பாகிஸ்தான் – இலங்கை விமானப் படைத்தளபதிகள் சந்திப்பு-
இலங்கைக்கு விஜயம் செய்துள்ள பாகிஸ்தான் விமானப் படைத்தளபதி எயார் சீப் மார்ஷல் தாஹீர் ரபீக் பட் இலங்கை விமானப் படைத்தளபதி எயார் மார்ஷல் கோலித குணதிலக்கவை நேற்றையதினம் கொழும்பில் உள்ள விமானப் படை தலைமையகத்தில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். இதன்போது இரு நாடுகளில் பாதுகாப்பு நிலைமைகள் குறித்து பல விடயங்கள் பேசப்பட்டுள்ளன. சந்திப்பின் இறுதியில் இரு நாட்டு விமானப்படைத் தளபதிகளும் நினைவு பரிசுகளையும் பரிமாறிக் கொண்டதாக விமானப்படை தலைமையகம் அறிவித்துள்ளது.
ஊவா மாகாண சபைத் தேர்தல் தொடர்பில் 84 முறைப்பாடுகள் பதிவு-
ஊவா மாகாணசபைத் தேர்தல் தொடர்பில் தேர்தல்கள் செயலகத்திற்கு கிடைத்துள்ள முறைப்பாடுகளின் எண்ணிக்கை 84 ஆக அதிகரித்துள்ளது. மொனராகலை மாவட்டத்தில் 54 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக செயலகத்தின் முறைப்பாடுகளை ஏற்றுக்கொள்ளும் பிரிவு குறிப்பிட்டுள்ளது. இவற்றில் தாக்குதல்கள் மற்றும் அச்சுறுத்தல் சம்பவங்கள் தொடர்பான 12 முறைப்பாடுகளும் அடங்குகின்றன. அரச உத்தியோகத்தர்களை அரசியற் நடவடிக்கைகளில் ஈடுபடுத்துகின்றமை தொடர்பில் 14 சம்பவங்கள் பதிவாகியுள்ளன. அரச சொத்துக்கள் பாவனை தொடர்பில் 07 முறைப்பாடுகளும், சுவரொட்டிகள் காட்சிப்படுத்துகின்றமை தொடர்பில் 27 முறைப்பாடுகளும் தேர்தல்கள் செயலகத்திற்கு பதிவாகியுள்ளன.
ரயிலில் குழப்பம் விளைவித்த இராணுவத்தினர் கைது-
யாழ்தேவி ரயிலில் குழப்பம் விளைவித்ததாக கூறப்படும் மூன்று இராணுவத்தினர் கைது செய்யப்பட்டுள்ளனர். ரயில் பரிசோதகருடன் ஏற்பட்ட தகராறு காணரமாக பனாகொடை இராணுவ முகாமைச் சேர்ந்த மூன்று இராணுவத்தினர் நேற்று பிற்பகல் கைதுசெய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது. பளையிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த யாழ்.தேவி ரயிலில் அனுராதபுரத்தில் வைத்து இராணுவத்தினர் ஏறியுள்ளனர். ரயில் பரிசோதகருடன் ஏற்பட்ட தகராறை அடுத்து, அவர்மீது மூன்று இராணுவத்தினரும் தாக்குதல் நடத்தியதாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. தாக்குதலுக்கு இலக்கான ரயில் பரிசோதகர் கல்கமுவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மருத்துவ தொழிநுட்ப பணியாளர்களின் பணிநிறுத்தம்-
மருத்துவ தொழினுட்ப பணியாளர்களின் பணிநிறுத்த போராட்டம் ஆரம்பிக்;கப்பட்டு 76 மணித்தியாலங்களில் கடந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பதவியுயர்வுகள் உள்ளிட்ட 6 கோரிக்கைகளை முன்வைத்து கடந்த 26ஆம் திகதி காலை 8மணி தொடக்கம் ஆரம்பமான குறித்த பணிநிறத்த போராட்டம் காரணமாக மருத்துவமனை பணிகள் ஸ்தம்பிதமடைந்துள்ளன. எக்ஸ்ரே, ஸ்கேன், மருந்துப்பொருள் விநியோகம் மற்றும் ரசாயன ஆய்வு பரிசோதனைகள் என்பன இடம்பெறவில்லை. நேற்றுமுன்தினம் மதியம் 12மணி தொடக்கம் அத்தியாவசிய மருத்துவ சேவைகளிலிருந்து மருத்துவ தொழினுட்ப வியலாளர்கள் விலகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மீள்குடியேறி 8வருடங்கள் கடந்தும் காணி உறுதிப்பத்திரங்கள் வழங்கப்படவில்லை-
சுனாமி அனர்த்தத்தினால் இடம்பெயர்ந்து மீள்குடியேற்றப்பட்டு எட்டு வருடங்கள் கடந்துள்ள போதிலும், பாதிக்கப்பட்ட தமக்கு வழங்கப்பட்ட காணிகளுக்கான ஆவணங்கள் இதுவரை வழங்கப்படவில்லை என மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலகப் பிரிவில் மீள்குடியேற்றப்பட்ட மக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். இந்தப் பகுதியில் 1,476 குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் வசிக்கின்ற போதிலும், 75 குடும்பங்களுக்கு மாத்திரமே காணி உறுதிப் பத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளதாக பாதிக்கப்பட்டவர்கள் குறிப்பிடுகின்றனர். எவ்வித வசதிகளுமற்ற இந்தப் பகுதியில் வசிக்கும் தாம் பல்வேறு பிரச்சினைகளை எதிர்நோக்கி வருவதாக அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். கல்வி, தொழில்வாய்ப்பு, திருமணம் என்பன காணி உறுதிப் பத்திரங்கள் வழங்கப்படாமையால் தடைப்பட்டுள்ளதாக சுனாமி அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்கள் கூறுகின்றனர். மண்முனை பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட கொக்குவில் பகுதியிலுள்ள 243 குடும்பங்களும், பனிச்சையடி பிரதேசத்தில் 350 குடும்பங்களும், திராய்மடு சுவிஸ் கிராமத்தில் 424 குடும்பங்களும், உப்போடை கிராமத்தில் 43 குடும்பங்களும், நொச்சிமுனை பிரதேசத்தில் 341 குடும்பங்களும் இதுவரை காணி ஆவணங்கள் வழங்கப்படவில்லை என குற்றஞ்சாட்டியுள்ளன. இந்த விடயம் தொடர்பில் மட்டக்களப்பு அரசாங்க அதிபர் பி.எஸ்.எம் சார்ல்ஸ்சிடம் ஊடகமொன்று வினவியபோது, மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் பிரிவு பிம்சவிய திட்டத்திற்குள் உள்வாங்கப்பட்டுள்ளதாகவும், அதன்கீழ் மக்களின் விபரங்கள் திரட்டப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார். இப் பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு விரைவில் காணிப் பத்திரங்களை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக மட்டக்களப்பு மாவட்ட அரச அதிபர் பி.எஸ்.எம் சார்ல்ஸ் மேலும் கூறியுள்ளார்.