கியூபா வெளிவிவகார அமைச்சர் இலங்கைக்கு விஜயம்-
கியூபா வெளிவிவகார அமைச்சர் புருனோ ரோதிகேஸ் பரில்லா, இருநாள் உத்தியோகப்பூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இன்றுஅதிகாலை 4.45க்கு இலங்கை வந்துள்ளார். அவர் தனது விஜயத்தின்போது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ மற்றும் வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் ஆகியோரை சந்தித்து இருதரப்பு பேச்சுவார்த்தைகளை நடாத்தவுள்ளார். கியூபாவுக்கும் – இலங்கைக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகளுக்கு 55 ஆண்டுகள் பூர்த்தியடைவதனை முன்னிட்டு, இடம்பெறவுள்ள நிகழ்விலும், கியூபா வெளிவிவகார அமைச்சர் பங்கேற்கவுள்ளார். இதைத்தவிர, சிறீ ஜயவர்தனபுர கோட்டே இராணுவ நினைவுத்தூபி, பத்தரமுல்லையிலுள்ள எமது கிராமம், கொழும்பு விஹாரமகாதேவி பூங்காவுக்கும் அவர் செல்லவுள்ளார். எதிர்வரும் 9ஆம் திகதி கியூபா வெளிவிவகார அமைச்சர், நாடுதிரும்பவுள்ளார். இதேவேளை கியூபா வெளிவிவகார அமைச்சர் ஒருவர் 32 வருடங்களின் பின் இலங்கைக்கு விஜயம் செய்துள்ளார்.
ஐ.நா விசாரணைக்கு இலங்கை ஒத்துழைக்க வேண்டும்-புதிய ஆணையாளர்-
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையினால் முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணைகளுக்கு இலங்கை அரசாங்கம் ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென, ஐ.நாவின் புதிய மனித உரிமைகள் ஆணையாளரும் ஜோர்தான் இளவரசருமான அல் ஹூசெய்ன் தெரிவித்துள்ளார். மேலும் அண்மைக்காலமாக இலங்கையில் கிறிஸ்தவ மற்றும் முஸ்லிம்கள்மீது நடத்தப்பட்ட தாக்குதல்கள் குறித்தும் புதிய ஆணையாளர் நாயகம் கவலை வெளியிட்டுள்ளார். இதேவேளை நாளையதினம் ஆரம்பமாகவுள்ள ஐக்கிய நாடுகளின் மனித உரிமைப் பேரவை அமர்வுகளில் அவர் இதனைத் தெரிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஐ.நா சபை மனித உரிமைகள் பேரவையின் 27வது அமர்வுகள் நாளை ஆரம்பமாகி 26ம் திகதிவரை இடம்பெறவுள்ளன.
ஜப்பானின் பிரதமர் இலங்கைக்கு விஜயம்-
ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே உத்தியோகபூர்வ விஜயமொன்றினை மேற்கொண்டு இலங்கைக்கு வருகைதந்துள்ளார். ஜப்பானின் பிரதமர் ஒருவர் 24 வருடங்களின் பின்னர் இலங்கைக்கான விஜயத்தை மேற்கொண்டுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது. ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே தனது இலங்கை விஜயத்தின்போது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவுடன் இரு தரப்பு பேச்சுவார்த்தைகளை நடத்தவுள்ளதாகவும், அத்துடன் பல்வேறு சந்திப்புக்களை மேற்கொள்வதற்கும் ஏற்படாகியிருப்பதாகவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
யசூசி அகாசி தமிழ் தேசிய கூட்டமைப்பு சந்திப்பு-
பெரும்பான்மையான தமிழ் மக்களின் வாக்குகள் மூலம் உருவாக்கப்பட்ட வட மாகாண சபை சுயாதீனமாக இயங்க முடியாமல் இருப்பதாக தமிழ் தேசிய கூட்டமைப்பு குற்றம் சுமத்தியுள்ளது. கூட்டமைப்பின் பிரதிநிதிகள் நேற்று ஜப்பானின் விசேட தூதுவர் யசூசி அகாசியை சந்தித்தபோது இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளனர். அத்துடன் வடமாகாண சபை இயங்கமுடியாத நிலையில் இருக்கின்றமை மற்றும் தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு, காணி அபகரிப்புகள் போன்ற விடயங்கள் தொடர்பிலும் இதன்போது பேசப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
வாகன விபத்தில் பாராளுமன்ற உறுப்பினரான அஜித் மான்னப்பெரும காயம்-
தெற்கு அதிவேக வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஐக்கிய தேசியக் கட்சியின் கம்பஹா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அஜித் மான்னப்பெரும காயமடைந்துள்ளார். காயமடைந்த அவர், களுத்துறை நாகொடை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார். பாராளுமன்ற உறுப்பினர் பயணித்த ஜீப் வாகனம் தெற்கு அதிவேக வீதியின் தொடம்கொட பகுதியில் குடை சாய்ந்ததென தகவல் கிடைத்ததாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அபுதாபியிலிருந்து நாடுகடத்தப்பட்ட இருவர் கைது-
அபுதாபியிலிருந்து நாடுகடத்தப்பட்ட இருவரை பயங்கரவாத புலனாய்வு பிரிவினர், கட்டுநாயக்க பண்டாரநாயக்க விமான நிலையத்தில் வைத்து இன்று கைதுசெய்துள்ளனர். போலியான கடவுச்சீட்டுக்கள் ஊடாக பயணித்தமை மற்றும் புலிகள் அமைப்பை மீளவும் கட்டியெழுப்புவதற்கு நடவடிக்கை எடுத்தனரா என்ற விடயங்கள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதற்காக இவ்விருவரும் கைதுசெய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. வல்லுவர்புரம், விசுவமடுவைச் சேர்ந்த பாலச்சந்திரன் தவபாலன் அனுஷன் (வயது 20), கடகலந்தகுளம், முருங்கனைச் சேர்ந்த செபஸ்தியன் பிள்ளை ரொபட் (வயது 43) ஆகிய இருவருமே கைதானவர்களாவர். இதில் செபஸ்தியன்பிள்ளை ரொபட் என்பவர் 2009ஆம் ஆண்டு ஏப்ரல் 19ஆம் திகதி பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டு 2010ஆம் ஆண்டு ஜனவரி 22ஆம் திகதி பிணை நிபந்தனையுடன் விடுவிக்கப்பட்டவர் என்று மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை தமிழரசு கட்சியின் தீர்மானங்கள் தொடர்பில் சிக்கல்
இலங்கை தமிழரசு கட்சியின் 15ஆவது தேசிய மாநாட்டில் வெளியிடப்படவிருந்த 15 தீர்மானங்கள் தொடர்பில் சிக்கல் தோன்றியுள்ளது. இலங்கை தமிழரசு கட்சியின் 15ஆவது பேராளர் மாநாட்டின் போது 15 தீர்மானங்கள், நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.எம்.சுமந்திரனால் இன்று வாசிக்கப்பட்டன.
இதன்போது, அம்மாநாட்டில் கூடியிருந்த சிலர், தமிழர்களின் அபிலாஷைகளை உள்ளடக்கியதாக தீர்மானங்கள் எழுதப்பட வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். இந்நிலையில் தீர்மானங்களில் பல மாற்றங்களை ஏற்படுத்தி, இன்று மாலை 3.30 மணிக்கு இடம்பெறவுள்ள பொதுக்கூட்டத்தில் வெளியிடுவது என தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக மத்தியகுழு உறுபபினர் ஒருவர் கருத்து தெரிவிக்கையில்,
தமிழரசுக்கட்சியின் 15ஆவது தேசிய மாநாட்டை முன்னிட்டு கடந்த வெள்ளிக்கிழமை முதல் மத்தியகுழு, பொதுச்சபை என்பன கட்சியின் தீர்மானங்கள் தொடர்பான பல்வேறான கருத்துக்களை எடுத்தியம்பியிருந்தோம்.
தமிழ் மக்களின் அபிலாஷைகளை பிரதிபலிக்கும் வகையில் அவை அமையவேண்டும் என பலரும் கருத்து வெளியிட்டிருந்த நிலையில், கட்சியின் தலைமைகள் தாம் எழுதிய தீர்மானங்களில் எவ்வித மாற்றமும் இன்றி அவற்றை இன்று வெளியிட்டிருந்தது.
எனவே தான், அதனை நிராகரித்து மாற்றங்களை செய்யுமாறு வலியுறுத்தியுள்ளோம் என அவர் தெரிவித்தார்.
தமிழரசுக் கட்சியின் 15ஆவது பேராளர் மாநாடு-
இலங்கை தமிழரசுக் கட்சியின் 15ஆவது தேசிய மாநாட்டின் 3ஆவது நாள் பேராளர் மாநாடு இன்று ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றது. இலங்கைத் தமிழரசுக் கட்சியின் புதிய நிர்வாகிகளின் விபரங்களாவன, தலைவராக நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா, செயலராக கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த துரைராஜசிங்கம், சிரேஷ்ட துணைத் தலைவர்களாக பொன்.செல்வராஜா, பேராசிரியர் சி.க.சிற்றம்பலம், உப தலைவர்களாக திருமலையைச் சேர்ந்த துரைரட்ணசிங்கம், அம்பாறையைச் சேர்ந்த தோமஸ் வில்லியம், வவுனியாவைச் சேர்ந்த ப.சத்தியலிங்கம், யாழ்ப்பாணத்தை சேர்ந்த எஸ்.பரஞ்சோதி ஆகியோரும் தெரிவுசெய்யப்பட்டுள்ளனர். இவர்களுடன் கட்சியின் துணைப் பொதுச் செயலர்களாக எம்.ஏ.சுமந்திரன், சி.வி.கே.சிவஞானம் ஆகியோரும், நிர்வாகச் செயலராக சி.குலநாயகமும், பொருளாளர்களாக கனகசபாபதி, அன்ரனி ஜெகநாதன் ஆகியோரும் தெரிவுசெய்யப்பட்டனர். ஊடகத்துறை -பா.அரியநேந்திரன், சட்டத்துறை -கே.வி. தவராசா, மீள்குடியேற்றம் மற்றும் வாழ்வாதாரம் -ஈ.சரவணபவன், இளைஞர் விவகாரம் -சி.சிவகரன், கல்வி மேம்பாடு -சி.தண்டாயுதபாணி, மகளிர் விவகாரம் -அனந்தி சசிதரன், பேராசிரியர் நாச்சியார், மத,பண்பாட்டு விவகாரம் -சீ.யோகேஸ்வரன், விவசாயம் -கமலேஸ்வரன், மீன்பிடித்துறை -ஆனோல்ட், சமூகமேம்பாடு -எஸ்.சிவயோகன், கலையரசன் கொள்கைப் பரப்புகை -எஸ்.வேளமாலிகிதன்.