புதிய மனித உரிமை ஆணையாளர் தொடர்பில் அரசாங்கம் நம்பிக்கை-
ஐக்கிய நாடுகளின் மனித உரிமை ஆணையாளராக புதிதாக பதவியேற்றுள்ள செயிட் அல் ஹூசைன் இலங்கை பிரச்சினை தொடர்பில் சரியான அணுமுறையுடன் செயற்படுவார் என ஊடகத்துறை அமைச்சர் கெஹலிய றம்புக்வெல்ல கூறியுள்ளார். கண்டியில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்ட அவர் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கும் வகையில் இதனைக் கூறியுள்ளார். நவநீதம்பிள்ளையின் செயற்திட்டம், மற்றும் ஆதாரமற்ற வகையிலான பக்கச்சார்பான பேச்சு மிகவும் வருந்தக்கது. எனினும் தற்போது புதிதாக பதவியேற்றுள்ள ஆணையாளர் இவ்வாறு இல்லாமல் இலங்கை விடயத்தில் உரிய அணுகுமுறையை கடைப்பிடிப்பார் என இலங்கை எதிர்பார்கின்றது என்றும் அவர் கூறியுள்ளார்.
ஜப்பான் பிரதமர் அடுத்த வாரம் இலங்கைக்கு விஜயம்-
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அழைப்பின்பேரில் ஜப்பான் பிரதமர் ஸின்சோ அபே உள்ளிட்ட குழுவினர் செப்டம்பர் 7ஆம், 8ஆம் திகதிகளில் இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளதாக கூறப்படுகின்றது. ஜப்பானிய பிரதமர் ஒருவர் 24 ஆண்டுகளின் பின்னர் இலங்கைக்கு விஜயம் செய்யும் சந்தர்ப்பமாக இது அமைகிறது. ஜப்பானிய முக்கிய நிறுவனங்களின் பிரதிநிதிகள் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்களுடன் பிரதமர் அபே இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளார். இரு நாடுகளுக்கும் இடையில் ராஜதந்திர உறவுகள் ஏற்படுத்தப்பட்ட அறுபது ஆண்டுகள் பூர்த்தியானதனை கொண்டாடும் வகையில் கடந்த ஆண்டு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஜப்பானுக்கு விஜயம் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது. பிரதமர் அபேயின் இலங்கை விஜயம் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை மேம்படுத்தும் என எதிர்பார்ப்பதாக வெளிவிவகார அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சுப்பிரமணியன் சுவாமியை கைது செய்யுமாறு கோரிக்கை-
ஜனதா கட்சியின் தலைவர் சுப்பிரமணியன் சுவாமியை உடன் கைதுசெய்யுமாறு மீனவ பிரதிநிதிகள் வலிறுயுத்தல் விடுத்துள்ளனர். தி ஹிந்து பத்திரிகை இந்த செய்தியை வெளியிட்டுள்ளது. இலங்கையில் கைதுசெய்யப்படும் மீனவர்களின் படகுகளை தடுத்து வைக்குமாறு இலங்கை அரசாங்கத்திற்கு தாமே ஆலோசனை கூறியதாக சுப்பிரமணியன் சுவாமி நேற்று தெரிவித்திருந்தார். சுப்பிரமணியன் சுவாமியின் இந்த கருத்திற்கு தமிழகத்தில் கடுமையான எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகின்றது. இந்நிலையிலேயே, தமிழக முதல்வரின் நடவடிக்கைக்கு எதிராகவும், மீனவர்களின் வாழ்வாதாரத்தை முடக்கிய குற்றத்துக்காகவும் சுப்பிரமணியன் சுவாமியை உடன் கைதுசெய்வேண்டும் என தமிழக மீனவ பிரநிதிகள் வலியுறுத்தியுள்ளனர்.
மேலும் செய்திகளை வாசிக்க………
யாழ். பஸ் மீதான கல்வீச்சில் மூவர் காயம்-
யாழிலிருந்து கொழும்பு நோக்கி பயணிக்கவிருந்த பஸ் ஒன்றுமீது பண்ணைப் பகுதியில் வைத்து நேற்றிரவு கல்வீச்சுத் தாக்குதல் நடத்தப்பட்டதில் மூன்று பயணிகள் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதி;க்கப்பட்டுள்ளனர். வழித்தடங்கல் அனுமதிப்பத்திரம் பெற்ற பஸ் வண்டி கொழும்பு பயணிக்க முயன்றபோதே இந்தக் கல்வீச்சுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.. வழித்தடங்கல் அனுமதிப்பத்திரம் பெறாத பஸ் உரிமையாளர்கள் மூவரே இச்சம்பவத்துடன் தொடர்புபட்டுள்ளனர் என்றும் இம்மூவரையும் தேடுவதாகவும் யாழ் பொலிஸார் குறிப்பிடுகின்றனர். தங்களைச் சேவையில் ஈடுபட அனுமதிக்கவில்லையென்ற கோபத்திலேயே அவர்கள் இந்த தாக்குதலை மேற்கொண்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். யாழ்ப்பாணம் – கொழும்பு வழித்தடங்கல் பஸ் சேவையில், வழித்தடங்கல் அனுமதியில்லாதவர்கள் ஈடுபடமுடியாது என யாழ்ப்பாணம் பொலீசார் நேற்றையதினம் அறிவித்திருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.
பொலிஸ் நிலையத்திற்கு முன்னால் ஒருவர் தீக்குளிப்பு-
கொழும்பு கொள்ளுப்பிட்டி பொலிஸ் நிலையத்திற்கு முன்னால் உள்ள நடைப்பாதையில் வைத்து இன்றுகாலை 10.15 மணியளவில் ஒருவர் பெற்றோலை தன்மேல் ஊற்றிக் கொண்டு தனக்கு தானே தீ மூட்டிக் கொண்டுள்ளார். கடுங்காயங்களுக்கு உள்ளான அவர் தற்போது கொழும்பு தேசிய மருத்துவமனையின் அவசர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 60 வயதான இவரின் உடலில் 70 சதவீதமான பகுதிகள் தீக்காயத்திற்கு உள்ளாகியுள்ளதாக மருத்துவமனை வட்டாரம் கூறுகின்றது. இவர் பன்னியப்பிட்டி கலேல்கொடவைச் சேர்ந்தவராவார்.
கண்காணிப்பு பணிகளில் தேர்தல்கள் செயலக அதிகாரிகள்-
ஊவா மாகாண சபை தேர்தலுக்கான அஞ்சல் மூல வாக்களிப்பு தொடர்பில் கண்காணிக்க தேர்தல் திணைக்கள அதிகாரிகளை ஈடுப்படுத்துவதற்கு தேர்தல்கள் ஆணையார் தீர்மானித்துள்ளர். குறிப்பாக அதிக அஞ்சல் மூல வாக்காளர்களை கொண்ட அரச நிறுவனங்களில் இவர்கள் கண்காணிப்பு பணிகளில் ஈடுப்படுத்துவதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் திணைக்களம் அறிவித்துள்ளது. ஊவா மாகாண தேர்தலுக்கான தேர்தல் நடவடிக்கைகளின் பொருட்டு அதிகாரிகளுக்கு தற்சமயம் பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், ஊவா மாகாணத்திற்கான அஞ்சல் மூல வாக்களிப்புகள் எதிர்வரும் 4ஆம் 5ஆம் திகதிகளில் இடம்பெறவுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.
ஜே.வி.பி மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு-
ஊவா மாகாணத்தில் பிரசாரத்தில் ஈடுப்படும் சுமார் 25ஆயிரம் அரச பணியாளர்களை கட்டுப்படுத்த தேர்தல்கள் ஆணையாளர் நடவடிக்கை எடுக்கவேண்டும் என ஜேவிபி கோரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பில் மனித உரிமை ஆணைக்குழுவில் ஜேவிபி நேற்று முறையிட்டுள்ளது. நேற்று மனித உரிமை ஆணைக்குழுவுக்கு சென்ற ஜேவிபியின் உறுப்பினர்கள், மனித உரிமைகள் ஆணையாளர் இது தொடர்பில் தமது அழுத்தத்தை பிரயோகிக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது
ஆளும் கட்சி உறுப்பினரின் தாக்குதில் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதி-
புத்தளம் வென்னப்புவ பிரதேசசபை உறுப்பினரின் தாக்குதலுக்கு இலக்கானதாகக் கூறப்படும் ஒருவர் மாரவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வென்னப்புவ – தெற்கு கம்மல பகுதியைச் சேர்ந்த 42வயதான ஒருவரே, தேவாலயம் ஒன்றில் வைத்து தாக்குதலுக்கு இலக்காகியுள்ளார். இவரைத் தாக்கிய பிரதேசசபை உறுப்பினர் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பைச் சேர்ந்தவர் என கூறப்படுகிறது. மேலும் சந்தேகநபரான பிரதேசசபை உறுப்பினரிடம் துப்பாக்கி இருந்ததாக, பாதிக்கப்பட்ட நபர் பொலிஸாரிடம் கூறியுள்ளார. தனிப்பட்ட மோதல்களே சம்பவத்துக்குக் காரணம் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஆயினும் இதுவரை குறித்த பிரதேசசபை உறுப்பினர் கைதுசெய்யப்படவில்லை எனவும், சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை வென்னப்புவ பொலிஸார் நடாத்துவதாகவும் தெரியவருகிறது.
சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள் கைது-
யாழ்.. நெடுந்தீவுக் கடற்கரைப் பகுதியில் சட்டவிரோதமாக மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகக் கூறப்படும் ஒன்பது பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இன்று அதிகாலை இவர்களை கடற்படையினர் கைதுசெய்ததாக யாழ் மீனவ பரிசோதனை அலுவலக உதவிப் பணிப்பாளர் நடராஜா கணேஷமூர்த்தி தெரிவித்துள்ளார். தென்னிந்தியாவில் இருந்து டோலர் படகுகள் மூலம் வந்து, சட்டவிரோதமாக மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டவர்களே இவ்வாறு கைதாகியுள்ளனர். இவர்கள் இன்று ஊர்காவல்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.
நள்ளிரவு முதல் தபால் ஊழியர்கள் பணிப் பகிஷ்கரிப்பு-
தபால் தொழிற்சங்க ஊழியர்கள் இன்று நள்ளிரவு முதல் அடையாளப் பணிப் பகிஷ்கரிப்பு ஒன்றை முன்னெடுக்கத் தீர்மானித்துள்ளனர். சில கோரிக்கைகளை முன்வைத்து இன்று நள்ளிரவு முதல் நாளை நள்ளிரவு வரை இவ்வாறு பணிப்பகிஷ்கரிப்பை மேற்கொள்ளவுள்ளதாக தபால் தொழிற்சங்க ஒன்றியம் தெரிவித்துள்ளது. எது எவ்வாறு இருப்பினும் குறித்த கோரிக்கைகளில் சில தற்போது நிறைவேற்றப்பட்டுள்ளதாக தபால் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. அத்துடன் மற்றைய கோரிக்கைகளுக்கு தீர்வைப் பெற்றுக் கொடுக்கவும் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தபால் மா அதிபர் ரோஹன அபேரத்ன கூறியுள்ளார்.
வரணியில் குடும்பஸ்தரை காணவில்லையென முறைப்பாடு-
யாழ்ப்பாணம், வரணி பகுதியைச் சேர்ந்த சண்முகநாதன் ஜெயரஞ்சன் (வயது 31) என்ற குடும்பஸ்தரை காணவில்லையென அவரது மனைவி, நேற்று கொடிகாமம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடொன்றைப் பதிவு செய்துள்ளார். கடந்த ஓகஸ்ட் 21ஆம் திகதி, பளையிலுள்ள இரும்பு ஒட்டும் வர்த்தக நிலையமொன்றுக்கு வர்ணப்பூச்சு வேலைக்காகச் சென்ற அவர், இதுவரையில் வீடு திரும்பவில்லை என முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.