சுன்னாகம் கிணறுகளில் கழிவெண்ணெய் கசிவு, மாகாணசபை உறுப்பினர்கள் ஆராய்வு-
வலிகாமம் தெற்குப் பிரதேசத்திற்குட்பட்ட சுன்னாகம் பிரதேச கிணறுகளில் காணப்படுகின்ற கழிவு எண்ணெய்க் கசிவு ஒரு பாரிய பிரச்சினையாக உருவெடுத்துள்ளது. இந்தப் பிரச்சினையை நிவர்த்தி செய்யும் நோக்குடன் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வடக்கு மாகாணசபை விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன், மாகாணசபை உறுப்பினர்கள் தர்மலிங்கம் சித்தார்த்தன், பா.கஜதீபன், பிரதேச சபை தவிசாளர் பிரகாஸ் மற்றும் பிரதேச சபை உறுப்பினர்கள் நேற்றையதினம் (23.08.2014) அப்பகுதிகளுக்குச் சென்று கிணறுகளை பரிசோதித்துள்ளனர். இதுபற்றி புளொட் தலைவரும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வடக்கு மாகாணசபை உறுப்பினருமாகிய திரு. தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள் கூறுகையில்,
சுன்னாகத்தில் இயங்குகின்ற இலங்கை மின்சார சபையின் சுன்னாகம் மின்சார நிலைய மின்பிறப்பாக்கியில் இருந்து நிலத்திலே விடப்படுகின்ற கழிவு எண்ணெய் நிலத்திற்குள் ஊற்றுநீருடன் கலந்து சுன்னாகம் பிரதேசத்தின் பெரும் பகுதிகளில் கிட்டத்தட்ட 700 முதல் 800 குடும்பங்களின் கிணறுகளில் நீருடன் கழிவெண்ணெய் கலந்திருக்கின்றது. இது ஒரு மிகப்பெரிய பிரச்சினையாக உருவாகியிருக்கின்றது. பிரதேச மக்கள் அந்தத் தண்ணீரை குடிப்பதற்கோ, குளிப்பதற்கோ அல்லது தோட்டத்திற்கு நீர்ப் பாய்ச்சுவதற்கோ முடியாத நிலையில் உள்ளனர்.. அத்துடன் இந்த கழிவெண்ணெய் கசிவானது சுன்னாகம் மாத்திரமன்றி பல்வேறு பகுதிகளுக்கும் பரவிக்கொண்டே வருகின்றது. ஆகவே இப்பிரச்சினைக்கு தீர்வுகாண்பதன் முதற் கட்டமாக மக்களின் உடனடித் தேவையினை நிவர்த்திப்பதற்காக வட மாகாணசபை ஒரு தண்ணீர் பவுஸரை வழங்கியிருக்கிறது. அடுத்த கட்டமாக மின்சார சபைக்கு எதிராக வழக்குத் தொடரவும் யோசித்திருக்கின்றது. இப்பிரச்சினையைத் தீர்ப்பதற்கான அடுத்தகட்ட முயற்சிகளை மேற்கொள்ளும் நோக்குடனேயே நேற்றையதினம் பிரதேசத்திற்கு சென்று கிணறுகளை பார்வையிட்டுள்ளோம். இலங்கை மின்சார நிலைக்கு அல்லது சுன்னாகம் மின்சார நிலையமோ வடக்கு மாகாண சபையின் அதிகாரத்திற்கு உட்படாதவையாகும். ஆகவே வடக்கு மாகாணசபை மத்திய அமைச்சருடனோ ஜனாதிபதியுடனோ தொடர்பு கொண்டுதான் இப்பிரச்சினைக்கு தீர்வைக் காணவேண்டியது அவசியமாகும் என்று தெரிவித்துள்ளார்.
சுன்னாகம் கழிவு எண்ணெய்க்கசிவு பிரச்சினைக்கு தீர்வுகாண வேண்டும்-த.சித்தார்த்தன்-
வலிகாமம் தெற்குப் பிரதேசத்திற்குட்பட்ட சுன்னாகம் பிரதேச கிணறுகளில் காணப்படுகின்ற கழிவு எண்ணெய் பிரச்சினைக்கு உரிய தீர்வினைக் காண்பதற்காக ஜனாதிபதியுடனும் மின்சக்தி எரிசக்தி அமைச்சருடனும் வட மாகாணசபை தொடர்புகொள்ள வேண்டுமென்று புளொட் தலைவரும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வடக்கு மாகாணசபை உறுப்பினருமாகிய திரு. தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளார். வட மாகாணசபையின் 14ஆவது அமர்வில் (21.08.2014) வரட்சி தொடர்பான கலந்துரையாடலில் உரையாற்றியபோதே அவர் இதனைக் கூறியுள்ளார். அவர் மேலும் கூறுகையில், சுன்னாகம் பிரதேசத்தில் ஏற்பட்டுள்ள கழிவு எண்ணெய்க் கசிவு சிறிது சிறிதாக அதிகரித்து ஏழாலையிலுள்ள கிணறுகளையும் மாசடையச் செய்துள்ளது. இது தொடர்ந்து காங்கேசன்துறை வரை செல்லக்கூடிய அபாய நிலையும் தோன்றியுள்ளது. இவ்விடயம் தொடர்பாக துறைசார் வல்லுநர்களுடன் தொடர்புகொண்டபோது இதன் பாதிப்பு நீண்டகாலப் பிரச்சினையாகும் என அவர்கள் எம்மிடம் தெரிவிக்கின்றனர். எனவே இதற்கு நிரந்தரத் தீர்வினைக் காணவேண்டியது மிகவும் அவசியமாகும். இத் தண்ணீரில் முகம்கூடக் கழுவக்கூடாது என நிபுணர்கள் கூறுகின்றார்கள். இதனை இப்படியே விட்டால் பல இடங்களுக்கும் பரவக்கூடிய வாய்ப்புள்ளது. இப் பகுதியில் வீட்டுத்தேவை மட்டுமன்றி விவசாய நிலங்களும் உள்ளன. ஆகவே இதனை முக்கிய பிரச்சினையாக எடுத்து ஜனாதிபதியுடனும் மின்சார அமைச்சருடனும் இந்த மாகாணசபை தொடர்புகொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும். எனவே இது தொடர்பில் முதலமைச்சர் பொறுப்பானவர்களுடன் கலந்துரையாடுவதுடன் ஜனாதிபதியுடனும் கலந்துரையாடி இதற்குத் தீர்வு காண வேண்டும் என்று தெரிவித்தார்.
அமெரிக்க ஊடகவியலாளருக்கு விசா நிராகரிக்கப்படவில்லை- வெளிவிவகார அமைச்சு
அமெரிக்க ஊடகவியலாளர் ஒருவருக்கு விசா வழங்கும் நடவடிக்கை தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகவும், அவருக்கான விசா நிராகரிக்கப்படவில்லை எனவும் வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. உரிய காலத்திற்கு விசாவிற்கு விண்ணப்பம் செய்யுமாறு குறித்த ஊடகவியலாளருக்கு அறிவித்தல் விடுக்கப்பட்டிருப்பதாகவும் வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார். கார்டினர் ஹாரிஷ் என்ற ஊடகவியலாளருக்கே இலங்கைக்கான விசா வழங்குவது ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேற்படி ஊடகவியலாளருக்கு தற்போது விசா வழங்குவதற்காக உரிய சந்தர்ப்பம் இல்லை என சுட்டிக்காட்டியுள்ள வெளிவிவகார அமைச்சு, அவரது விசாவுக்கான விண்ணப்பம் நிராகரிக்கப்படவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளது. டெல்லியுலுள்ள இலங்கை தூதரகத்தினூடாக அமெரிக்க ஊடகவியலாளரான கார்டினர் ஹாரிஷ் விசாவிற்கு விண்ணப்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஏனைய கட்சிகளையும் இந்தியா பேச்சுவார்த்தைக்கு அழைக்கும்-
தமிழ் தேசிய கூட்டமைப்பு தவிர்ந்த ஏனைய கட்சிகளையும் இந்திய அழைத்து பேச்சுவார்த்தை நடத்த திட்டமிட்டுள்ளதாக இந்திய அரசாங்கம் தெரிவித்துள்ளது. தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்திய அரசின் அழைப்பின்பேரில் அங்கு சென்றுள்ளனர். அவர்;கள் இன்றிரவு நாடு திரும்பவுள்ளனர். இலங்கையின் அரசியல் கட்சிகளை அழைத்து இனப்பிரச்சினை தீர்வு தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்தும் இந்திய அரசின் திட்டத்தின் ஒரு கட்டமாகவே கூட்டமைப்பு இந்தியாவுக்கு அழைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. தமிழ் தேசிய கூட்டமைப்பு இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஸ்மா சுவராஜை சந்தித்த பின்னர், வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் சயீட் அக்பர்தீன் செய்தியாளர்களிடம் இக்கருத்தை வெளியிட்டிருந்தார். நேற்று இந்திய பிரதமர் நரேந்திர மோடியை கூட்டமைப்பு சந்தித்த பின்னர், இந்திய அரசினால் வெளியிடப்பட்டிருந்த அறிக்கையிலும் இவ்விடயம் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது. இதன்படி எதிர்காலத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு, ஜேபிபி மற்றும் ஐக்கிய தேசிய கட்சி போன்ற கட்சிகளும் இந்தியாவுக்கு அழைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தபால்மூல வாக்குச் சீட்டுக்கள் நாளை முதல் விநியோகம்-
ஊவா மாகாணசபை தேர்தலின் தபால் மூல வாக்களிப்புக்கான வாக்குச் சீட்டுக்கள் அடங்கி காப்புறுதி பக்கெட்டுக்கள் தபால் திணைக்களத்திடம் நாளை ஒப்படைக்கப்படவுள்ளதாக தேர்தல்கள் செயலகம் தெரிவித்துள்ளது. வாக்குச் சீட்டுக்கள் அடங்கி காப்புறுதி பக்கெட்டுக்கள் தபால் திணைக்களத்திடம் ஒப்படைப்பதற்கான நடவடிக்கைகள் நிறைவடைந்துள்ளதாக பிரதித் தேர்தல்கள் ஆணையாளர் எம்.எம். மொஹமட் கூறியுள்ளார். இதேவேளை, தபால்மூல வாக்களிப்பு தினமான செப்டம்பர் 04ஆம் மற்றும் 05ஆம் திகதிகளில் வாக்களிக்க முடியாத தபால்மூல வாக்காளர்களுக்கு, செப்டம்பர் 11ஆம் திகதி வாக்களிப்பதற்கான சந்தர்ப்பம் வழங்கப்படும் எனவும் அவர் கூறியுள்ளார். மேலும் தேர்தல்கள் செயலகத்திடமிருந்து பெற்றுக்கொள்ளும் தபால்மூல வாக்குச்சீட்டுக்கள் அடங்கிய காப்புறுதி பக்கெட்டுக்களை உரிய திணைக்களங்களுக்கு, எதிர்வரும் 27ஆம் திகதி விநியோகிக்கவுள்ளதாக தபால் மாஅதிபர் ரோஹன அபேரத்ன கூறியுள்ளார். வாக்களிப்பு தினமான செப்டம்பர் 4ஆம் திகதிக்கு முன்னதாக உரிய திணைக்களங்களிடம் வாக்குச்சீட்டு பொதிகள் ஒப்படைக்கப்படும் என்றார் அவர்.
வாழைச்சேனை கொலை தொடர்பில் மூன்று பெண்கள் கைது-
மட்டக்களப்பு வாழைச்சேனை, மீராவோடை பகுதியில் இடம்பெற்ற கொலைச் சம்பவம் தொடர்பில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேகநபர்கள் நேற்று மாலை கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த கொலைச் சம்பவம் நேற்றுமாலை இடம்பெற்றுள்ளது. வாழைச்சேனை, காவத்தைமுனையைச் சேர்ந்த 38 வயதான ஒருவரே பொல்லால் தாக்கப்பட்டு கொலைசெய்யப்பட்டுள்ளார். உயிரிழந்தவரின் சடலம் வாழைச்சேனை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன என வாழைச்சேனை பொலிஸார் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.
அமெரிக்காவுடன் சீரான உறவு-
அமெரிக்காவுடன் இலங்கை அரசாங்கம் சீரான உறவினை பேணி வருவதாக அமெரிக்காவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் பிரசாத் காரியவசம் தெரிவித்துள்ளார். ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் அவர் இதனை கூறியுள்ளார். இலங்கையின் மனித உரிமைகள் விடயத்தில் அமெரிக்கா கடுமையாக நடந்துகொள்கிறது. எனினும் அமெரிக்காவுடன் சிறந்த உறவினை பேண இலங்கை தயாராக இருக்கிறது. இவ்விடயம் குறித்து அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவுடனும் வேறு பலத் தரப்புக்களுடனும் தாம் கலந்துரையாடி இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
காணாமல் போனோர் ஆணைக்குழு கிளிநொச்சியில் விசாரணை-
காணாமல் போனோர் தொடர்பான ஜனாதிபதியின் ஆணைக்குழு அடுத்த மாதம் கிளிநொச்சியில் தமது விசாரணைகளை நடத்தவுள்ளது. ஆணைக்குழுவின் தலைவர் மெக்ஸ்வல் பரணகம இதனைத் தெரிவித்துள்ளார். காணாமல் போனோர் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் இரண்டாம் கட்ட அமர்வாக இந்த விஜயம் அமையும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். பெரும்பாலும் எதிர்வரும் செப்டம்பர் மாதம் 18ம் திகதி முதல் 22ம் திகதி வரையில் கிளிநொச்சியில் இந்த விசாரணைகள் இடம்பெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வருடத்தில் 100 கைதிகள் தப்பியோட்டம்-
இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் நூறு கைதிகள் வரை தப்பிச் சென்றுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. சிறு குற்றங்களுக்காக தண்டனை பெற்று வந்த கைதிகளே இவ்வாறு தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மேலும் நீதிமன்ற நடவடிக்கைகளுக்காக கைதிகளை அழைத்துச் செல்லும் வேளை தப்பிச் சென்ற சம்பவங்களும் பதிவாகியுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. இதேவேளை தப்பிச் சென்ற கைதிகளை மீண்டும் கைது செய்ய பொலிஸ் நிலையங்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.