நிபுணர் குழுவுக்கு மேலும் இருவர் நியமனம்-
காணாமல் போனவர்கள் தொடர்பிலான முறைப்பாடுகள் தொடர்பில் ஆலோசனை வழங்குவதற்காக நியமிக்கப்பட்டுள்ள நிபுணர் குழுவுக்கு மேலும் இருவரை, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று செவ்வாய்க்கிழமை நியமித்துள்ளார். நிபுணர்களான அவ்தாஷ் கௌஷல், அஃமர் பீ சூபி ஆகிய இருவரே நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த குழுவுக்கு ஆலோசனை வழங்குவதற்கு சட்ட மேதைகளான டேஸ்மன்டி சில்வா, சேர் ஜேப்ரி நைஸ், டேவிட் எம். கிரேன் ஆகிய மூவரும், கடந்த ஜுலை 15ஆம்திகதி, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் நியமிக்கப்பட்டிருந்தனர்.
முள்ளிவாய்க்காலில் மர்மப்பொருள் வெடித்து ஒருவர் காயம்-
முல்லைத்தீவு – வெள்ளாம் முள்ளிவாய்க்கால் பகுதியில் மர்மப்பொருள் வெடித்ததில் ஒருவர் காயமடைந்துள்ளார். வீட்டுக் காணியை துப்பரவு செய்து நெருப்பு வைத்த சமயம் அங்கிருந்த மர்ப்பப் பொருளொன்று வெடித்துள்ளது. இச்சம்பவத்தில் வெள்ளாம் முள்ளிவாய்க்காலைச் சேர்ந்த வேலு செல்வநாயகம் என்பவர் காயமடைந்து வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். இச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை முல்லைத்தீவு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் செய்திகளை வாசிக்க…..
இந்தியப் பிரதமரின் இலங்கை விஜயம்-
இந்திய பிரதமர் நரேந்திர மோடி அடுத்த வருடம் முதல் மாதங்களில் இலங்கை வரவுள்ளதாக ஜனதாக கட்சியின் தலைவர் சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெறும் 4வது பாதுகாப்பு மாநாட்டில் பங்குகொள்வதற்காக சுப்பிரமணியன் சுவாமி தற்போது இலங்கை வந்துள்ளார். இதன்போது ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் வகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இலங்கைக்காக இந்தியா கொண்டுவரும் தீர்மானங்கள் பிராந்திய அரசாங்களில் அழுத்ததால் மாற்றமடைய போவதில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கருணாநிதியின் மனுவும் ஜெயலலிதா வழக்குடன் இணைகிறது-
கச்சத்தீவு தொடர்பான கருணாநிதி மனுவை ஜெயலலிதா வழக்குடன் சேர்த்து விசாரிக்க இந்திய உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கச்சத்தீவை மீட்க இந்திய மத்திய அரசுக்கு உத்தரவிட கோரி திமுக தலைவர் கருணாநிதி வழக்கு தொடர்ந்துள்ளார். 1974,1976 இந்திய மற்றும் இலங்கைக்கு இடையிலான ஒப்பந்தத்தை இரத்துச் செய்யவும் வலியுறுத்தியுள்ளார் என தமிழக ஊடகமான தினகரன் செய்தி வெளியிட்டுள்ளது. ஒப்பந்தத்தை மீறி தமிழக மீனவர்கள் இலங்கை படையால் தாக்கப்படுவதாக புகார் தெரிவித்துள்ளனர். கச்சத்தீவை மீட்கக் கோரி தமிழக வருவாய்த் துறையும் மனுத்தாக்கல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் இந்திய விஜயம்-
இந்தியாவிற்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றினை இம்மாத இறுதியில் மேற்கொள்ளவிருக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு புதிய இந்திய மத்திய அரசுடன் பேச்சுக்களை நடத்தவுள்ளதாக கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார். எதிர்வரும் மாதம் 05, 06, 07ஆம் திகதிகளில் வவுனியாவில் நடைபெறவுள்ள தமிழரசுக் கட்சியின் தேசிய மாநாட்டிற்கு முன்பதாக கூட்டமைப்பின் உயர்மட்டக் குழுவினர் இந்தியா செல்லவிருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். இதன்போது வடக்கு கிழக்கின் தற்போதைய நிலைமைகள், தமிழ் மக்களின் நிண்டகால அரசியல் பிரச்சினை தீர்வுக்கு இந்தியாவின் ஒத்துழைப்பு உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் இந்திய தரப்புக்கு தெளிவுபடுத்தப்படவுள்ளதாக கூறப்படுகின்றது.
வடமாகாண சபை உறுப்பினர்கள் மீது அரசாங்கம் குற்றச்சாட்டு-
தமக்கான அதிகாரங்களை பயன்படுத்தி பொதுமக்களுக்கு சேவைகளை வழங்குவதை விடுத்து மேற்குலக நாடுகளிடம் சென்று முறைப்பாடுகளை தெரிவிப்பது முற்போக்கான நிலைமை அல்லவென அரசாங்கம் தெரிவித்துள்ளது. வட மாகாண சபையின் சில உறுப்பினர்களின் செயற்பாடுகளை கண்டிக்கும் வகையில் வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் இக்கருத்தை வெளியிட்டுள்ளார். இராணுவத்தினரின் பாதுகாப்பு தொடர்பான மாநாடு நேற்று கொழும்பில் ஆரம்பமானது. இதில் கலந்துகொண்டு உரையாற்றிய அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ், வட மாகாண சபையின் சில உறுப்பினர்கள் ஐ.நா மனிதவுரிமைகள் ஆணையாளரிடம் முன்வைத்துள்ள முறைப்பாடுகளை கண்டித்துள்ளார். இம்மாநாட்டில் 43 நாடுகளைச் சேர்ந்த 350 க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் கலந்து கொண்டிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.
திருமலை வளாக மாணவர்கள் போராட்டம்-
கிழக்கு பல்கலைக்கழக திருகோணமலை வளாக மாணவர்கள் பல்கலைகழக மானியங்கள் ஆணைக்குழுவிற்கு முன்னால் நேற்று முற்பகல் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். திருமலை வளாக முன்னாள் முதல்வர் வைத்திய கலாநிதி வர்ணகுலேந்திரனை மீண்டும் வளாக முதல்வராக நியமிக்கக்கோரி ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டதாக கிழக்கு பல்கலைகழக உபவேந்தர் கலாநிதி கிட்ணர் கோபிந்தராஜா தெரிவித்தார். எனினும் மாணவர்கள் பல்கலைகழக மானியங்கள் ஆணைக்குழுவிற்கு சென்று இன்று ஆர்ப்பாட்டம் மேற்கொண்டமை தொடர்பில் பல்கலைகழக நிர்வாகத்திற்கு எவ்வித அறிவிப்புக்களையும் விடுக்கவில்லை எனவும் அவர் கூறியுள்ளார். மேலும், திருமலை வளாக முன்னாள் முதல்வரை மீண்டும் அவரது பதவிக்கு நியமிப்பது தொடர்பில் பல்கலைகழக பேரவையே தீர்மானிக்கும். திருமலை வளாக முன்னாள் முதல்வர்மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் தொடர்பில் விரிவான விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது என கலாநிதி கிட்ணர் கோபிந்தராஜா மேலும் கூறியுள்ளார்.