திருநாவற்குளத்தில் பேருந்து தரிப்பு நிலையம் – புளொட் தலைவர் திறந்து வைப்பு-
வவுனியா திருநாவற்குளம் பாரஊர்தி தரிப்பு நிலையத்திற்கு முன்பாக அமரர் தோழர் தர்மலிங்கம் தேவராஜா (இளங்கோ) அவர்களின் ஞாபகார்த்தமாக இன்று பேருந்து தரிப்பு நிலையமொன்று திறந்து வைக்கப்பட்டது. மேற்படி பேருந்து தரிப்பு நிலையத்;தின் திறப்புவிழா ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் முக்கியஸ்தர் திருமதி சோதிமதி நகுலேஸ்வரம்பிள்ளை அவர்களின் தலைமையில் இன்று (03.09.2014) காலை 10.30மணியளவில் இடம்பெற்றது.
வவுனியாவின் முன்னாள் உப நகரபிதா திரு க.சந்திரகுலசிங்கம்(மோகன்) அவர்களின் ஏற்பாட்டில் புளொட் தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வடக்கு மாகாண சபை உறுப்பினருமான திரு. தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள் பேருந்து தரிப்பு நிலையத்தினை திறந்து வைத்தார். இந்நிகழ்வில் புளொட்டின் வன்னிப் பிராந்திய இணைப்பாளர் திரு க.சிவநேசன் (பவன்), பிரதேச சபை உறுப்பினர்கள் திரு இராஜசேகரம் (சேகர், திரு. ஜெகதீஸ்வரன் (சிவம்) மற்றும் திரு.செந்தில் அவர்களும், புளொட் அங்கத்தவர்கள் ஆதரவாளர்கள், பொதுமக்களும் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
இங்கு உரையாற்றிய திரு. தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள், இன்று எமது அபிவிருத்திகள் பன்முகப்படுத்தப்பட்டு, பல வழிகளிலும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. எமது மறைந்த தோழர் இளங்கோ எமது அமைப்பின் வளர்ச்சியிலும், மக்கள் பணிகளிலும் என்றும் பின்நின்றதில்லை. அவரின் ஞாபகார்த்தமாக இன்று இவ் பேரூந்து தரிப்பு நிலையம் மக்களுக்காக திறந்து வைக்கப்பட்டிருக்கின்றது. இன்று தமிழ் மக்களின் பிரதிநிதிகளாக வட மாகாணசபையில் 30 ஆசனங்கள் எமக்கு இருக்கின்றது, இது தனிப்பட்ட நபருக்கோ தனிப்பட்ட கட்சிக்கோ கிடைத்த வெற்றியல்ல, ஒற்றுமைக்குக் கிடைத்த வெற்றியாகும். தமிழ் மக்களின் வாழ்வாதாரத்தை தலைநிமிர வைக்க வேண்டுமானால் நாம் ஒற்றுமையுடன் ஒன்றிணைந்து செயலாற்ற வேண்டும் என்று தெரிவித்தார்.