ஜனாதிபதியால் மீண்டும் தேர்தலில் போட்டியிட முடியாது – சுனில் வடகல-
ஊவா மாகாண சபை தேர்தலின் பின்னர் நடைபெறவுள்ளதாக கூறப்படும் ஜனாதிபதி தேர்தலில் தற்போதைய ஜனாதிபதிக்கு போட்டியிடுவதற்கு காணப்படும் தடைகள் தொடர்பில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் ஊடகவியலாளர்கள் கேள்வியெழுப்பியுள்ளனர். மக்கள் விடுதலை முன்னணி, மேல் மாகாண சபை உறுப்பினர் சட்டத்தரணி சுனில் வடகல இது தொடர்பில் விளக்கமளித்துள்ளார். அது தெளிவான சட்ட விவாதமாகும். நாட்டில் பொருட்கோடல் கட்டளை சட்டம் என்ற சட்டம் உள்ளது. இந்த கட்டளை சட்டத்திற்கு அமைவாக கடந்த காலங்களுக்கு செல்லுப்படியாகும் வகையில் சட்டத்தை நெறிப்படுத்த முடியாது 18ஆவது அரசியலமைப்பு என்பது நாட்டின் ஜனநாயகம் மற்றும் சட்டத்தை புறம்தள்ளிய திருத்தமாகும். ஆனால் இந் திருத்தத்தைக் கொண்டுவரும்போது அதில் உள்ளடக்கப்பட வேண்டிய ஒரு விடயத்தை மறந்து விட்டனர். அதாவது கடந்த காலங்களுக்கும் செல்லுப்படடியாகும் அல்லது உள்ளடங்கும் என்ற விடயத்தை உள்ளடக்க மறந்து விட்டனர். ஏனெனில் தற்போதைய ஜனாதிபதி 17ஆவது அரசியலமைப்பின் அடிப்டையிலேயே பதவி பிரமாணம் செய்துகொண்டுள்ளார். அப்போது 18ஆவது அரசியலமைப்பு வரவில்லை. இதனடிப்படையில் அரசியலமைப்பின் 31ஃ2 பிரிவிற்கு அமைவாக 2ஆவது பதவி காலத்தில் மாத்திரமே அவரால் இருக்கமுடியும். ஆகவே தற்போதுள்ள சட்டத்தின் பிரகாரம் மூன்றாவது பதவிக்காலத்திற்காக ஜனாதிபதியால் போட்டியிட முடியாது என்றார் அவர்.
வவுனியா பொடியன் பொலிஸாரால் கைது-
வவுனியாவில் கடந்த சில மாதங்களாக வவுனியா பொடியன் என்ற பெயரில் பேஸ்புக் கணக்கொன்றை இயக்கிவந்த சிறுவன் ஒருவன் வவுனியா பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். வவுனியா தோணிக்கல் காந்திவீதியை சேர்ந்த நவரத்தினசாமி கிருஸாந் என்ற 16 வயது சிறுவனொருவனே இவ்வாறு வவுனியா பொடியன் என்ற பெயரில் சமூக வலைத்தளமான பேஸ்புக்கில் கணக்கொண்றை இயக்கி வந்த நிலையில் பொதுமக்கள் வழங்கிய தகவலின் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ளான். விபுலாநந்தா கல்லூரியில் சாதாரணதரத்தில் கல்வி பயிலும் இம் மாணவன் வவுனியா பொடியன் என்ற பெயரில் வவுனியாவை சேர்ந்த பல அரசியல்வாதிகள். சமூகவிரோத செயற்பாடுகளில் ஈடுபடுபவர்கள், சமூகத்தில் அறியப்பட்ட பலரையும் அவர்களின் புகைப்படங்களை பிரசுரித்து கீழ்த்தரமான வார்த்தைகளை பயன்படுத்தி விமர்சித்து வந்திருந்தான். இந்நிலையில் பொதுமக்கள் வவுனியா பொடியன் என்ற கணக்கு தோணிக்கல்லில் இருந்தே இயக்கப்படுவதை அறிந்து சிறுவனின் வீட்ற்கு சென்றுள்ளனர். எனினும் அசம்பாவிதங்கள் ஏற்படக்கூடாது என்பதனை கருத்தில் கொண்டு இப்பகுதி கிராம சேவகருக்கு தகவல் வழங்கப்பட்டு கிராம சேவகர் மூலமாக வவுனியா பொலிஸாரிடம் மேற்படி சிறுவன் ஒப்படைக்கப்பட்டிருந்தான். இதனையடுத்து சிறுவனை கைது செய்த பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் செய்திகளை வாசிக்க…..
ஏ ஒன்பது வீதியை மறித்து மக்கள் ஆர்ப்பாட்டம்-
வவுனியா தேக்கவத்தை பகுதியில் ஏ ஒன்பது வீதியை வழிமறித்து நேற்றிரவு மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்ததால் அந்த வீதியூடான வாகன போக்குவரத்திற்கு இடையூறு ஏற்பட்டிருந்தது. தேக்கவத்தை பகுதியிலுள்ள பொதுக்கிணறு ஒன்றிலிருந்து நீரை பெற்றுக்கொள்வது தொடர்பில் எழுந்த பிரச்சினை ஒன்றை அடிப்படையாக கொண்டே மக்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. நேற்றிரவு 8மணியளவில் ஆரம்பிக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தினால் ஏ ஒன்பது வீதியூடான வாகன போக்குவரத்திற்கு சில மணித்தியாலங்கள் இடையூறு ஏற்பட்டிருந்ததாக கூறப்படுகிறது.
படகுகளை தடுத்து வைக்குமாறு சுப்பிரமணியம் சுவாமி ஆலோசனை-
கைதுசெய்யப்படும் தமிழக மீனவர்களை விடுவிக்குமாறும் அவர்களின் படகுகளை தடுத்து வைக்குமாறும் தாமே இலங்கை அரசுக்கு ஆலோசனை கூறியதாக ஜனதாக்கட்சியின் தலைவர் சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார். இந்திய தொலைக்காட்சி ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் சுப்பிரமணியன் சுவாமி இதனை கூறியதாக த ஹிந்து செய்தித்தாள் குறிப்பிட்டுள்ளது. அண்மையில் இலங்கை சென்றிருந்தபோது இந்த ஆலோசனையை இலங்கை அரசுக்கு தாம் வழங்கியதாகவும், அதனடிப்படையிலேயே இலங்கை செயற்படுவதாகவும் சுவாமி குறிப்பிட்டுள்ளார் இந்நிலையில் சுப்பிரமணியன் சுவாமியின் கருத்து தமிழக கட்சிகளுக்கு இடையில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளதாக த ஹிந்து தெரிவித்துள்ளது தமிழக படகு உரிமையாளர்கள், பணக்காரர்கள் எனவே அவர்களின் படகுகளை தடுத்து வைப்பதில் பிரச்சினையில்லை என தாம் இலங்கையிடம் சுட்டிக்காட்டியதாக சுவாமி கூறியுள்ளார்.
பாகிஸ்தானியர் அகதி அந்தஸ்து மனு நிராகரிப்பு-
அகதி அந்தஸ்து கோரி இலங்கையில் தங்கியுள்ள பாகிஸ்தானியர்களை நாடு கடத்தக்கூடாது என்று தாக்கல் செய்யப்பட்ட மனு மேன்முறையீட்டு நீதிமன்றினால் நிராகரிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் அகதி அந்தஸ்து கோரி இலங்கையில் தங்கியிருந்த பாகிஸ்தானிய பெண் ஒருவர் இம்மனுவை தாக்கல் செய்திருந்தார். இந்நிலையில், வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோது, மேன்முறையீட்டு நீதியரசர் உபாலி அபேரத்ன இந்த மனுவை நிராகரித்தார். அத்துடன், இந்த அகதிகளை நாடு கடத்துவதற்கு நீதிமன்றத்தினால் முன்னர் விதிக்கப்பட்டிருந்த இடைக்கால தடையுத்தரவையும் ரத்து செய்வதாக நீதியரசர் உபாலி அபேரத்ன அறிவித்தார். நீர்கொழும்பில் தற்காலிகமான தங்கியுள்ள அனிலா இம்ரான் என்ற பாகிஸ்தானிய பெண்ணால் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.
கூட்டமைப்பின் இந்தியப் பயணம் வெற்றி-
தமது இந்திய விஜயம் வெற்றியளித்துள்ளதாக தமிழ் தேசிய கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. இந்தியாவுக்கான விஜயம் ஒன்றை கடந்த 28ஆம் திகதி மேற்கொண்ட கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி, வெளிவிவகார அமைச்சர் சுஸ்மா சுவராஸ், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உள்ளிட்ட அதிகாரிகளையும் சந்தித்தனர். அதனைத் தொடர்ந்து சென்னையில் பாரதீய ஜனதா கட்சியின் மாநில தலைவர்கள் பலரை சந்தித்து கலந்துரையாடல் மேற்கொண்டிருந்தனர். இந்நிலையில் நாடு திரும்பியுள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் தமது இந்திய விஜயம் பூரண திருப்தி எனவும், இதன்மூலம் புதிய பயணம் ஆரம்பமாகும் என்றும் தெரிவித்துள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.
15ஆயிரம் சிறுவர்கள் சீர்திருத்த நிலையங்களில்-
400 சிறுவர் இல்லங்களைச் சேர்ந்த சுமார் 15ஆயிரம் சிறுவர்கள் சிறுவர் சீர்திருத்த நிலையங்களில் இருப்பதாக அகில இலங்கை சிறுவர் சீர்திருத்த அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. சங்கத்தின் செயலாளர் கே.கே கீர்த்திரத்ன இதனைக் குறிப்பிட்டுள்ளார். குறித்த சிறுவர்கள் அதிக குற்றச் செயல்களில் ஈடுப்பட்டமை தொடர்பிலேயே இவ்வாறு அவர்கள் சிறுவர் சீர்திருத்த நிலையங்களுக்கு அனுப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். எனினும் இவர்களை மீண்டும் சமூதாயத்துடன் இணைப்பதற்கு அவர்களுக்கு உளவியல் ரீதியான போதனைகள் அவசியப்படுவதாகவும் அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
மூத்த தொழிற்சங்க தலைவர் பாலதம்பு இயற்கை எய்தினார்-
நாட்டின் மூத்த தொழிற்சங்க தலைவர்களில் ஒருவரான பாலதம்பு தனது 92ஆவது வயதில் இயற்கை எய்தினார். இலங்கை வர்த்தக மற்றும் பொது தொழிலாளர் சங்கத்தின் பிரதம செயலாளராக செயற்பட்ட பாலதம்பு, ஓர் சட்டத்தரணி என்பது குறிப்பிடத்தக்கது.