வலிமேற்கில் புதிய கடைத்தொகுதி தவிசாளரால் திறந்துவைப்பு-

vali metkil puthiya kadaithokuthi' (2)vali metkil puthiya kadaithokuthi' (1)vali metkil puthiya kadaithokuthi' (5)யாழ்ப்பாணம் வலி மேற்கு பிரதேசத்திற்கு உட்பட்ட சத்தியக்காட்டு சந்தைப்பகுதியின் புதிய கடைத்தொகுதியை கடந்த 29.08.2014 அன்று வலி மேற்கு பிரதேசசபைத் தவிசாளர் திருமதி நாகரஞ்சினி ஐங்கரன் அவர்கள் திறந்து வைத்தார். இதன்போது கருத்துத் தெரிவித்த தவிசாளர் அவர்கள், எதிர்வரும் காலங்களில் மேலும் இச்சந்தைப் பகுதியில் பல அபிவிருத்தித் திட்டங்களை செயற்படுத்தவுள்ளதாக கூறினார். இதேவேளை 29.08.2014 அன்று பிரதேச மக்கள் வழங்கிய தகவலையடுத்து சுழிபுரம் patraikkaadu eriyoottal (1)patraikkaadu eriyoottal (2)நெல்லியன் பகுதியிலுள்ள கிரியோலைச் சந்திப் பகுதியில் விசமிகளால் எரியூட்டப்படட்ட பற்றைக்காட்டுப் பகுதிகள் மற்றும் பனை மரங்களை வலி மேற்கு பிரதேசசபை தவிசாளர் திருமதி நாகரஞ்சினி ஐங்கரன் நேரடியாக பார்;வையிட்டார். இதனைத் தொடர்ந்து இவ்விடயம் தொடர்பில் அவர், பிரதேச செயலர் மற்றும் வடமாகாண சபை சுற்றுப்புற சூழல் மற்றும் விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் ஆகியோர்க்கு எழுத்துமூலமாகவும் அறிவித்தார். இது தொடர்பாக தவிசாளர் திருமதி நாகரஞ்சினி ஐங்கரன் அவர்கள் கூறுகையில், இவ்வாறான சம்பவங்கள் தொடர்ச்சியாக நடைபெறுமானால் சுற்றுப்புற சூழல் மட்டுமல்லாது இப்பகுதி மக்களது இயல்பு நிலையும் பாதிப்புக்கு உள்ளாகும் என்று குறிப்பிட்டார்.

அமெரிக்க விசா விண்ணப்ப முறையில் மாற்றம்-

குடிபெயர்வு சாராத விஸாவுக்கான புதிய இணையத்தள நடைமுறை ஒன்றை கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகம் செப்டம்பர் 7ஆம் திகதிமுதல் செயற்படுத்தவுள்ளது. விண்ணப்பதாரிகளுக்கு மிகவும் இலகுவான, வசதியான நடைமுறைகளுடன் இப்புதிய செயல்முறை வடிவமைக்கப்பட்டுள்ளது. உலகம் முழுவதிலும் உள்ள பல்வேறு அமெரிக்க தூதரகங்களில் இந்த செயல்முறை நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது. புதிய நடைமுறை குறித்த மேலதிக தகவல்களுக்காக செப்டெம்பர் 08ஆம் திகதியிலிருந்து திங்கள்முதல் வெள்ளிவரை காலை 8மணிமுதல் இரவு 8 மணிவரை (இலங்கை நேரப்படி) 94-11-7703703 என்ற இலவச தொலைபேசி சேவையுடன் தொடர்பு கொள்ளலாம். இந்த மாற்றங்கள், புதிய திட்டமிடலுக்கான இணைய முகவரி, பொது விசா தகவல்களை தூதரகத்தின் http://srilanka.usembassy.gov என்ற இணையத்தளத்தில் பெற்றுக்கொள்ள முடியும். இணையத்தளம் மற்றும் தொலைபேசி சேவைகள் ஆங்கிலம், சிங்களம், தமிழ் ஆகிய மொழிகளில் பெற்றுக் கொள்ளக் கூடியதாகவிருக்கும் என்று இலங்கைக்கான அமெரிக்க தூதரகம் குறிப்பிட்டுள்ளது.

மேலும் செய்திகளை வாசிக்க………

இலங்கை அகதிகள் தொடர்பில் அவுஸ்ரேலிய பிரதமர் கருத்து-

இந்திய விஜயத்தை மேற்கொண்டுள்ள அவுஸ்திரேலிய பிரதமர் ரொனி எபட், இந்திய தலைவர்களுடன் இலங்கை அகதிகள் குறித்தும் பேச்சுவார்த்தை நடத்துவாரென எதிர்பார்க்கப்படுகிறது. இரண்டு நாட்கள் விஜயமாக அவர் இன்று இந்தியா சென்றுள்ளார். நாளைய தினம் அவர் இந்திய பிரதரை சந்திக்கிறார். இந்தியாவுக்கான யுரேனிய ஏற்றமதி தொடர்பான உடன்படிக்கையை ஏற்படுத்தும் நோக்கில் அவரது இந்த விஜயம் அமைந்துள்ளது. எனினும் இலங்கை அகதிகள் குறித்த பேச்சுவார்ததையும் இடம்பெறும் என இந்திய தகவல்கள் கூறுகின்றன. அத்துடன் இந்தியாவில் இருந்து இலங்கை அகதிகள் அவுஸ்திரேலியா நோக்கி பயணிப்பதை தடுப்பதற்கான நடவடிக்கைகள் குறித்து ரொனி அபட் தமது விஜயத்தின்போது இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்துவார் என்று மேலும் தெரிவிக்கப்படுகின்றது.

வடக்கு நிலைமைகள் குறித்து பிரித்தானியா அவதானம்-

இலங்கைகியின் வட பகுதியில் காணப்படுகின்ற தற்போதைய நிலைமைகள் குறித்து பிரித்தானிய அரசாங்கத்தின் அவதானத்துக்கு கொண்டுசெல்லப்படும் என பிரித்தானிய உயர்ஸ்தானிகர் ஜோன் றென்கின் தெரிவித்துள்ளார். நேற்று வவுனியாவுக்கு விஜயம்செய்த அவர், தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியிருந்தார். இதன்போது காணி அபகரிப்புகள், குடியேற்றங்கள் போன்ற விடயங்கள் பற்றி பேச்சுவார்த்தை நடத்தப்பட்டிருந்தன. இதன்போது அவர் மேற்படி கருத்தினை வெளியிட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

கொழும்பு விளக்கமறியல் சிறையின் பாதுகாப்பு பொலிஸார் வசம்-

கொழும்பு விளக்கமறியல் சிறைச்சாலையின் அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளும் சிறைச்சாலைப் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. கொழும்பு விளக்கமறியல் சிறைச்சாலையின் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு இதுவரை சிறைச்சாலை அதிகாரிகளே பொறுப்பாக இருந்ததாக சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் சந்திரரத்ன பல்லேகம தெரிவித்துள்ளார். விளக்கமறியல் சிறையில் இடம்பெறும் அநியாயங்களை கருத்திற்கொண்டு இந்நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார். இதேவேளை, சிறைச்சாலைகள் திணைக்களத்திற்கு புதிதாக 50 மோட்டார் சைக்கிள்கள் நேற்றுமாலை வழங்கப்பட்டுள்ளன.

தபால் ஊழியர்கள் மீண்டும் சேவையில்-

கடந்த 02.09.2014 செவ்வாய்கிழமை நள்ளிரவு முதல் ஆரம்பிக்கப்பட்ட தபால் தொழிற்சங்க ஊழியர்களின் பணிப்பகிஷ்கரிப்பு தற்போது நிறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தபால் தொழிற்சங்க ஊழியர்களின் பணிப்பகிஷ்கரிப்பு நிறைவுக்கு வந்தநிலையில் தேங்கிக்கிடந்த தபால்களை விநியோகிக்கும் நடவடிக்கைகள் மீண்டும் வழமைபோல் இடம்பெறுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. பல கோரிக்கைகளை முன்வைத்து செவ்வாய் நள்ளிரவு முதல் நேற்று நள்ளிரவு வரை இப் பணிப்பகிஷ்கரிப்பை தபால் தொழிற்சங்க ஒன்றியம் முன்னெடுத்திருந்தது.

ஊவாவில் இன்று தபால் மூல வாக்களிப்பு-

ஊவா மாகாண சபை தேர்தலுக்கான தபால் வாக்களிப்பு இன்று 4ம் திகதி மற்றும் நாளை 5ம் திகதியும் இடம்பெறுவதாக மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரி றோஹன கீர்த்தி திசாநாயக அறிவித்துள்ளார். இம்மாவட்டத்திலுள்ள அரச திணைக்களங்களிலும், காரியாலயங்களிலும் சேவைபுரியும் அரச ஊழியர்கள் தத்தமது தலைமைக் காரியாலயத் தலைவரின் சிபார்சுக்கமைய காலை 9மணிமுதல் மாலை 3மணிவரை தபால் வாக்களிப்பில் பங்கேற்க முடியும். ஏலவே கொடுக்கப்பட்டுள்ள தேர்தல் அறிவுரைக்கமைய இவ்வாக்களிப்புக்கு விண்ணப்பித்த அரச ஊழியர்களை வாக்களிக்குமாறு தேர்தல் திணைக்களம் கேட்டுள்ளது.