இலங்கைக்கு கப்பல்களை வழங்கும் ஜப்பான்-
இலங்கையின் கடலோரப் பாதுகாப்பினைப் பலப்படுத்தும் நோக்கில் கண்காணிப்புக் கப்பல்களை ஜப்பான் வழங்கவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஜப்பான் நாட்டின் அதிகாரியொருவர் இந்த தகவலை வெளியிட்டுள்ளார். எதிர்வரும் செப்டம்பர் மாதம் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ள ஜப்பானிய பிரதமர் இது குறித்து இலங்கைக்கு அறிவிப்பார் என தெரிவிக்கப்படுகிறது. இந்து சமுத்திர கடற்பாதையூடாகவே ஜப்பானில் இருந்து மத்திய கிழக்கிற்கு செல்லும் எண்ணெய்க் கப்பல்கள் செல்கின்றன. அவற்றின் பாதுகாப்பினைக் கருத்தில் கொண்டு இந்தக் கண்காணிப்புக் கப்பல்கள் இலங்கைக்கு வழங்கப்படவுள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகிறது.
வடக்குக்கு காணி காவல்துறை அதிகாரம் இல்லை – எஸ் பி-
காவல்துறை மற்றும் காணி அதிகாரம் வடக்கு மாகாண சபைக்கு வழங்கப்படாது என உயர் கல்வி அமைச்சர் எஸ்.பி திஸாநாயக்க தெரிவித்துள்ளார். பதுள்ளை – பஸ்சர பிரதேசத்தில் நேற்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பெற்றின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். மீண்டும் ஆயுதப் போராட்டம் ஒன்று இடம்பெறாமல் இருக்கவேண்டும் எனில் வடக்கு மாகாணத்திற்கு காவல்துறை மற்றும் காணி அதிகாரம் வழக்கப்பட கூடாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் செய்திகளை வாசிக்க……
மன்னாரில் அகற்றப்பட்ட பிள்ளையார் சிலையை அதே இடத்தில் நிர்மாணிக்க உத்தரவு-
மன்னார் திருக்கேதீஸ்வரம் சிறுநாவல்குளம் பகுதியிலுள்ள வெற்றுக்காணியில் அமைக்கப்பட்டிருந்த பிள்ளையார் சிலை அகற்றப்பட்டமை தொடர்பிலான வழக்கு விசாரணை மன்னார் நீதவான் நீதிமன்றத்தில் இன்று நடைபெற்றது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஆனந்தி கனகரட்னம் அதே காணியில் பிள்ளையார் சிலையை மீள நிர்மாணிக்குமாறு உத்தரவிட்டுள்ளார். வெற்றுக் காணியில் அமைக்கப்பட்டிருந்த பிள்ளையார் சிலை கடந்த பெப்ரவரி மாதம் அகற்றப்பட்டமை தொடர்பில் பெண் ஒருவர் உள்ளிட்ட இருவர் கைது செய்யப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர். சிலை அகற்றப்பட்ட சம்பவத்தை நேரில் கண்டவர்கள் வழங்கிய தகவலுக்கமைய பொலிஸார் இவர்களை கைதுசெய்து, வழக்கு தொடர்ந்தனர். பிள்ளையார் சிலை அமைக்கப்பட்டிருந்த காணி தமக்கு சொந்தமானது என கூறி கைதுசெய்யப்பட்ட பெண் ஆவணங்களை நீதிமன்றத்தில் சமர்ப்பித்ததாக கூறப்படுகிறது.
தபால்மூல வாக்குச் சீட்டுக்கள் இன்றுமுதல் விநியோகம்-
ஊவா மாகாண சபை தேர்தலின் தபால்மூல வாக்களிப்புக்கான வாக்குச்சீட்டுக்கள் அடங்கிய காப்புறுதி பக்கெட்டுக்கள் தபால் திணைக்களத்திடம் இன்று ஒப்படைக்கப்படவுள்ளதாக தேர்தல்கள் செயலகம் தெரிவித்துள்ளது. தபால்மூலம் வாக்களிப்பதற்கு 30 ஆயிரத்து 656 அரச உத்தியோகத்தர்கள் தகுதிபெற்றுள்ளதாக பிரதித் தேர்தல்கள் ஆணையாளர் ஏம் எம் மொஹமட் கூறியுள்ளார். தபால்மூலம் வாக்களிக்க 42ஆயிரத்து 36பேர் விண்ணப்பித்திருந்த போதிலும், அவர்களில் 11,380பேரின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். தபால்மூல வாக்களிப்பு தினமான செப்டம்பர் 04ஆம் 05ஆம் திகதிகளில் வாக்களிக்க முடியாத தபால்மூல வாக்காளர்களுக்கு, செப்டம்பர் 11ஆம் திகதி வாக்களிக்க சந்தர்ப்பம் வழங்கப்படும் எனவும் அவர் கூறியுள்ளார். இதேவேளை, தபால்மூல வாக்குச் சீட்டுக்கள் அடங்கிய காப்புறுதி பக்கெட்டுக்களை உரிய திணைக்களங்களுக்கு பகிர்ந்தளிப்பதற்கு தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தபால்மா அதிபர் ரோஹன அபேரத்ன தெரிவித்துள்ளார்.
சட்டத்தரணிகள் சங்கத் தலைவருக்கு உயிர் அச்சுறுத்தல்-
இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் உப்புல் ஜயசூரியவுக்கு உயிரச்சுறுத்தல் இல்லை என மேல் மாகாண சிரேஷ்ட பிரதி காவல்துறை மா அதிபர் அனுர சேனாநாயக்க இன்றையதினம் நீதிமன்றில் தெரிவித்துள்ளார். சட்டம் மற்றும் சமாதானம் தொடர்பான அமைச்சினால் வழங்கப்பட்ட அறிக்கை நீதிமனறில் சமர்பிக்கப்பட்டது. அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று சட்டத்தரணியின் வாகனத்தை கடந்து சென்றமை குறித்த வழக்கு கொழும்பு நீதவான் நீதிமன்றில் இடம்பெற்றது. சட்டத்தரணிகள் சங்க தலைவரின் பாதுகாப்பு தொடர்பில் தாம் பொறுப்பேற்றுக் கொள்வதாக மேல் மாகாண சிரேஷ்ட பிரதி காவல்துறை மா அதிபர் அனுர சேனாநாயக்க உறுதியளித்துள்ளார். எனினும், விடயங்களை ஆராய்ந்த பிரதான நீதிமன்ற நீதிவான் வழக்கை ஒக்டோபர் மாதம் 20 ஆம் திகதி வரை ஒத்திவைத்துள்ளார்.
ஊவா தேர்தல்: 18 கட்சி அலுவலகங்கள் மீது தாக்குதல்-
மொனராகலை, பிபில தேர்தல் தொகுதிகளில், நேற்றையதினம் 18 கட்சி அலுவலகங்கள் தாக்கப்பட்டுள்ளதாக கபே அமைப்பு தெரிவித்துள்ளது. அலுவலகத்திற்குள் ஆயுதங்களுடன் நுழைந்த சிலர் தாக்குதல் நடத்தியுள்ளதோடு, பிரதேசத்திலுள்ள வேட்பாளர்கள் மற்றும் அரசியல்வாதிகளுக்கு மிரட்டல் விடுத்துச் சென்றுள்ளதாகவும் அந்த அமைப்புக் கூறியுள்ளது. 13 ஐக்கிய தேசியக் கட்சி அலுவலகங்கள், நான்கு மக்கள் விடுதலை முன்னணி அலுவலகங்கள் மற்றும் ஒரு ஜனநாயக மக்கள் கட்சி அலுவலகமும், இவ்வாறு தாக்குதலுக்குள்ளாகி சேதமடைந்துள்ளதாக கபேயின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. நேற்று அதிகாலை முதல் சுமார் ஆறு மணித்தியாலங்களுக்குள் தொடர்ச்சியாக இவ்வாறான தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதென அவ்அறிக்கை மேலும் கூறுகின்றது. இதேவேளை, பிபில-மொனராகலை வீதியிலுள்ள கணுல்வல ஐக்கிய தேசியக் கட்சி அலுவலக உரிமையாளர் வீட்டிற்கு சென்ற சிலர் துப்பாக்கியைக் காட்டி மிரட்டியுள்ளதாக அவர் கூறியுள்ளதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது. ஊவா மாகாண சபை தேர்தல் ஆரம்பமானது முதல் தற்போது வரை 74 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும், அதில் நேற்றே அதிக சம்பவங்கள் பதிவாகியுள்ளதாகவும் கொபே வெளியிட்டுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.