திருமலையில் நீர்க்காகம் கூட்டுப் பயிற்சி-

thirumalaiyil neer kaakam koottu payitchiஇலங்கை கடற்படை, இராணுவம் மற்றும் விமானப்படை ஆகியன இணைந்து நடத்தும் ‘நீர்க்காகம்’ கூட்டுப்பயிற்சி, எதிர்வரும் செப்டெம்பர் 2ஆம் திகதிமுதல் 23ஆம் திகதிவரை திருகோணமலையில் நடைபெறவுள்ளது. முப்படைகளையும் சேர்ந்த 2ஆயிரத்து 500க்கும் மேற்பட்ட வீரர்கள் மற்றும் 6 நாடுகளைச் சேர்ந்த படைவீரர்கள் இந்த கூட்டுப் பயிற்சியில் ஈடுபடுகின்றனர். திருகோணமலையிலுள்ள காட்டுப்பகுதியில் இந்த பயிற்சி இடம்பெறவுள்ளது.

செப். 4, 5இல் ஊவா மாகாணசபை தபால்மூல வாக்களிப்பு-

எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 4ஆம் மற்றும் 5ஆம் திகதிகளில் ஊவா மாகாண சபைக்கான தபால்மூல வாக்களிப்பு இடம்பெறும் என்று தேர்தல்கள் செயலகம் அறிவித்துள்ளது. இந்த மாகாணசபைத் தேர்தலில் வாக்களிப்பதற்கு 30ஆயிரத்து 655 தபால் மூல வாக்காளர்கள் தகுதி பெற்றுள்ளனர் என்று தேர்தல்கள் செயலகம் மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.

நவநீதம்பிள்ளை ஓய்வு – ஷெயிட் அல் ஹூசைனின் பணிகள் ஆரம்பம்-

navaneethampillai oyvuஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளராக ஜோர்தான் இளவரசர் ஷெயிட் அல் ஹூசைன் நாளை முதல் பொறுப்பேற்கவுள்ளார். ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளராக செயற்பட்டு வந்த நவநீதம்பிள்ளை இம் மாதத்துடன் ஓய்வு பெறுவதை அடுத்து, அந்தப் பதவிக்கு ஓய்வு ஷெயிட் அல் ஹூசைன் தெரிவு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகளை வாசிக்க…..

ஐ.தே.க உப தலைவராக மீண்டும் சஜித்-

UNP upa thalaivaraakaஐக்கிய தேசியக் கட்சியின் உப தலைவர் உள்ளிட்ட சில பதவிகளை நிரப்புவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அந்தக் கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க குறிப்பிட்டுள்ளார். முன்னதாக கட்சியின் உபதலைவர் பதவிக்கு மீண்டும் சஜித் பிரேமதாஸவின் பெயர் முன்மொழியப்பட்டதாக குறிப்பிட்ட திஸ்ஸ நாயக்க, அது தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டு வருவதாகவும் கூறியுள்ளார். நேற்று கண்டியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

வவுனியா அரசாங்க அதிபருக்கு அச்சுறுத்தல்-

வவுனியா அரசாங்க அதிபர் பந்துல ஹரிச்சந்திர தனக்கு காலி பிரதேசத்தில் வைத்து கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதாக பொலிஸில் முறைப்பாடு பதிவு செய்துள்ளார். காலியில் உள்ள அவரது வீட்டுக்குச் சென்றபோது, அவரது வீட்டு வாசலை மறித்து நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ப்றாடோ ரக வாகனத்திலிருந்து இறங்கி வந்த சிறைச்சாலை அதிகாரிகள் இருவர், இந்த கொலை அச்சுறுத்தலை விடுத்துவிட்டுச் சென்றதாக அவர் தனது முறைப்பாட்டில் குறிப்பிட்டுள்ளார். இவ்வாறு அச்சுறுத்தல் விடுத்த இருவரும் அரச அதிபரின் சகோதரர்கள் எனவும் இவர்களை கைது செய்த பொலிஸார், பிணையில் விடுவித்ததாகவும் காலி பொலிஸார் கூறியுள்ளனர்.

கொழும்பு மத்திய தபால் பரிமாற்றகத்தில் ஏழு பேர் கைது-

colombo maththiya thapaalakaththilகொழும்பு மத்திய தபால் பரிமாற்றகத்தின் நான்கு ஊழியர்கள் உட்பட ஏழு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். வெளிநாட்டு தபால் பொதி ஒன்றிலிருந்த பொருட்களை களவாடிய குற்றச்சாட்டிற்காக இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவிக்கின்றது. புறக்கோட்டை பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கமைய இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களுள் கொழும்பு மத்திய தபால் பரிமாற்றகத்தின் தபால்நிலைய பொறுப்பதிகாரிகள் இருவரும், அலுவலக தொழிலாளர்கள் இருவரும் அடங்குவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் சுட்டிக்காட்டியுள்ளது. டுபாயிலிருந்து அனுப்பி வைக்கப்பட்டிருந்த தபால் பொதியிலிருந்த 123 கையடக்க தொலைப்பேசிகளும் 04 டெப்களும் சந்தேகநபர்களால் கைமாற்றப்பட்டுள்ளன. 1லட்சத்து 14ஆயிரம் ரூபா பணத்தை பெற்றுக் கொண்டு சந்தேகநபர்கள் பொருட்களை பரிமாறியுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது. குறித்த தபால் பொதியிலிருந்த பொருட்களை எடுத்துக் கொண்டதன் பின்னர் பொதிக்குள் கொங்ரீட் கற்களை நிரப்பி மீள்பொதி செய்யப்பட்டதும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இணக்கப்பாடு எட்டப்படாத மீனவர் பேச்சுவார்த்தை-

inakkapaadu ettapadaatha meenavar pechchuநேற்று முன்தினம் இடம்பெற்ற இலங்கை இந்திய மீனவர் பேச்சுவார்த்தையின்போது, எல்லை தாண்டிய மீன்பிடி நடவடிக்கைகள் தொடர்பில் இணக்கப்பாடு எட்டப்படவில்லை என மீன்பிடித் திணைக்களத்தின் பணிப்பாளர் நிமல் ஹெற்றியாராட்சி தெரிவித்துள்ளார். கடற்பரப்பில் எல்லை தாண்டுவது தொடர்பாக இலங்கையரசின் விதி முறைகள் தொடர்ந்தும் வலுவான முறையில் உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். கடந்த 29ஆம் திகதி புதுடில்லியில் இந்திய இலங்கை மீனவர் பிரச்சனை தொடர்பாக, இரு நாடுகளின் ராஜதந்திரிகர்களுக்கு இடையே சந்திப்பு இடம்பெற்றிருந்தது. இதன்போது, மீனவர் பிரச்சனையை தீர்ப்பதற்காக நீண்டகால அடிப்படையில் தீர்வொன்று இந்திய அதிகாரிகளினால் முன்வைக்கப்பட்டது. இந்நிலையில், இது தொடர்பில் நிரந்தர தீர்வொன்று எட்டப்படும் வரையில், கடல் எல்லையை தாண்டும் செயல்பாட்டிற்கு இணக்கம் தெரிவிக்க முடியாது என இலங்கை பிரதிநிதிகள் தெரிவித்துள்ளதாக கடற்தொழில் திணைக்கள பணிப்பாளர் நாயகம் நிமல் ஹெற்றியாராட்சி மேலும் குறிப்பிட்டுள்ளார்.