இந்திய அதிகாரி பயணித்த கார் அதிவேக வீதியில் விபத்து-

karadiyanaru accidentஇந்திய உயர்ஸ்தானிகராலய அதிகாரி ஒருவர் பயணித்த கார் தெற்கு அதிவேக வீதியில் விபத்துக்குள்ளானமை தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். பாணந்துறைக்கும் தொடங்கொடைக்கும் இடையிலான 21ஆம் மைல் கல் பகுதியில் வேகக் கட்டுப்பாட்டை இழந்த கார் பாதுகாப்பு சுவரில் மோதியுள்ளது. சம்பவம் இடம்பெற்றபோது அந்த வீதியில் பயணித்த எம்பியூலன்ஸ் ஒன்றில் பிரதி இந்திய உயர்ஸ்தானிகர் தங்காலை ஆதார வைத்தியசாலைக்கு அழைத்துச்செல்லப்பட்டிருந்தார். சுரேஷ் ராவ் என்ற குறித்த அதிகாரியின் உடல்நிலை தேறியுள்ளதாக இந்திய உயர்ஸ்தானிகராலய அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

அனுமதிப்பத்திரம் பெற்றால் மிருகபலி பூஜை செய்யலாம்-

Munneswaram_CIஅனுமதிப்பத்திரம் ஒன்றை பெற்ற பின்னர் சிலாபம், முன்னேஸ்வரம் ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலயத்தில் மிருகபலி பூஜை செய்யலாம் என உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இதற்கான அனுமதிப்பத்திரத்தை சிலாபம் பிரதேச சபையில் பெற்றுக்கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்படுகின்றது. மிருக பலி பூஜையின் மூலம் விலங்குகள் சித்திரவதை சட்டம் மீறப்படுவதாக குற்றம் சாட்டப்பட்டு தேசிய பிக்குகள் சம்மேளனம் உள்ளிட்ட சில அமைப்புக்கள் வழக்குத் தாக்கல் செய்திருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகளை வாசிக்க……

கிளிநொச்சியில் வேன் மோதி இராணுவவீரர் பலி-

கிளிநொச்சி – இயக்கச்சி பகுதியில் இன்று அதிகாலை இடம்பெற்ற விபத்தில் இராணுவவீரர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பளை பொலிஸார் தெரிவித்தனர். இரவுநேர பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டு துவிச்சக்கர வண்டியில் முகாம் நோக்கிச் சென்றுகொண்டிருந்த இராணுவவீரர் பின்னால் வந்த வேனில் மோதுண்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இயக்கச்சி இராணுவ முகாமில் கடமைபுரியும் குருநாகல் பிரதேசத்தைச் சேர்ந்த ஆர்.டி.சுமிந்தகுமார (33வயது) என்பவரே உயிரிழந்துள்ளார். விபத்துடன் தொடர்புடைய வேன் சாரதி கைதுசெய்யப்பட்டுள்ளார். அவரை கிளிநொச்சி நீதிமன்றில் ஆஜர்செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது.

இலத்திரனியல் அடையாள அட்டைக்கு புதிய சட்டம்-

உத்தேச இலத்திரனியல் அடையாள அட்டை வழங்கும்போது தகவல் பெறவென தற்போதுள்ள சட்ட ஏற்பாடுகளில் திருத்தம் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஆட்பதிவுத் திணைக்கள ஆணையாளர் ஆர்.எம்.எஸ்.சரத்குமார தெரிவித்துள்ளார். இதுவரை தகவல் பெற்ற முறைகளிலிருந்து மாறுபட்ட வகையில் தகவல்பெறும் முறை கடைபிடிக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார். கைவிரல் அடையாளம் பெறல் போன்ற நடவடிக்கைகளுக்கென சட்ட மாற்றம் தேவைப்படுவதாக அவர் கூறியுள்ளார். தற்போதுள்ள தேசிய அடையாள அட்டையில் பல குறைப்பாடுகள் காணப்படுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். எனினும் புதிய அடையாள அட்டைக்கு பெறப்படும் தகவல்கள் தொடர்பான இரகசியத்தன்மை குறித்து பிரச்சினை காணப்படுவதாக பல தரப்பிலும் தெரிவிக்கப்பட்டு வருகிறது. ஆனால் 2016ஆம் ஆண்டில் நாட்டின் அனைத்து பிரஜைகளுக்கும் இலத்திரனியல் அடையாள அட்டை வழங்க எதிர்பார்த்துள்ளதாக ஆட்பதிவுத் திணைக்கள ஆணையாளர் ஆர்.எம்.எஸ்.சரத்குமார தெரிவித்துள்ளார்.

தீக்குளித்த முன்னாள் இராணுவ வீரர் உயிரிழப்பு-

கொழும்பு கொள்ளுபிட்டி பொலிஸ் நிலையத்திற்கு முன்பாக நேற்று பகல் தீக்குளித்த முன்னாள் இராணுவ வீரர் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். நேற்று இரவு இவர் உயிரிழந்ததாக வைத்தியசாலை பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். உயிரிழந்தவர் ஹலல்கொட – பன்னிபிட்டிய வீதி பகுதியில் வசிக்கும் 73 வயதுடைய முன்னாள் இராணுவ வீரர் என தெரியவந்துள்ளது. இலங்கை தொடர்பில் விசாரணை நடத்துவதற்காக ஐ.நா மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளை அவர்கள் அமைத்துள்ள குழுவிற்கு எதிர்ப்பு தெரிவித்தே முன்னாள் இராணுவ வீரர் தீக்குளித்ததாக கொள்ளுபிட்டி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தேர்தல் ஆணையாளர் மனித உரிமைக் குழுவுக்கு அழைப்பு-

மனித உரிமை ஆணைக்குழு முன்னிலையில் பிரசன்னமாகுமாறு தேர்தல் ஆணையாளருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அரச ஊழியர்கள் பலவந்தமாக தேர்தல் நடவடிக்கையில் ஈடுபடுத்தப்படுவதாக கிடைத்த முறைப்பாடு தொடர்பில் விசாரிப்பதற்காகவே தேர்தல்கள் ஆணையாளர் மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டுள்ளார். ஊவா மாகாணத்தில் கணக்கெடுப்பு நடத்தப்படவுள்ளதாக தெரிவித்து சமுர்த்தி அதிகாரிகள் உட்பட அரச ஊழியர்கள் சிலருக்கு விடுக்கப்பட்ட அறிவித்தல் தொடர்பில் மக்கள் விடுதலை முன்னணி மனித உரிமைகள் ஆணைக்குவில் முறைப்பாடு செய்திருந்தது. இச்சந்தர்ப்பத்தில் தேர்தல்கள் ஆணையாளர் உரிய முறையில் செயற்படவில்லை எனவும் மக்கள் விடுதலை முன்னணியின் பிரசார செயலர் விஜித் ஹேரத் குற்றம் சுமத்தியுள்ளார். இதேவேளை, இவ்விடயம் தொடர்பில் தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய கூறுகையில், நாளை மனிதஉரிமைகள் ஆணைக்குழுவிற்கு செல்லவுள்ளதாக தெரிவித்துள்ளார். தேர்தல் தொடர்பாக தமது செயலகம் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் தொடர்பில் இதன்போது தெளிவுபடுத்தவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

இலங்கை மத்திய வங்கிக்கு நான்கு உதவி ஆளுநர்கள் நியமனம்-

இலங்கை மத்திய வங்கிக்கு புதிதாக நான்கு உதவி ஆளுநர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். டி.வசந்த, சி.பி.ஏ.கருணாதிலக்க, எச்.ஏ.கருணாரத்ன மற்றும் திறைசேரியின் தற்போதைய பிரதி செயலாளர் எஸ்.ஆர்.ஆட்டிகல ஆகியோரே உதவி ஆளுநர்களாக நியமிக்கப்பட்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது. கடந்த மாதம் 28ஆம் திகதி முதல் அமுலுக்குவரும் வகையில் நிதிச் சபையினால் இந்த நியமனம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. எதிர்கால சவால்களை வெற்றிக்கொள்வதற்காக இலங்கை மத்திய வங்கி முன்னெடுத்துள்ள திட்டத்தின்கீழ் இந்த பதவி உயர்வுகள் வழங்கப்பட்டுள்ளதாக மத்திய வங்கியின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஜேர்மன் தூதுவர் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்ய ஏற்பாடு-

இலங்கைக்கான ஜேர்மனிய தூதுவர் ஜூர்கன் மொர்காட் ஒருநாள் விஜயமாக நாளை யாழ்ப்பாணத்துக்கு செல்லவுள்ளார். யாழ் செல்லும் ஜேர்மன் தூதுவர் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், வடமாகாண ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறி உட்பட உயர் அதிகாரிகளைச் சந்திக்கவுள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. வடக்கின் அபிவிருத்தி குறித்தும் இங்குள்ள நிலைமைகள் தொடர்பாகவும் அவர் ஆராய்வார் என கூறப்பட்டுள்ளது,