ஐ.நா மனித உரிமைகள் பேரவை கூட்டத் தொடர் ஆரம்பம்-
ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 27ஆவது கூட்டத்தொடர் ஜெனீவாவில் இன்று ஆரம்பமாகவுள்ளது இலங்கை தொடர்பாக ஐக்கிய நாடுகளின் விசாரணை குழுவினர் மேற்கொண்ட விசாரணைகள் தொடர்பான தகவல்கள் இன்று ஆரம்பமாகவுள்ள கூட்டத் தொடரில் வெளியிடப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது. கடந்த மார்ச் 26ஆம் திகதி தொடக்கம் இன்றுவரை குறித்த முன்னெடுக்கப்பட்ட விசாரணை தொடர்பான தகவல்கள் இவ்வாறு வெளியிடப்படவுள்ளன. ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் இந்த வருடத்திற்கான இறுதி கூட்டத் தொடராக இன்று ஆரம்பமாகவுள்ள கூட்டத் தொடர் அமைந்துள்ளதென இலங்கைமனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. கடந்த ஆறு வருடங்களாக ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளராக பதவி வகித்து வந்த நவநீதம்பிள்ளை ஓய்வுபெற்றுள்ள நிலையில் புதிய ஆணையாளராக பதவியேற்றுள்ள ஜோர்தான் இளவரசர் ஷெய்த் அல் {ஹசைன் இன்று ஆரம்பவுரை நிகழ்த்தவுள்ளார். ஆணையாளர்களில் மாற்றம் ஏற்பட்டுள்ள போதிலும் இலங்கை தொடர்பான விசாரணைகளில் எவ்வித மாற்றமும் ஏற்படுவதற்கான வாய்ப்பில்லை என இலங்கை மனித உரிமைகள் ஆணையாளர் கலாநிதி பிரதீபா மஹானாமஹேவா சுட்டிக்காட்டியுள்ளார்.
இலங்கையில் பயங்கரமான சூழல் தொடர்கிறது-ஐ.நா மனித உரிமை ஆணையாளர்-
இலங்கையில் மனித உரிமைகளுக்காக செயற்படும் சமூகத்தினருக்கு எதிராக பிரயோகிக்கப்படும் பயமுறுத்தல்களையிட்டு நான் அச்சமடைந்துள்ளேன் என ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் ஷெயிட் அல் ஹூசேன் தெரிவித்துள்ளார். ஐ.நா சபையின் 27ஆவது அமர்வு இன்று ஆரம்பமானபோது தனது ஆரம்ப உரையின்போது மனித உரிமை ஆணையகத்தின் புதிய ஆணையாளர் இதனைத் தெரிவித்துள்ளார். இலங்கையில் முஸ்லிம் மற்றும் கிறிஸ்தவ சிறுபான்மை சமூகங்களுக்கு எதிரான அச்சுறுத்தல்களும் வன்முறையும் அரங்கேறி வருவதைக் கண்டிப்பதாக கூறிய அவர், முன்னாள் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளையின் பாதையில் தொடர்ந்து பயணிக்கப் போவதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார். புகலிட கோரிக்கையாளர்களின் உரிமையை அவுஸ்திரேலியா தொடர்ச்சியாக மீறிவருவதையும், அடைக்கலம் கோருவோரை கடலில் வைத்து விசாரிப்பதையும் கப்பல்களை தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்புவதையும் கடுமையாக அவர் கண்டித்துள்ளார். எதேச்சாதிகாரமாக தடுத்துவைத்தல் சித்திரவதைக்கு உட்படும் சாத்தியம் ஆகிய மனித உரிமை மீறல்களுக்கு இந்த கொள்கை வழிவகுத்துள்ளது என ஷெயிட் அல் ஹூசேன் மேலும் தெரிவித்துள்ளார்.
ஜே.வி.பி ஆதரவு பல்கலைக்கழக மாணவர்கள்மீது தாக்குதல்-
மொனராகலை – மதுருகெட்டிய பிரதேசத்தில் மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி) ஆதரவாளர்களான பல்கலைக்கழக மாணவர்கள் நால்வர் இன்றுகாலை 6.30 மணியளவில் இலக்கத் தகடு இல்லாத டிபென்டர் வாகனத்தில் வந்த இனந்தெரியாத நபர்களால் தாக்கப்பட்டு அதில் ஒருவர் கடத்திச் செல்லப்பட்டுள்ளார். கடத்தப்பட்ட மாணவன் கடுமையாகத் தாக்கப்பட்டு வீதியில் விட்டுச் செல்லப்பட்டுள்ளதாக தேர்தல் கண்காணிப்பு இயக்கமான கபே தெரிவித்துள்ளது. மக்கள் விடுதலை முன்னணி மொனராகலை மாவட்ட வேட்பாளர் பல்லியகுருகே விஜேசிறியின் வீட்டில் குறித்த மாணவர்கள் தங்கியிருந்துள்ளனர். இன்றுகாலை முகம் கழுவவென நால்வரும் வீட்டுக்கு அருகில் உள்ள கிணற்றுக்குச் சென்றவேளை இத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. கடத்தப்பட்ட மாணவருக்கு கழுத்து, தலை, கை பகுதிகளில் கடுமையான காயம் ஏற்பட்டுள்ளது. வேட்பாளர் பல்லியகுருகே விஜேசிறியின் வீட்டின்மீது இதற்கு முன்னர் தாக்குதல் நடத்தப்பட்டதோடு துப்பாக்கிச்சூடும் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
மட்டக்களப்பில் பொதுமக்களின் காணிகள் கையளிப்பு-
மட்டக்களப்பு மாவட்டத்தில் யுத்த நிலைமையின்போது படைமுகாமாக படையினரால் பயன்படுத்தப்பட்டுவந்த பொதுமக்களின் காணிகள் கையளிக்கப்பட்டு வருகின்றன. இதன்கீழ் களுவாஞ்சிகுடி பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் படையினரின் முகாமாக இருந்த பொதுமக்களின் காணிகளை உத்தியோகபூர்வமாக கையளிக்கும் நிகழ்வு நடைபெற்றுள்ளது. களுவாஞ்சிகுடி பிரதேச செயலகத்துக்குட்பட்ட ஓந்தாச்சிமடத்தில் உள்ள 18வது சிங்கபாகு படைப்பிரிவின் அலுவலகத்தில் இந்நிகழ்வு நடைபெற்றது. பாதுகாப்பு செயலர் கோத்தபாயவின் ஆலோசனையின்பேரில் கிழக்கு மாகாண கட்டளையிடும் அதிகாரி மேஜர் ஜெனரல் லால் பெரேராவின் வழிகாட்டலில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இதன்போது களுவாஞ்சிகுடி பிரதேச செயலகத்துக்குட்பட்ட ஓந்தாச்சிமடத்தில் படையினரின் முகாம் இருந்த பொதுமக்களின் காணிகளின் ஒரு பகுதி இவ்வாறு கையளிக்கப்பட்டுள்ளது. இதேபோன்று களுவாஞ்சிகுடி பிரதான வீதியில் இருந்த பிரதான படைமுகாம் மற்றும் போரதீவுப்பற்று பிரதேச செயலகத்துக்குட்பட்டவெல்லாவெளியிலுள்ள படைமுகாம் என்பன அகற்றப்பட்டுள்ளன.
மாணவியைக் காணவில்லையென முறைப்பாடு-
நுவரெலியா தலவாக்கலை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட வட்டக்கொடை -மடக்கும்புர கீழ் பிரிவு தோட்டத்தில் வசிக்கும் பாடசாலை மாணவி ஒருவர் காணாமல் போயுள்ளார். வட்டக்கொடை தமிழ் மகா வித்தியாலயத்தில் 10ஆம் ஆண்டு கல்வி கற்கும் சக்திவேல் நித்தியா (வயது 15) எனும் மாணவியே கடந்த 5ஆம் திகதியில் இருந்து காணாமல் போயுள்ளதாக தெரியவந்துள்ளது. வெளியே சென்ற மாணவி வீட்டுக்கு திரும்பாததையடுத்து மாணவியின் உறவினர்கள் அயலவர்களின் உதவியோடு தேடுதல் பணிகளில் ஈடுப்பட்டிருந்த போதிலும் அவர் கிடைக்கவில்லை. அதன்பின் காணாமல் போன மாணவியின் தந்தை நேற்று 7ஆம் திகதி தலவாக்கலை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடொன்றைப் பதிவுசெய்துள்ளார். முறைப்பாட்டின் அடிப்படையில் தலவாக்கலை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
தமிழரசு கட்சி மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்-
ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையால் அறிவிக்கப்பட்டுள்ள விசாரணைக் குழுவின் நடவடிக்கைகள் முழுமையாக நிறைவே உதவி அளிக்கப்படும் என இலங்கை தமிழரசு கட்சியின் 15ஆவது தேசிய மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இலங்கைத் தமிழரசுக் கட்சி 15ஆவது தேசிய மாநாடு நேற்றிரவு வவுனியாவில் முடிவுற்றபோது நிறைவேற்றப்பட்ட முக்கிய தீர்மானங்கள் வருமாறு:-
01. 2014 ஆம் ஆண்டு ஆவணி மாதம் 5,6,7 ஆம் திகதிகளில் வவுனியாவில் கூடிய இலங்கைத் தமிழரசுக் கட்சியின் 15 ஆவது தேசிய மாநாடு ஏறத்தாழ அறுபது வருடங்களாக இக்கட்சியின் கொள்கைகளுக்காக அயராது உழைத்தவர்களுக்கும் இதன் அடிப்படைக் கொள்கைகளை ஏற்று, ஆதரித்து, தொடர்ச்சியாக வாக்களித்து, இதுவே தமிழ் மக்களுடைய நிலைப்பாடு என்பதை ஜனநாயக முறைப்படி உறுதி செய்த எமது மக்களுக்கும், எம்முடைய மனமார்ந்த நன்றிகளைத் தெரிவிக்கும் அதேவேளையிலே அந்தக் கொள்கை – அதாவது, எமது இனத்தின் சுயநிர்ணய அடிப்படையிலே, பிளவுபடாத ஐக்கிய இலங்கைக்குள்ளே, இணைந்த வடக்கு – கிழக்கில் பகிரப்படும் இறைமையின் அடிப்படையில், தன்னாட்சி அதிகாரம் கொண்ட அரசு ஒன்று வன்முறையற்ற சாத்வீகப் போராட்டத்தின் மூலம் – வென்றெடுக்கப்படும் வரை போராடுவோம் என்று எமது மக்களுக்கு உறுதி கூறுகின்றது. Read more