபடுகின்றது எனவும் இதே ஆதரவை பெற்றோர்கள் பிள்ளைகளுக்கு எதிர்காலத்திலும் தொடர்ந்து வழங்கவேண்டும் எனவும் கூறியதுடன் கடந்த காலத்தில் திரு. சித்தார்த்தன் அவர்கள் பாராளுமன்ற உறுப்பினராக பணியாற்றிய காலத்தில் தமிழ் மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்காக தூரநோக்குடன் மேற்கொண்ட நடவடிக்கைகளையும் எடுத்துக் கூறினார்.

pulamai parisil (4)

தொடர்ந்து ஆசிரியர்களான திரு. க. அருந்தவநேசன், திரு. வே. ஹரிவண்ணன் ஆகியோரால் பரீட்சைக்கான நுட்பங்களும் வழிகாட்டுதல்களும் மாணவர்களுக்கு வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் பெற்றோர்கள் தமது கருத்துக்களை ஆக்கபூர்வமானதாக ஆர்வத்துடன் வெளிப்படுத்தியதுடன் எதிர்காலத்திலும் இதே மாதிரியான வகுப்புக்களை தொடர்ந்தும் மேற்கொள்வதற்கான நடவடிக்கைகளை எடுத்துதவுமாறும் திரு. த.சித்தார்தன் அவர்களிடம் கோரிக்கையை முன்வைத்ததுடன் பாராட்டுக்களையும் நன்றியையும் தெரிவித்துக் கொண்டனர்.

கொழும்பில் நான்காவது பாதுகாப்பு மாநாடு-

நாட்டில் நிலவிய அசாதாரண சூழ்நிலை நிறைவுக்கு வந்த பின்னர் மேற்கொள்ளப்படும் அபிவிருத்தி நடவடிக்கைகளில் எதிர்நோக்கும் பிரச்சினைகள் மற்றும் சவால்கள் தொடர்பில் ஆராயும் நான்காவது பாதுகாப்பு மாநாடு நாளையதினம் கொழும்பில் நடைபெறவுள்ளது இந்த மாநாட்டில் கலந்துகொள்ளும் வெளிநாட்டு பிரதிநிதிகள் நாட்டிற்கு வருகை தருவதாக பாதுகாப்பு அமைச்சின் ஊடகப் பிரிவின் பணிப்பாளர் ருவன் வணிகசூரிய தெரிவித்துள்ளார் பாதுகாப்பு மாநாடு நாளை முதல் எதிர்வரும் 20ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது இந்தியா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், மலேஷியா, இந்தோனிஷியா மற்றும் ஐரோப்பிய நாடுகள் உட்பட 60 நாடுகளின் பிரதிநிதிகள் இம்மாநாட்டில் பங்;கேற்கவுள்ளதாகவும் ருவன் வணிகசூரிய மேலும் கூறியுள்ளார். 

இலங்கையிடம் ஐ.நா. மனித உரிமைகள் குழு கேள்வி-

பல்வேறு விடயங்கள் தொடர்பில் ஐ.நா மனித உரிமைகள் குழு இலங்கை அரசிடம் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் கேள்வி எழுப்பவிருப்பதாக கூறப்படுகிறது. ஐ.நா மனித உரிமைகள் குழுவின் 112வது அமர்வு எதிர்வரும் ஒக்டோபர் 7ம் திகதி முதல் 31ம் திகதி வரையில் நடைபெறவுள்ளது. இக்கூட்டத்தில் ஒக்டோபர் மாதம் 7ம் மற்றும் 8ம் திகதிகளில் இலங்கையின் மனித உரிமைகள், அரச சார்பற்ற நிறுவனங்களின் செயற்பாடுகள் போன்ற விடயங்கள் தொடர்பில் கேள்வி எழுப்பப்படவுள்ளது. மனித உரிமைகள் குழுவின் 112வது அமர்வுக்கான நிகழ்ச்சி நிரலில் இவ் விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்போது இறுதி யுத்தத்தின்போது இடம்பெற்ற மனித உயிரிழப்புகள் தொடர்பிலும் கேள்வியெழுப்பப்படும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

இருநாட்டு மீனவர் பிரச்சினை குறித்து மீண்டும் பேச்சுவார்த்தை-

இந்திய மற்றும் இலங்கை மீனவர்களுக்கு இடையிலான பிரச்சினை தொடர்பிலான பேச்சுவார்த்தை ஒன்று இந்த மாதம் 29ம் திகதி இடம்பெறவுள்ளது. இந்திய மற்றும் இலங்கை அதிகாரிகள் மட்டத்தில் இந்த பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளதாக கடற்றொழில் கூட்டுத்தாபனத்தின் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்காக கடற்றொழில் கூட்டுத்தாபனத்தின் பணிப்பாளர் நிமால் ஹெட்டியாராச்சி தலைமையில் மூவர் கொண்ட குழு புதுடில்லிக்கு பயணமாகவுள்ளது. ஏற்கனவே இந்திய மற்றும் இலங்கை மீனவர்களுக்கிடையில் இரண்டு சந்தர்ப்பங்களில் பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றிருந்த போதிலும்;, அவை தீர்மானங்களின்றி நிறைவடைந்திருந்தன. முன்னதாக கடந்த ஜனவரி மாதம் புதுடில்லியில் இந்திய இலங்கை அதிகாரிகள் மட்டத்திலான பேச்சுவார்த்தை ஒன்றும் இடம்பெற்றிருந்தது. இந்நிலையில் இம்மாதம் நடைபெறும் பேச்சுவார்த்தையின்போது, ஏற்கனவே இப்பிரச்சினையை தீர்ப்பதற்காக இந்தியா தயாரித்துள்ள திட்டங்களை இந்திய அதிகாரிகள் முன்வைப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன்படி இலங்கை கடற்பரப்பில் இந்திய மீனவர்கள் கட்டணங்களை வழங்கி மீன்பிடியில் ஈடுபட அனுமதிப்பது மற்றும் இந்தியாவின் அதிகார கடல் எல்லையை நீடிப்பது போன்ற விடயங்கள் இதன்போது இந்திய தரப்பினால் முன்வைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகாரப் பகிர்வு தொடர்பில் இந்தியா வலியுறுத்தல்-

இலங்கை தொடர்பில் கொள்கை ரீதியான அணுகுமுறையை பின்பற்றி இருப்பதாக இந்தியா தெரிவித்துள்ளது. ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் இந்திய உயர்ஸ்தானிகர் வை.கே.சின்ஹா இதனைத் தெரிவித்துள்ளார். இலங்கையில் நல்லிணக்க பரிந்துரைகளின் முழுமையான அமுலாக்கம், 13ம் திருத்தச்சட்டத்தின் அமுலாக்காம் மற்றும் மறுசீரமைப்பு விடயங்களில் தொடர்ச்சியாக இலங்கைக்கு அழுத்தம் கொடுத்து வரும் அதேநேரம் இலங்கையில் வடமாகாண சபைத் தேர்தல் நடத்தப்பட்டமை, ஆயுத போராட்டம் நிறைவுக்கு வந்தமை போன்ற விடயங்களை இந்தியா வரவேற்கின்றது. இலங்கையுடனான சிறந்த நல்லுறவை மாத்திரம் கருத்தில் கொள்ளாது, சமாதானம், நீதி, சிறுபான்மை மக்களுக்கான சம அந்தஸ்த்து போன்ற விடயங்கள் தொடர்பிலும் இந்தியா செயற்பட்டு வருகின்றது என் அவர் மேலும் கூறியுள்ளார்.

எரிந்த நிலையில் ஆசிரியையின் சடலம் மீட்பு-

யாழ்ப்பாணம், புலோலி, 1ஆம் கட்டைப் பகுதியிலுள்ள வீடொன்றில் இருந்து எரிந்த நிலையில் ஓய்வுபெற்ற ஆசிரியை ஒருவரின் சடலம் இன்றுகாலை மீட்கப்பட்டதாக பருத்தித்துறைப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். அதேயிடத்தைச் சேர்ந்த தருமராசா லக்;ஷ்மி (வயது 63) என்ற ஆசிரியையே சடலமாக மீட்கப்பட்டுள்ளார். வீட்டில் தனித்து வசித்து வந்த மேற்படி முன்னாள் ஆசிரியை, நேற்று தொடக்கம் வீட்டைவிட்டு வெளியில் வராததையடுத்து, சந்தேகம் கொண்ட அயலவர்கள் பருத்தித்துறைப் பொலிஸ் நிலையத்திற்குத் தகவல் கொடுத்தனர். இதனையடுத்து, ஆசிரியையின் வீட்டிற்குச் சென்று பார்த்தபோது, ஆசிரியை எரிந்த நிலையில் சடலமாகக் கிடந்துள்ளார். பின்னர் சடலம் மீட்கப்பட்டு, பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைகளுக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

யாழ்ப்பாணத்தில் குழு மோதல், ஒருவர் படுகாயம்-

unnamedயாழ். பருத்தித்துறை 2ஆம் குறுக்குத் தெருவில் இரண்டு குழுக்களுக்கிடையில் இடம்பெற்ற மோதலில் காயமடைந்த ஒருவர் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பருத்தித்துறைப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்றுமாலையே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் தும்பளையைச் சேர்ந்த தெய்வேந்திரன் ஸ்ரீரங்கன் (வயது 22) என்பவரே படுகாயமடைந்துள்ளார். இது தொடர்பிலான விசாரணைகளை மேற்கொண்டுவரும் பொலிஸார் பருத்தித்துறையைச் சேர்ந்த ஒருவரைக் சந்தேகத்தின் பேரில் கைது செய்ததாக தெரிவித்துள்ளனர். மேலும், இந்தக் கைகலப்புச் சம்பவத்தில் யாழ் – கொழும்பு தனியார் பஸ் ஒன்றும் சேதமாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பளைப் பிரதேசத்தில் இருந்து ஆயுதங்கள் மீட்பு-

கிளிநொச்சி, பளை, வேப்பங்கேணிப் பகுதியிலுள்ள தனியார் காணியிலுள்ள கிணற்றுக்குள் இருந்து ஆயுதங்கள் சில நேற்றுமாலை மீட்கப்பட்டதாக பளைப் பொலிஸார் தெரிவித்துள்னனர். எம் 75 கைக்குண்டு ஒன்றும், ஆர்.பி.ஜி குண்டொன்றுமே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளன. தற்போது, நிலவும் வரட்சி காரணமாக கிணற்று நீர் வற்றிய வேளையிலேயே மேற்படி ஆயுதங்கள் வெளிப்பட்டதாகவும், இது தொடர்பில் காணி உரிமையாளர் பளைப் பொலிஸாருக்குத் தெரியப்படுத்தியதாகவும் தெரிவித்துள்ள பொலிஸார், இராணுவத்தினரின் குண்டு செயலிழக்கும் பிரிவினருடன் சென்று ஆயுதங்களை மீட்டதாக குறிப்பிட்டுள்ளனர். இதேவேளை, பளை வன்னியங்கேணிப் பகுதியில் நிலத்தில் புதையுண்டு இருந்த 81 மில்லிமீற்றர் ஷெல் ஒன்றும் நேற்றையதினம் காலை மீட்கப்பட்டுள்ளதாகப் பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

தம்புள்ளை விபத்தில் காயமடைந்த இராணுவ வீரர் மரணம்-

மாத்தளை தம்புள்ளை, இத்தாமுலுவே பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் காயமடைந்து, வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த இராணுவவீரர் ஒருவர் உயிரிழந்துள்ளார். மொரவௌ இராணுவ முகாமை சேர்ந்த மேஜர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இன்றுகாலை தம்புள்ளை, இத்தாமுலுவே பிரதேசத்தில் இராணுவ டிரக்வண்டியும் தனியார் பஸ்ஸொன்றும் மோதி விபத்துக்குள்ளானதில் இராணுவத்தினர் மூவர் உட்பட 28 பேர் காயமடைந்து தம்புள்ளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர். இவர்களுள் இராணுவ மேஜர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்திருப்பதாக வைத்தியசாலை வட்டாரங்களின் தகவல்கள் கூறுகின்றன.

இலங்கை துணை உயர்ஸ்தானிகராலயம் முன்பு முற்றுகை போராட்டம்-

நாம் தமிழர் கட்சியினர் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள இலங்கை துணை உயர்ஸ்தானிகராலயம் முன் இன்று முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியுள்ளனர். இலங்கையின் இராணுவ இணையத்தளத்தில் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவை பற்றி அவதூறு பரப்பியதை கண்டித்தும், இலங்கையில் நடைபெறும் இராணுவ மாநாட்டில் இந்தியாவில் இருந்து யாரும் கலந்து கொள்ளக்கூடாது என வலியுறுத்தியும் இப்போராட்டம் நடத்தப்பட்டது. நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் போராட்டத்துக்கு தலைமை தாங்கினார்.