தமிழர்கள் சுயமரியாதையுடன் வாழ வேண்டும்-இந்தியா-

imagesஇலங்கையில் தமிழர்கள் சுயமரியாதையுடனும், சம உரிமையுடனும் வாழும் வகையிலான தீர்வு ஒன்று காணப்பட வேண்டும் என இந்தியா தெரிவித்துள்ளது. இந்தியாவின் வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் சயீட் அக்பருதீன் இதனைத் தெரிவித்துள்ளார். தமிழ் தேசியக் கூட்டமைப்பு பிரதிநிதிகள் நேற்றையதினம் இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஷ்மா சுவராஜை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியிருந்தனர் இது தொடர்பில் டெல்லியில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் வைத்து, அக்பருதீன் இக்கருத்தை வெளியிட்டுள்ளார். இலங்கையில் தமிழ் மக்கள் அனுபவிக்கின்ற துன்பங்கள் மற்றும் அரசியல் சூழ்நிலைகள் குறித்து தமிழ் தேசியக் கூட்டமைப்பு இந்தியாவிடம் தெளிவாக விளக்கப்படுத்தி இருப்பதாகவம் அவர் கூறியுள்ளார். மேலும் 13ம் திருத்தச்சட்டத்தின் முழுமையான அமுலாக்கம் உள்ளிட்ட ஐக்கியமான தீர்வு ஒன்று தொடர்பில் இந்தியா செயற்படும் என்றும் அக்பருதீன் கூறியுள்ளார்.

தமிழ் தேசிய கூட்டமைப்பினர் இந்தியப் பிரதமர் சந்திப்பு-

thamil thesiya koottamaippu indiaஇந்தியாவிற்கு விஜயம் செய்துள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பிரநிதிகள் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். தமிழ் மக்களின் பிரச்சினைகள், 13ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்துதல் உள்ளிட்ட முக்கிய விடயங்கள் குறித்து கூட்டமைப்பினர் நரேந்திர மோடியுடன் கலந்துரையாடியுள்ளனர். தமிழர் பிரச்சினைகளுக்கு தீர்வுகாண்பதில் இந்தியா பங்களிப்பு செய்யவேண்டியதன் முக்கியத்துவம் குறித்தும் கூட்டமைப்பினர் இதன்போது எடுத்துக்கூறியுள்ளனர். இதன்பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் அவர்கள், இந்த சந்திப்பு மிகவும் திருப்திகரமாக அமைந்தது. வடகிழக்கு மக்களின் நிலை தொடர்பாகவும், அவர்களின் உரிமைகள் தொடர்பாகவும் நாங்கள் கலந்து ஆலோசித்தோம். இந்த பிரச்சினை தொடர்பாக முக்கியமான சில கோரிக்கைகளை இந்திய அரசின் பார்வைக்கு முன் வைத்திருக்கிறோம். இலங்கையில் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் தற்போது நிலவும் களநிலைமை, நமது மக்கள் எதிர்கொள்ளும் பல்வேறு பிரச்சினைகள் குறித்தும் அங்குள்ள மக்களின் இனவிகித விகிதாச்சாரத்தை மாற்றி அமைப்பதற்கும், மொழிரீதியான கலாசாரரீதியான அடையாளங்களை மாற்றி அமைப்பதற்கும் இலங்கை அரசாங்கத்தால் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் குறித்தும் எடுத்துச் சொன்னோம். இலங்கை அரசின் இந்த நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டு அங்குள்ள மக்கள் சுதந்திரமாக வாழ்வதற்கான நிலைமை உருவாக வேண்டும் என்ற கருத்தை நாங்கள் வலியுறுத்தியிருக்கிறோம். அங்கு இன்னும் பல்லாயிரக்கணக்கான மக்கள் வீடுகளில் குடியேறமுடியாத நிலைமை உள்ளது. தமிழ்நாட்டில் அகதிகளாக வந்துள்ள மக்கள் மீண்டும் இலங்கையில் குடியேற வேண்டும். இது நடக்க வேண்டும் என்றால் இராணுவம் அங்கிருந்து வெளியேற்றப்பட வேண்டும். இராணுவம் தமிழ் மக்களின் இடங்களை இன்னும் கைப்பற்றி வைத்துள்ளது. மக்களின் அமைதியான வாழ்வுக்கு எதிராக இலங்கை அரசாங்கம் இயங்குகிறது. இது தொடர்பாக உரிய நடவடிக்கைகளை இந்திய அரசாங்கம் எடுக்க வேண்டும். இலங்கை அரசாங்கத்துக்கு புரியும் வகையில் இந்திய அரசாங்கம் அவர்களிடம் எடுத்துச் சொல்ல வேண்டும் என எதிர்பார்க்கிறோம். அரசியல் தீர்வு தொடர்பாக இலங்கை அரசு எந்த விதமான ஆக்கபூர்வமான நடவடிக்கைகளிலும் ஈடுபடவில்லை. அது எங்களுக்கு திருப்திகரமாக இல்லை. இப்பிரச்சினைக்கு நிரந்தரமான அரசியல் தீர்வு காணப்பட வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.