பண்டத்தரிப்பு வைத்தியசாலையின் நிலைமைகள் தொடர்பில் ஆராய்வு-
யாழ். பண்டத்தரிப்பு ஆதார வைத்தியசாலையை வட மாகாணசபையின் சுகாதார அமைச்சர் டொக்டர் பி.சத்தியலிங்கம், வட மாகாணசபை உறுப்பினர்கள் திரு. தர்மலிங்கம் சித்தார்த்தன், திரு. சயந்தன் ஆகியோர் நேற்று (28.08.2014) சென்று பார்வையிட்டு அங்குள்ள நிலைமைகள் தொடர்பில் ஆராய்ந்துள்ளதுடன், அங்குள்ள குறைகளையும் கேட்டறிந்து கொண்டனர். இதன்போது பிராந்திய சுகாதார வைத்திய அதிகாரி திரு. கேதீஸ்வரன் அவர்களும் கலந்துகொண்டு வைத்தியசாலையின் நிலைமைகளைப் பார்வையிட்டார். பண்டத்தரிப்பு ஆதார வைத்தியசாலையின் அபிவிருத்திச் சங்கத் தலைவர் திரு நடராஜா மாஸ்டர் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற கலந்துரையாடலின்போது வைத்தியசாலை தரப்பினர் தங்களுடைய குறைகளைக் கூறினார்கள். பெருந்தொகையான பொதுமக்களும் இதில் கலந்து கொண்டிருந்தனர். அங்கு சுற்றுமதில் இல்லாமை, வைத்திய அதிகாரிகள் மற்றும் தாதியர் பற்றாக்குறை, இப்படிப் பல்வேறு தேவைகள் இதன்போது சுட்டிக்காட்டப்பட்டது. அங்கு போதியளவு கட்டிடம் இருந்தும் பல தட்டுப்பாடுகள் உள்ளதனால் வைத்தியசாலை சரியான முறையில் இயங்காமல் இருப்பது பற்றியும் இங்கு எடுத்துக்கூறப்பட்டது, இக் குறைபாடுகளில் பலவற்றை நிவர்த்தி செய்வதாக சுகாதார அமைச்சர் உறுதியளித்தார். இந்தப் பிரச்சினை சம்பந்தமாக மாகாணசபை உறுப்பினர்களும் கவனம் செலுத்தியதுடன், மேலும் பல விடயங்கள் தொடர்பிலும் கலந்துரையாடினார்கள்.