யாழில் பிரதான ரயில் நிலையங்கள் புனரமைப்பு-
யாழ். குடாநாட்டில் உள்ள பிரதான புகையிரத நிலையங்களின் புனரமைப்புப் பணிகள் துரித கதியில் இடம்பெற்று வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அக்ரோபர் மாதம் கொழும்பு – காங்கேசன்துறை இடையிலான புகையிரத சேவை ஆரம்பிக்கப்படவுள்ள நிலையில் ரயில் நிலைய புனரமைப்புப் பணிகள் விரைவுபடுத்தப்பட்டுள்ளன. இதன் ஒரு கட்டமாக யாழ்ப்பாணம் நாவற்குழிப் புகையிரத நிலையம் புனரமைக்கப்பட்டு வருகின்றது. ரயில் நிலையத்தில் இருந்து சிறிது தூரம் செல்லும் பொழுது நாவற்குழி கடல் எல்லையினை ஊடறுத்துச் செல்லும் பாலத்தின் நவீன தோற்றத்துடனும் இது அமைக்கப்பட்டுள்ளது.
காணாமல் போன மீனவர்களைத் தேடும் நடவடிக்கை-
யாழ். நெடுந்தீவு கடற்பரப்பில் காணால் போனதாக கூறப்படும் நான்கு தமிழக மீனவர்கள் குறித்த இதுவரையில் எந்த தகவலும் கிடைக்கவில்லை என்று தமிழக ஊடகங்கள் தெரிவிக்கின்றன. கடந்த புதன்கிழமை முதல் குறித்த மீனவர்கள் நான்கு பேரும் காணாமல் போயிருந்தனர். காணாமல் போன மீனவர்களின் படகில் நீர் புகுந்த நிலையில், அவர்களை மீட்பதற்கு ஏனைய மீனவர்கள் முயற்சித்திருந்த போதும், குறித்த மீனவர்கள் மூழ்கும் படகினை கைவிட்டு வர மறுப்பு தெரிவித்திருந்தனர். எனினும் அவர்கள் இதுவரையில் கரை திரும்பாத நிலையில் தொடர்ந்தும் அவர்களை தேடும் பணிகள் இடம்பெற்று வருகின்றன.
மேலும் செய்திகளை வாசிக்க…..
கச்சத்தீவில் விநாயகர் சிலை வைப்பதற்கு பாரத் சேனா முயற்சி-
கச்சத்தீவில் இந்தியாவின் பாரத் சேனா அமைப்பினர் விநாயகர் சிலையை வைக்கும் நோக்கில் நேற்று குழப்பத்தில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்படுகிறது. எனினும் அவர்கள் ராமேஸ்வரத்திலேயே காவற்துறையினரால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளனர். பாரத் சேனா அமைப்பின் உறுப்பினர்கள் பலர் சுமார் ஒன்றரை அடி உயரமான விநாயர் சிலை ஒன்றை கச்சத்தீவில் வைப்பதற்காக இராமேஸ்வரத்தில் இருந்து கச்சத்தீவு நோக்கி பயணித்த தயாராகினர். எனினும் தமிழ்நாட்டின் பல்வேறு காவற்துறையினர் இணைந்து அவர்களின் முயற்சியை தடுத்துள்ளனர். பின்னர் குறித்த சிலை அக்னிக் கடலில் கரைக்கப்பட்டதாக தமிழக செய்திகள் தெரிவிக்கின்றன.
வரட்சியால் 20 இலட்சத்துக்கும் அதிகமானவர்கள் பாதிப்பு-
நிலவும் வரட்சியினால் 14 மாவட்டங்களைச் சேர்ந்த 5லட்சத்து 75ஆயிரத்து 724குடும்பங்களைச் சேர்ந்த 20லட்சத்து 7,225பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையம் குறிப்பிட்டுள்ளது. கிழக்கு மாகாணத்தில் மாத்திரம் ஒரு லட்சத்து 18,541 குடும்பங்களைச் சேர்ந்த 4லட்சத்து 12ஆயிரத்து 451பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அம்பாறை மாவட்டத்தில் 31ஆயிரத்து 278பேரும், மட்டக்களப்பு மாவட்டத்தில் 2லட்சத்து 52ஆயிரத்து 673 பேரும், திருகோணமலை மாவட்டத்தில் ஒரு லட்சத்து 28ஆயிரத்து 500 பேரும் பாதிக்கப்பட்டுள்ளதாக இடர்முகாமைத்துவ நிலையம் அறிவித்துள்ளது. ஊவா மாகாணத்தின் மொனராகலை மாவட்டத்தில் 53ஆயிரத்து 512குடும்பங்களைச் சேர்ந்த 2லட்சத்து 14ஆயிரத்து 48பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். நிலவுகின்ற வரட்சியினால் வட மாகாணத்தில் ஒரு லட்சத்து ஐயாயிரத்து 955 குடும்பங்களைச் சேர்ந்த 3லட்சத்து 82ஆயிரத்து 471பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இப் பிரதேசங்களில் விவசாயத்தை முன்னெடுக்கப்போதுமான நீரைப் பெற்றுக்கொள்ள முடியாமல் செய்கையாளர்கள் மிகுந்த சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர். இதுதவிர வட மாகாணத்தில் யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, மன்னார் மாவட்டங்களிலும் மக்கள் வரட்சியினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.