பாகிஸ்தான் வான்படைத் தளபதி இலங்கைக்கு விஜயம்-
மூன்று நாள் விஜயம் மேற்கொண்டு, பாகிஸ்தானின் விமானப் படையின் தலைமையதிகாரி எயார் சீப் மார்ஷல் தாஹிர் ரபீக் பட் இன்றையதினம் இலங்கை வரவுள்ளார். வான்படை தளபதி எயார் மார்ஷல் கே.ஏ குணதிலக்கவின் அழைப்பின்பேரில் அவர் இலங்கை விஜயம் செய்யவுள்ளார். அவர் நாட்டில் தங்கியிருக்கும் காலப்பகுதியினுள், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ச மற்றும் பாதுகாப்பு அதிகாரிகளை சந்திக்கவுள்ளார். இரு தரப்பு உறவுகள், எதிர்கால செயற்திட்டங்கள் மற்றும் சகோதரத்துவம் என்பன தொடர்பாக விரிவாக ஆராயப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கச்சதீவை மீள பெற முடியாது – இந்திய சட்டமா அதிபர்-
கச்சத்தீவை மீண்டும் இலங்கையிடம் இருந்து மீள பெறமுடியாது என இந்திய சட்டமா அதிபர் முகுல் ரோஹாட்டிஹி இந்திய உயர் நீதிமன்றில் அறிவித்துள்ளார். கச்சதீவை மீள பெறுவதற்காக தமிழக முதல்வர் ஜெயலலிதா ஜெயராமும், முன்னாள் முதல்வர் முத்துவோல் கருணாநிதியும் தாக்கல் செய்திருந்த இரண்டு மனுக்கள் மீதான விசாரணையின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். 1974ஆம் ஆண்டு ஏற்படுத்திக் கொள்ளப்பட்ட இரு தரப்பு இணக்காப்பாட்டின் அடிப்படையில் இந்த தீவின் அதிகாரம் இல்கைக்கு வழங்கப்பட்டுள்ளது. இதனை மீள பெற வேண்டுமென்றால் இலங்கையுடன் யுத்தம் செய்ய வேண்டிய நிலை ஏற்படும் என்றும் சட்டமா அதிபர் இதன்போது மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
வடக்கு கிழக்கில் 97 சதவீத கண்ணிவெடி அகற்றல்-
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் நிலக்கண்ணி வெடிகளை அகற்றும் பணிகளில் 97 சதவீதமானவை பூர்த்தியடைந்துள்ளதாக இராணுவம் தெரிவித்துள்ளது. இராணுவ பேச்சாளர் ருவாண் வணிகசூரிய இதனை கூறியுள்ளார். பாதுகாப்பமைச்சில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் உரையாற்றிய அவர் யுத்தம் நிறைவடையும்போது 5ஆயிரம் சதுர கிலோ மீற்றரில் நிலகண்ணி வெடிகள் காணப்பட்டதாக அவர் கூறினார். எஞ்சியுள்ள பகுதிகளிலும் கண்ணி வெடி அகற்றும் பணிகள் நிறைவில் பூர்த்தியாகும் எனவும் அவர் இதன்போது குறிப்பிட்டுள்ளார்.
21 விடயங்கள் அடங்கிய பிரேரணை-
தற்போதைய தேர்தல் முறைமை மாற்றப்பட வேண்டிய முறைமை உள்ளிட்ட 21 விடயங்கள் அடங்கிய பிரேரணை ஒன்று அரசாங்கத்திடம் கையளிக்கப்படவுள்ளது. இதனை மக்கள் ஐக்கிய முன்னணி தெரிவித்துள்ளது. மக்கள் ஐக்கிய முன்னணியின் 21வது தேசிய சம்மேளனத்தின் போது குறித்த பிரேரணை நிறைவேற்றப்பட்டதாக அதன் தலைவர் அமைச்சர் தினேஷ் குணவர்த்தன தெரிவித்துள்ளார். இந்த பிரேரணை தொடர்பில் ஏனைய கட்சிகளுடன் கலந்துரையாடவுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
இரு இந்திய இஸ்லாமியர்கள் கைது-
பாராளுமன்ற கட்டிடம் உட்பட இலங்கையின் முக்கிய இடங்கள் சிலவற்றின் புகைப்படங்களை வைத்திருந்த இரு இந்திய இஸ்லாமியர்கள் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இவர்கள் கொழும்பு முகத்துவாரம் பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டதாகவும் அவர்கள் வைத்திருந்த மடிக்கணணி மற்றும் புகைப்படக்கருவி ஆகியவற்றை சோதனை செய்த வேளை பாதுகாப்பு வலயத்திற்குள் அடங்கும் முக்கிய கட்டிடங்களின் படங்கள் காணப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். சென்னையை சேர்ந்த இருவரும் முகத்துவாரம் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்ட நிலையில் தற்போது மேலதிக விசாரணைக்காக பயங்கரவாத புலனாய்வு பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
விமானப்படைத் தளம் தாக்குதல் புலி உறுப்பினருக்கு விளக்கமறியல்-
அனுராதபுரம் விமானப்படைத் தளம் மீது நடாத்தப்பட்ட தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய புலிகள் இயக்க உறுப்பினரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு அனுராதபுரம் விசேட நீதிமன்றம் இன்றையதினம் உத்தரவிட்டுள்ளது. தவரூபன் என்று அழைக்கப்படும் விடுதலைப் புலிகள் இயக்க உறுப்பினரையே எதிர்வரும் ஒக்டோபர் 10ஆம் திகதி வரை இவ்வாறு தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு அனுராதபுரம் விசேட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 2007ம் ஆண்டு செப்டெம்பர் 22ம் திகதி விடுதலைப் புலிகளால் அனுராதபுரம் விமானப்படைத் தளம் மீது தாக்குதல் நடத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.