சர்வதேச விசாரணைக் குழுவிற்கு அனுமதி இல்லை-அரசாங்கம்-

sarvadesha visaaranai kuluvitkuஇலங்கைக்கு எதிரான சர்வதேச போர்க்குற்ற விசாரணைக் குழுவை நாட்டுக்குள் அனுமதிப்பதில்லை என்ற நிலைப்பாட்டை இலங்கை மீண்டும் இன்று ஐ.நா சபையில் உறுதிப்படுத்தியுள்ளது. ஐ,நா. மனித உரிமை கூட்டத் தொடர் இன்றைய 27ஆவது அமர்வில் உரையாற்றிய இலங்கையின் நிரந்தர பிரதிநிதி ரவிநாத் ஆரியசிங்க இதனைக் கூறியுள்ளார். மேலும் மனித உரிமை செயற்பாட்டாளர்கள் பழிவாங்கப்படுவதாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டை அவர் நிராகரித்துள்ளார். இலங்கை தொடர்ந்தும் சர்வதேசத்துடன் இணைந்திருக்கும். அமெரிக்கா, பிரித்தானியா ஆகிய நாடுகள் கொண்டுவந்து நிறைவேற்றிய பிரேரணையை இலங்கை அரசாங்கம் ஏற்கனவே நிராகரித்துள்ளது. இலங்கையரசு போர் தொடர்பில் உள்நாட்டு விசாரணைகளை ஆரம்பிக்கவுள்ளது. நாளை சாட்சி பாதுகாப்பு பிரேரணையை பாராளுமன்றில் சமர்ப்பிக்கவுள்ளது. ஐ.நாவின் சர்வதேச விசாரணையானது, வரையறை மீறிய செயற்பாடு என்பது மட்டுமல்லாது இலங்கையின் உள்நாட்டு விசாரணையையும் மலினப்படுத்துகிறது என நிரந்தர பிரதிநிதி ரவிநாத் ஆரியசிங்க மேலும் குறிப்பிட்டுள்ளார்.

வடக்கு முதலமைச்சர் மற்றும் சுகாதார அமைச்சருக்கு வாகனங்கள் கையளிப்பு-

vaahanamவடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், வடமாகாண சுகாதார அமைச்சர் பத்மநாதன் சத்தியலிங்கம் ஆகியோருக்கான வாகனங்களை ஆளுநர் அலுவலத்தில் வைத்து வடமாகாண ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறி இன்று வழங்கியுள்ளார். வாகனங்களை, முதலமைச்சர் மற்றும் சுகாதார அமைச்சர் ஆகியோரின் செயலாளர்கள் பெற்றுக்கொண்டனர். வடமாகாண சபையால் கடந்த ஆண்டு வரவுசெலவு திட்டத்தில் 50 மில்லியன் ரூபா நிதி, முதலமைச்சர், அவைத்தலைவர் மற்றும் நான்கு அமைச்சர்களுக்கு வாகனங்கள் வாங்குவதற்காக ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதனடிப்படையில், அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம், விவசாய அமைச்சர் பொன்னுத்துரை ஐங்கரநேசன், கல்வி அமைச்சர் தம்பிராசா குருகுலராஜா, வர்த்தக வாணிப மீன்பிடி அமைச்சர் பாலசுப்பிரமணியம் டெனீஸ்வரன் ஆகியோருக்கு தலா 7 மில்லியன் ரூபா பெறுமதியான வாகனங்கள் கொள்முதல் செய்யப்பட்டு, ஆளுநரால் கடந்த ஜூலை 5ஆம் திகதி வழங்கப்பட்டது. அத்துடன், முதலமைச்சருக்கு 5 மில்லியன் ரூபா பெறுமதியான கார் ஒன்றும் வழங்கப்பட்டது. இந்நிலையில் இன்று முதலமைச்சருக்கு 10 மில்லியன் ரூபா பெறுமதியான வாகனம் ஒன்றும் சுகாதார அமைச்சருக்கு 7 மில்லியன் ரூபா பெறுமதியான வாகனமும் வழங்கப்பட்டுள்ளன.

யாழ் – கொழும்பு பேரூந்து தடம்புரண்டதில் ஒருவர் உயிரிழப்பு-

yaal colomboயாழில் இருந்து கொழும்பு சென்று கொண்டிருந்த தனியார் பேரூந்து புத்தூர் கொடிகாமம் வீதியில் வேகக் கட்டுப்பாட்டை இழந்து நேற்றிரவு தடம்புரண்டதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். கட்டுடை மேற்கு, மானிப்பாய்யை சேர்ந்த என்.சதீசன் (வயது 24) என்ற இளைஞனே பஸ்சுக்குள் நசியுண்டு உயிரிழந்துள்ளார். விபத்தில் பலர் படுகாயமடைந்து யாழ். போதனா வைத்தியசாலை மற்றும் சாவகச்சேரி வைத்தியசாலை என்பனவற்றில்; அனுமதிக்கப்பட்டுள்ளனர். குறித்த பேருந்து ஆபத்தான வளைவொன்றில் திருப்புவதற்கு முற்பட்டவேளை வேகக் கட்டுப்பாட்டை இழந்து தடம்புரண்டதாக தெரிவிக்கபபட்டுள்ளது. இந்த வீதியால் யாழ் கொழும்பு பேரூந்துக்கள் பயணிப்பதில்லை எனவும், மேற்படி பேரூந்துக்கு வழித்தட அனுமதி இல்லாமையாலேயே இவ் வீதியால் பயணித்ததாகவும் கூறப்படுகின்றது. இந்நிலையில் கண்டி நெடுஞ்சாலையில் பொலிசார் பேரூந்தினை மறித்து வழித்தட அனுமதியினை பரிசோதிப்பார்கள் என்ற காரணத்தினாலேயே குறித்த வீதியால் பேரூந்து பயணித்து விபத்துக்கு உள்ளாகியதாகவும் கூறப்படுகின்றது.

இலங்கைக்கு ஆதரவு வழங்குவதாக கியூபா தெரிவிப்பு-

Ilankaiku atharavu valanguvathaakaஇலங்கைக்கு சர்வதேச ரீதியாக அழுத்தங்கள் பிரயோகிக்கப்படும் நிலையிலும், இலங்கையுடன் தொடர்ந்தும் செயல்பட தயார் என கியூபா தெரிவித்துள்ளது. இலங்கைக்கான உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு வந்துள்ள கியூபாவின் வெளி விவகார அமைச்சர் பெரோனா ரொட்ரிகஸ் இதனைத் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுடன் அலரிமாளிகையில் நேற்று இடம்பெற்ற சந்திப்பின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இலங்கைக்கும் கியூபாவிற்கும் இடையில் நீண்டகால நட்புறவு இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். ஐக்கிய நாடுகள் சபை போன்ற சர்வதேச மன்றங்களில் இலங்கைக்கு ஆதரவு வழங்குவதற்காகவும் கரீபியன் நாட்டில் இலங்கை மாணவர்களுக்கான உயர்கல்வி புலமை பரிசில் வழங்குவதற்காகவும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச இதன்போது கியூபாவிற்கு நன்றிகளைத் தெரிவித்துள்ளார்.

இலங்கை அரசுடனான பேச்சுவார்த்தைக்கு தயார்-கூட்டமைப்பு-

thamil thesiya koottamaippu indiaஇனப்பிரச்சினை தொடர்பில் இலங்கை அரசாங்கத்துடன் நிபந்தனைகளுடன் கூடிய பேச்சுவார்த்தைக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு தயார் என கூட்டமைப்பின் பாராளுமன்ற குழுத் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். இந்த பேச்சுவார்த்தை சர்வதேசத்திற்கு காட்டும் வகையில் அமையக்கூடாது எனவும் ஒரு ஆக்கபூர்வமான பேச்சுவார்த்தையாக காணப்படவேண்டும் எனவும் இரா.சம்பந்தன் சுட்டிக்காட்டியுள்ளார். இதேவேளை, அரசாங்கத்துடனான இருதரப்பு பேச்சுவார்த்தையானது சர்வதேச கண்காணிப்பாளர்களின் பங்குபற்றுதலுடன் இடம்பெற வேண்டும் எனவும் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் மேலும் வலியுறுத்தியுள்ளார்.

சட்டத்தை செயல்படுத்துவதற்கு அஞ்சத் தேவையில்லை-தேர்தல் ஆணையாளர்-

சட்டத்தை செயல்படுத்துவதற்கு அச்சமடைய வேண்டியதில்லை என தேர்தல்கள் ஆணையாளர் மகிந்த தேசப்பிரிய குறிப்பிட்டுள்ளார். ஊவா மாகாண சபை தேர்தல் தொடர்பில் பதுளை மற்றும் மொனராகலை பிரதேசங்களுக்கு கண்காணிப்பு விஜயம் மேற்கொண்ட தேர்தல்கள் ஆணையாளர், இவ்வாறு கூறியுள்ளார். ஊவா மாகாண சபை தேர்தல்களுடன் தொடர்புபட்ட குற்றச்செயல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுவரும் நிலையில், சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு பொலிஸார் அச்சப்படத் தேவையில்லை. குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளை எடுக்க முடியும் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

மேன்முறையீட்டு நீதிமன்றத் தலைவராக விஜித் மலலகொட நியமனம்-

மேன்முறையீட்டு நீதிமன்றின் தலைவராக மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் விஜித் மலலகொட நியமிக்கப்பட்டுள்ளார். ஐக்கிய இராச்சியத்தின் அபர்டீன் பல்கலைக்கழகத்தில் சட்ட முதுநிலை பட்டம் பெற்ற இவர், முன்னர் இலங்கை விமானப்படையின் நீதிபதி – சட்டத்தரணியாக செயற்பட்டிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.

ஆறு புதிய தூதுவர்கள் நியமனக் கடிதம் கையளிப்பு-

புதிதாக நியமனம் பெற்ற ஆறு தூதுவர்கள் தமது நியமனக் கடிதங்களை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் இன்றுகாலை ஜனாதிபதி செயலகத்தில் வைத்து கையளித்துள்ளனர். அதன்படி எஸ்தோனிய குடியரசின் தூதுவர் விலிஜர் லுபி, கொலம்பியாவின் தூதுவர் மோனிக்கா லன்ஸெட்டா முட்டிஸ், இஸ்ரேல் தூதுவர் டானியல் கார்மன், பல்கேரிய தூதுவர் பெட்கோ, கோலெவ் டோய்கொவ், வியட்நாம் தூதுவர் பன் கியோ தா எ மற்றும் லாவோஸ் தூதுவர் சௌதம் சகொன்னின்ஹொம் ஆகியோர் நியமனக் கடிதங்களை கையளித்துள்ளனர். வியட்நாம் தூதுவரைத் தவிர இலங்கைக்காக நியமிக்கப்பட்டுள்ள ஏனைய தூதுவர்கள் புதுடில்லியில் நிலைகொண்டிருப்பர் என ஜனாதிபதி ஊடகப்பிரிவு குறிப்பிட்டுள்ளது.

இலங்கை அகதிப் படகு ஆஸி நூதனசாலைக்கு கையளிப்பு-

ilankai akathi padakuஇலங்கை அகதிகளை ஏற்றிச்சென்ற படகு ஒன்று அவுஸ்ரேலியவிலுள்ள மேற்கு நூதனச்சாலைக்கு வழங்கப்பட்டுள்ளது. கடந்த வருடம் ஏப்ரல் 9ஆம் திகதி குறித்த படகு 66 இலங்கை அகதிகளை ஏற்றிக்கொண்டு அவுஸ்ரேலியா சென்றிருந்தது. இந்த படகை கைப்பற்றி அவுஸ்ரேலிய அரசாங்கம் தடுத்து வைத்திருந்தது. எனினும் அது மரத்திலான படகு என்பதால் அதனை பாதுகாப்பத்தில் சிக்கல் காணப்பட்டதால் அதனை தற்போது நூதனசாலைக்கு வழங்குவதற்கு அவுஸ்ரேலிய அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை அகதிகள் உணவு தவிர்ப்பு போராட்டம்-

தமிழகம் திருவண்ணாமலை விசேட முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கை அகதிகள் சிலர் சாகும்வரை உணவு தவிர்ப்பு போராட்டத்தை ஆரம்பித்துள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன. சுமார் 24 பேர் இவ்வாறு போராட்டத்தில் ஈடுப்பட்டு வருகின்றனர். தங்களை தங்கள் குடும்பத்தினருடன் சேர்க்குமாறு வலியுறுத்தியே இவர்கள் இந்த போராட்டத்தை மேற்கொண்டு வருவதாக மேலும் தெரிவிக்கப்படுகிறது.