வடலியடைப்பு கலைவாணி சனசமூக கலையரங்க கட்டிடத்திற்கு நிதியுதவி-
யாழ் மாவட்டம் பண்டத்தரிப்பு வடலியடைப்பு கலைவாணி சனசமூக நிலைய இளைஞர் மன்றத்தினால் அதே இடத்தில் நிர்மாணிக்கப்பட்டு வரும் கலையரங்க கட்டடத்தின் தேவைக்காக நிதியுதவி ஒன்று நேற்றுமாலை (17.08.2014) புளொட் தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வடக்கு மாகாண சபை உறுப்பினருமான திரு. தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களினால் வழங்கப்பட்டுள்ளது. இதன்போது இந்நிதியினை மன்றத்தின் தலைவர் யோகேஸ்வரன் ராகவன் அவர்களிடம் சித்தார்த்தன் அவர்கள் கையளித்தார். பின்னர் சன சமூக நிலையத்தின் செயற்பாடுகள் தொடர்பாக புளொட் தலைவரும், வடக்கு மாகாணசபை உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் கேட்டறிந்து கொண்டார்.
காணாமல் போனோர் தொடர்பில் 20,000 முறைப்பாடுகள் பதிவு-
காணாமல் போனோர் தொடர்பாக விசாரணை செய்யும் ஆணைக்குழுவிற்கு இதுவரை சுமார் 20,000 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன. குறித்த குழுவினால் இதுவரை ஆறு கட்டங்களாக முறைப்பாடுகளைப் பதிவு செய்யும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இறுதியாக கடந்த 8ம் திகதி முதல் 11ம் திகதி வரை மன்னாரில் இந்த நடவடிக்கைகள் இடம்பெற்றன. இதன்போது 187 முறைப்பாடுகள் பதிவுசெய்யப்பட்டுள்ளன. அத்துடன் இவ்வருடம் ஜனவரி கிளிநொச்சியிலும் பெப்ரவரி யாழ்ப்பாணத்திலும் மார்ச் மட்டக்களப்பிலும் முறைப்பாடுகளைப் பதிவுசெய்யும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன. மேலும் ஜூன் முல்லைத்தீவிலும் ஜூலை மீண்டும் மட்டக்களப்பிலும் முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டன.
வெள்ளவத்தை கொள்ளைச் சந்தேநபருக்கு தடுப்புகாவல்-
கொழும்பு வெள்ளவத்தை பீற்றர்சன் வீதியிலுள்ள தொடர்மாடி குடியிருப்பிலுள்ள வீடொன்றிற்குள் புகுந்து 43 லட்சத்து 87 ஆயிரத்து 500 ரூபாய் வெளிநாட்டு பணம் மற்றும் நகைகளை கொள்ளையடித்தார் என்ற சந்தேகத்தில் கைதுசெய்யப்பட்ட நபரை தடுப்புகாவலில் வைத்து விசாரிக்குமாறு புதுக்கடை நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டுள்ளது. இதன்பிரகாரம் சந்தேகநபர், வெள்ளவத்தை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். இந்த கொள்ளைச்சம்பவம் ஓகஸ்ட் 8ஆம் திகதி இடம்பெற்றது. இச்சம்பவம் தொடர்பில் தெஹிவளையைச் சேர்ந்த 34 வயதான சந்தேக நபரொருவரை 16ஆம் திகதி அரலகங்வலவில வைத்து கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இவரால் கொள்ளையடிக்கப்பட்ட பொருட்களில், கொழும்பு செட்டியார்தெரு நகைக்கடையொன்றில் விற்பனை செய்யப்பட்ட 17 பவுண் தங்க நகைகளை இன்று மீட்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக வெள்ளவத்தை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அரசியல் சீர்திருத்தத்தை மாற்றுமாறு கோரிக்கை-
1978ஆம் ஆண்டு அரசியல் அமைப்பு சீர்திருத்தத்திற்கு மாற்றீடாக புதிய அரசியல் அமைப்பு சீர்த்திருத்தம் ஒன்று கொண்டுவரப்பட வேண்டும் என்று தேசிய சுதத்தர முன்னணி கோரிக்கை விடுத்துள்ளது. தேசிய சுதந்திர முன்னணியின் ஊடக பேச்சாளர் மொஹமட் முஸமில் கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் இந்திப்பின்போது இதனை குறிப்பிட்டுள்ளார். 78ஆம் ஆண்டு அரசியல் அமைச்சு சீர்திருத்திற்கு நட், போல்ட் என சிறுசிறு திருத்தங்கள் செய்து ஓட்டிக்கொண்டு செல்ல முடியாது. இந்நிலையில் அதனை முற்றாக மாற்றி புதிய அரசியலமைப்பு சீர்திருத்தம் ஒன்று கொண்டுவரப்பட வேண்டும். இது தொடர்பான சீர்திருத்தங்களை நாங்கள் ஜனாதிபதியிடம் கையளித்துள்ளோம் என்றார் அவர்.
போர் முடிவுக்குப் பின்னர் யாழில் தற்கொலை வீதம் அதிகரிப்பு-
வடக்கு மாகாணத்தில் யாழ். மாவட்டத்திலேயே தற்கொலை செய்துகொள்ளும் வீதம் அதிகரித்துள்ளது என யாழ். பல்கலைக்கழக மனநல துறை பேராசிரியர் தயா சோமசுந்தரம் தெரிவித்துள்ளார். பேராசிரியர் தயா சோமசுந்தரம் தான் சேகரித்துள்ள புள்ளிவிபரங்களுக்கு அமையவே இத்தகவலை வெளியிட்டுள்ளார். அதன்படி போர் முடிவிற்கு முன்னர் அதாவது 2005ஆம் ஆண்டுமுதல் 2009ஆம் ஆண்டுவரை யாழ்ப்பாணத்தில் தற்கொலை செய்து கொள்பவர்களின் எண்ணிக்கை ஒரு இலட்சம் பேருக்கு 23வீதமாக இருந்தது. அதன்பின்னர் போர் ஆரம்பமாகி அது தீவிரமடைந்த போது 2007ஆம் மற்றும் 2008ஆம் ஆண்டுகளில் தற்கொலை செய்வோரின் எண்ணிக்கை 20வீதமாக குறைந்தது. போர் உச்சக்கட்டத்திலும் தமிழ் சமூகம் கடும் அச்சுறுத்தலான நிலைமையில் இருந்த 2009ஆம் ஆண்டு தற்கொலைகளின் எண்ணிக்கை ஒரு இலட்சம் பேருக்கு 15 வீதமாக குறைந்திருந்தது. போர் முடிவடைந்து 2011ஆம் ஆண்டுவரை 25 வீதமாக இந்த தற்கொலைகளின் எண்ணிக்கை உயர்ந்தது. 2012ஆம் ஆண்டு மற்றும் 2013ஆம் ஆண்டுகளில் 24 வீதத்திலேயே இது காணப்பட்டது. முன்னைய இராணுவ நடவடிக்கைகள் இடம்பெற்ற காலத்துடன் ஒப்பிடும்போது, 2002ஆம் ஆண்டு முதல் 2004ஆம் ஆண்டு வரையான சமாதான காலத்திலும் தற்கொலைகளின் எண்ணிக்கை அதிகரித்திருந்தது என கூறப்பட்டுள்ளது.
18 வருடங்களுக்கு முன் கடத்தப்பட்ட வான் மீட்பு-
மட்டக்களப்பு சித்தாண்டியில் 18 வருடங்களுக்கு முன் கடத்தப்பட்ட வான் கொழும்பில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தபோது நேற்று கைப்பற்றப்பட்டுள்ளது. அத்துடன், சந்தேக நபர்கள் இருவரை கைதுசெய்துள்ளதாகவும், இந்த வான் 18 வருடங்களுக்கு முன் புலிகளினால் கடத்தப்பட்டதாகவும் ஏறாவூர் பொலிஸார் தெரிவித்துள்ளனர். கம்பஹா, வெலிவேரியாவிலுள்ள பாதையோரத்தில் வாகன விற்பனைச் சந்தை ஒன்றிலேயே இந்த வான் கைப்பற்றப்பட்டுள்ளது, இந்த வானை விற்பனைக்கு வைத்திருந்தததாகக் கூறப்படும் நபரும் வாகனப் பதிவுப்பெயரை மாற்றுவதற்கு விண்ணப்பித்திருந்த நபருமே கைதுசெய்யப்பட்டனர். இந்த வாகனத்தை விற்பனை செய்தவரை தேடி வருவதாகவும் பொலிஸார் கூறினர். மேலும், மட்டக்களப்பு பதில் நீதவான் டி.சின்னையா முன்னிலையில் நேற்று ஆஜர்படுத்தப்பட்ட இச் சந்தேகநபர்கள் இருவரையும் எதிர்வரும் 20ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு பதில் நீதவான் உத்தரவிட்டார். கடற்படை வீரரான தமிழர் ஒருவரும் அவரது குடும்பத்தினரும் மட்டக்களப்பிலிருந்து கொழும்பு சென்றுகொண்டிருந்தபோது 1996.08.11 அன்று ஏறாவூர், சித்தாண்டிச் சந்தியில் புலிகளால் கடத்தப்பட்டதாக ஏறாவூர் பொலிஸில் அன்று முறையிடப்பட்டிருந்தது. கடத்தப்பட்ட குடும்பத்தினர் பின்னர் புலிகளால் விடுதலைசெய்யப்பட்டதாக கூறுப்படுகிறது. கடந்த இரு மாதங்களுக்கு முன் வாகனப் பதிவுத் திணைக்களத்திலிருந்து பெயர் மாற்றுவதற்காக மெதகெதர லலித் பிரியங்க அபேகுணவர்தன என்பவர் கண்டி போலி முகவரியைக் கொடுத்து விண்ணப்பம் செய்துள்ளார்.