தமிழரசுக் கட்சியின் புதிய தலைவராக மாவை சேனாதிராஜா தெரிவு-

itak_manadu_005itak_manadu_001இலங்கை தமிழரசுக் கட்சியின் புதிய தலைவராக யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவுசெய்யப்பட்டுள்ளார். மேலும் செயற்குழு தலைவராக இரா.சம்பந்தனும், செயலாளராக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் கி.துரைராஜசிங்கம் தெரிவாகியுள்ளார். இலங்கை தமிழரசுக் கட்சி பொதுச்சபை கூட்டம் இன்றுகாலை முதல் வவுனியாவில் நடைபெற்று வருகின்றது. வவுனியா நகர சபை கலாசார மண்டபத்தில் கட்சியின் 15ஆவது தேசிய மாநாட்டை முன்னிட்டு நடத்தப்படும் பொதுச் சபை கூட்டத்தில் இந்த தெரிவுகள் இடம்பெற்றுள்ளன. இலங்கை தமிழரசுக் கட்சியின் 15ஆவது தேசிய மாநாடு நாளையதினம் வவுனியா நகரசபை கலாசார மண்டபத்தில் நடைபெறவுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

கியூபா வெளிவிவகார அமைச்சர் இலங்கைக்கு விஜயம்-

இரண்டு நாள் விஜயமொன்றை மேற்கொண்டு, கியூபா வெளிவிவகார அமைச்சர் புர்னோ ரொட்ரிகியுஸ் பரில்லா நாளை இலங்கை வரவுள்ளார். இந்த விஜயத்தின்போது அவர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் ஆகியோருடன் கலந்துரையாடவுள்ளதாக வெளிவிவகார அமைச்சு குறிப்பிட்டுள்ளது. கடந்த பெப்ரவரி மாதம் கியூபாவுக்குச் சென்றிருந்த அமைச்சர் சுசில் பிரேமஜயந்த இலங்கைக்கு வருமாறு அந்த நாட்டு வெளிவிவகார அமைச்சருக்கு அழைப்பு விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது. இதன்படி இலங்கை வரும் ரொட்ரிகியுஸ் பரில்லா எதிர்வரும் 9ம் திகதி தமது நாட்டுக்குத் திரும்பவுள்ளார்.

யசூசி அகாசி தமிழ் தேசியக் கூட்டமைப்பினரை சந்திக்க ஏற்பாடு-

இலங்கைக்கு மூன்று நாட்கள் பயணத்தை மேற்கொண்டுள்ள ஜப்பான் தூதுவர் யசூசி அகாசி இன்று இரவு தமிழ் தேசியக் கூட்டமைப்பினரைச் சந்திக்கவுள்ளார். இரா.சம்பந்தன் தலைமையில் இடம்பெறவுள்ள சந்திப்பில் வடக்கு கிழக்கு மாகாணத்தின் தற்போதைய நிலைமை மற்றும் வடமாகாண சபை செயற்படுவதற்கு அரசாங்கம் தடையாவுள்ளமை போன்ற பல்வேறு விடயங்கள் தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்தப்படவுள்ளதாக தெரியவருகின்றது. இதேவேளை வடக்கு கிழக்கு மாகாணத்தின் அபிவிருத்திக்கு ஜப்பான் நேரடியாக உதவியளிக்க வேண்டும் என கோரி மகஜர் ஒன்று கையளிக்கவுள்ளதாக கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. 2002ஆம் ஆண்டு நேர்வேயின் ஏற்பாட்டில் அரசுக்கும் புலிகளுக்குமிடையே பேச்சுக்கள் ஆரம்பமானபோது அன்றிலிருந்து யசூசி அகாசி ஜப்பானின் இலங்கைக்கான சமாதான தூதுவராக நியமிக்கப்பட்டிருந்தார். தற்போதைய விஜயமானது இவரது இலங்கைக்கான 24ஆவது விஜயமென்பது குறிப்பிடத்தக்கது.

உயிரிழப்புகளுக்கு ஐ.நா பொறுப்பு கூற வேண்டும்-

இலங்கையில் இடம்பெற்ற இறுதி யுத்தத்தின்போது பொதுமக்களை பாதுகாக்க ஐ.நா சபை தவறிவிட்டதாக மீண்டும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. புதிதாக வெளியான அறிக்கை ஒன்றை மேற்கோள்காட்டி த றொயிட்டர்ஸ் இணையத்தளம் இதனைக் கூறியுள்ளது. யுத்தம் இடம்பெற்ற காலப்பகுதியில் ஐ.நா சபை எந்த நடவடிக்கையையும் மேற்கொள்ளவில்லை என அந்த அறிக்கையில் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. எனவே இறுதி யுத்தத்தின்போது இடம்பெற்ற மனித உயிரிழப்புகளுக்கு ஐ.நா சபையே பொறுப்பு கூறவேண்டும் என்றும் அதில்; கூறப்பட்டுள்ளது. எவ்வாறாயினும் ஏற்கனவே இந்த குற்றச்சாட்டு தொடர்பில் ஐ.நா சபை முன்னதாக விசாரணை நடத்தியிருந்தது. இது தொடர்பில் ஜோன் பெற்றி தயாரித்த அறிக்கையில், இலங்கை யுத்தத்தின் போது ஐ.நா சபையின் கட்டமைப்பு முழுமையாக தோல்வி அடைந்திருப்பதாக சுட்டிக்காட்டப்பட்டிருந்தது. இதனடிப்படையில் ஐ.நா சபை தங்களின் கட்டமைப்பை சீரமைத்துக் கொள்வதற்கான மற்றுமொரு அறிக்கையையும் தயாரித்திருந்தது.

ஐ.தே.கட்சியின் 68வது மாநாடு-

ஐக்கிய தேசிய கட்சியின் 68வது வருடாந்த மாநாடு இன்று பசறையில் நடைபெறுகின்றது. கட்சியின் பொது செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்கவின் தகவல்படி, ஊவா மாகாண சபைத் தேர்தலுக்கு சமாந்தரமாக இந்த மாநாட்டை நடத்துவதாக தெரியவருகிறது. இம்மாநாட்டில் ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க உள்ளிட்ட பலர் பங்கேற்கின்றனர்.