தமிழரசுக் கட்சியின் 15ஆவது தேசிய மகாநாட்டில் புளொட் தலைவர் சித்தார்த்தன் அவர்கள் ஆற்றிய உரை-

unnamedதமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தண்ணர் அவர்களே! தமிழரசுக் கட்சியின் தலைவர் சேனாதியண்ணர் அவர்களே!, எங்களுடைய முதலமைச்சர் விக்னேஸ்வரன் ஐயா அவர்களே! எனது அருமை நண்பர் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ஹக்கீம் அவர்களே! மற்றும் ஏனைய கட்சிகளின் தலைவர்களே!

இங்கு மிகப் பெருந்திரளாக கலந்து கொண்டிருக்கின்ற தமிழரசுக் கட்சியின் பேராளர்களே! ஆதரவாளர்களே! பெரியோர்களே! தாய்மார்களே! அனைவருக்கும் எனது அன்பார்ந்த வணக்கம்!

unnamed1தமிழரசுக் கட்சியின் இந்த 15ஆவது மகாநாட்டிலே ஒரு அதிதியாக கலந்துகொண்டு பேசுவதற்கு ஒரு சந்தர்ப்பம் வழங்கிய அண்ணன் சேனாதிராஜா அவர்களுக்கும், மகாநாட்டுக் குழுவுக்கும் எனது அன்பான நன்றியைத் தெரிவித்துக் கொள்ளுகின்றேன்.

தமிழரசுக் கட்சி மகாநாட்டிலே கலந்துகொள்ள வேண்டுமென்ற என்னுடைய பெரு விருப்பம் இன்று வந்ததல்ல. 1969ஆம் ஆண்டு உடுவிலிலே பதினோராவது மாநில மகாநாடு நடைபெற்றபோது, ம.பொ.சி அவர்கள் அதிதியாகக் கலந்துகொண்டார். அப்போது அம்மகாநாட்டிலே ஒரு பேராளராக கலந்துகொள்ள வேண்டுமென்ற ஓர் அவா என்னுள் எழுந்தது. அதன் நிமித்தம் தமிழரசுக் கட்சியினுடைய காரியாலயம் – அப்போது 2ஆவது குறுக்குத் தெருவிலே இருந்தது – அங்கிருந்த மணியண்ணரிடம் சென்று எனது விருப்பத்தைத் தெரிவித்து இதற்கு ஏதாவது வழி இருக்கிறதா என்று கேட்டேன். அவர் கட்சியின் அங்கத்துவ விண்ணப்பப்படிவத்தைத் தந்து இந்த படிவத்தை நிரப்பித் தா நான் பார்த்துக் கொள்கிறேன் என்றார். 

படிவத்தை நிரப்பி அதற்குரிய சந்தாப் பணத்தையும் கொடுத்து 69ஆம் ஆண்டு தமிழரசுக் கட்சியிலே நான் அங்கத்தவனாக சேர்ந்தேன். ஆனாலும் அந்த மகாநாட்டிலே கலந்துகொள்ளும் வாய்ப்பு கிடைக்கவில்லை ஏனென்றால், அந்த மகாநாட்டு நேரத்திலே எனது தந்தையார் அதன் ஏற்பாட்;டாளராகவிருந்த முத்துலிங்கம் அண்ணர் போன்றவர்களிடம் உங்களுக்கு போக்குவரத்துக்கு வாகனம் ஏதேனும் தேவையென்றால் இவனிடம் சொல்லுங்கள், இவன் வருவான் கூட்டிக்கொண்டு போங்கள் என்று சொல்லிவிட்டார். ஆகவே, அந்த மகாநாட்டினுள் கலந்துகொள்ளக்கூடிய வாய்ப்பு நழுவிவிட்டது. இப்போது இந்த 15ஆவது மகாநாட்டில் கலந்துகொள்ளும் வாய்ப்புக் கிடைத்ததையிட்டு நான் பெருமகிழ்ச்சியடைகின்றேன்.

இந்த மகாநாட்டைப் பொறுத்தமட்டில் இரண்டு மிக முக்கிய சம்பவங்கள் நடைபெற்றிருக்கின்றன.

unnamed2ஒன்று அண்ணன் சேனாதிராஜா அவர்கள் – சேனாதியண்ணன் மிகச் சிறிய பராயத்திலிருந்து தமிழ் மக்களுடைய போராட்ட வரலாற்றிலே, தமிழரசுக் கட்சியின் வரலாற்றிலே தன்னைப் பதித்துக் கொண்டவர் – ஜனநாயக போராட்டத்தில் மாத்திரமல்ல, பலாத்கார அல்லது வன்முறைப் போராட்டத்திலும் நேரடியாக இல்லாவிட்டாலும் – அப்போது வன்முறைப் போராட்டத்திலே தலைமை தாங்கிய எங்களுடைய இயக்கத் தலைவர் உமாமகேஸ்வரன், ஈ.பி.ஆர்.எல்.எவ் தலைவர் பத்மநாபா போன்றவர்களுடன் மாத்திரமல்ல, அவர்களைப் போலவே செயல் துடிப்புமிக்கவரும், எனது நண்பரும், தியாகியுமான சிவகுமாரன் போன்றவர்களுடன்கூட மிக நெருக்கமாக அன்பாக பழகி வந்தவர். அவர்களுடன் பழகியதால் மாத்திரமல்ல, அவருக்கு இருந்த வேறு ஈடுபாடுகள் காரணமாக ஏறத்தாழ நான்கு வருடங்கள் சிறைச்சாலைகளிலே சித்திரவதைக்குட்பட்டு வாடியவர்.

சிறைச்சாலையிலே அவரை அடித்து நொறுக்கி அங்கிருந்த மேலதிகாரியின் அறையிலே கொண்டுவந்து போட்டபோது, அங்கேயிருந்த குண்டூசியால் அங்கிருந்த மேசையிலேயே ஈழம் வாழ்க என்று எழுதி மீண்டும் அடிக்கப்பட்டு வைத்தியசாலைக்கு கொண்டுசென்று போடப்பட்டவர்.

தம்பி பிரபாகரன் – ஆரம்பத்திலே தமிழரசுக் கட்சியினுடைய செயற்பாடுகளிலே அவர் இல்லாதுவிட்டாலும்கூட – இளமையாக இருந்த காலத்திலேயே இன விடுதலைக்காக வன்முறை அரசியலில் ஈடுபடத் துவங்கிவிட்டார். அவருடனும் எங்களுடைய தலைவர் உமாமகேஸ்வரன், பத்மநாபா போன்றவர்கள் தமிழரசுக் கட்சி இளைஞர் பேரவை விடயங்களிலே தொடர்ந்து ஈடுபட்டு வந்தபடியால் அவர்களுடனும் மிக நெருக்கமாக பழகியவர் சேனாதியண்ணன் அவர்கள். அவர், இன்று தலைவராக வந்திருப்பதானது, தமிழ் தேசியக் கூட்டமைப்பை பலப்படுத்துவதற்கும், இன்னும் வலுவாக ஒற்றுமைப்படுத்துவதற்கும் ஏதுவாக இருக்கும் என்பதில் பெருமகிழ்ச்சி.

அடுத்து நடைபெற்றிருக்கின்ற ஒரு மிக முக்கியமான சம்பவம், சம்பந்தன் அண்ணன் அவர்கள் இன்றுவரை ஐம்பதுக்கு ஐம்பதாக தமிழரசுக் கட்சியின் தலைவராகவும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவராகவும் இருந்து வழிநடத்தி வந்தவர், அவர் தமிழரசுக் கட்சியின் தலைமைப் பொறுப்பிலே இருந்து விடுபட்டு தமிழ் தேசியக் கூட்டமைப்பை முழுமையாக தலைமையேற்று வழிநடாத்துகின்ற பொறுப்பை ஏற்றிருப்பது மிகமிக முக்கியமான சிறந்த ஒரு விடயமாகவே நான் கருதுகின்றேன்.

அது மாத்திரமல்ல, சம்பந்தண்ணரைப் பற்றி நான் ஒரேயொரு விடயத்தை கூறி, அவருடைய சிறப்பை ஏனையோருக்கும் வெளிப்படுத்த விரும்புகிறேன். அண்மையிலே தமிழ் தேசியக் கூட்டமைப்பு இந்த உலகத்திலேயே மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவுக்கு விஜயம் செய்திருந்தபோது அந்நாட்டின் பிரதமர் மோடி அவர்கள் அந்த பேச்சுவார்த்தையிலே குறிப்பிட்ட ஒரு விடயத்தை உங்களுக்குக் கூற விரும்புகிறேன். இந்த பிராந்தியத்திலே – இந்த பிராந்தியம் என்று அவர் கூறியது, தெற்காசியப் பிராந்தியத்தை – மூத்த, சிறந்த, அறிவுபெற்ற ஒரு தலைவராக நீங்கள் திகழ்கின்றீர்கள் என விளித்துக் கூறினார். இது வசிட்டர் வாயால் பிரம்மரிஷி பட்டம் போன்றது. இதைவிட நாங்கள் எதுவுமே சம்பந்தன் அண்ணரைப் பற்றி கூறவேண்டிய அவசியமில்லை.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஒற்றுமை இந்த இருவரின் கைகளிலேயே இருக்கின்றது. ஒற்றுமைக்காக அண்ணன் சேனாதிராஜா அவர்கள் செய்த ஒரு தியாகத்தை நான் இங்கு கூறியே தீரவேண்டும்.

1977ஆம் ஆண்டு தமிழரசுக் கட்சியும், தமிழ் காங்கிரசும் இணைந்து தமிழர் விடுதலைக் கூட்டணியாக இயங்கிய காலத்திலே, 77ஆம் ஆண்டு தந்தை செல்வா அமரராகிய சிறிது காலத்தில் பாராளுமன்றப் பொதுத் தேர்தல் வந்தது. தந்தை செல்வாவின் காங்கேசன்துறை இடம் வெற்றிடமாக இருந்தது. அந்த வெற்றிடத்திற்கு யாரை தேர்தலிலே நிறுத்துவது என்ற கேள்வி எழுந்தது. அந்த கேள்விக்கு அண்ணன் அமிர்தலிங்கம் உட்பட இளைஞர்கள் ஏறக்குறைய அனைவரும், மிகப்பெரும்பான்மையானவர்கள் அண்ணன் சேனாதிராஜாவினுடைய பெயரையே குறிப்பிட்டார்கள். தேர்ந்தெடுத்தார்கள். ஆனால், வழக்கமாக வரக்கூடிய பிரச்சினைகள் போல தமிழர் விடுதலைக் கூட்டணியிலே தமிழரசுக் கட்சிக்கும், தமிழ் காங்கிரசுக்குமிடையே தேர்தல் தொகுதிப் பங்கீட்டிலே ஒரு முரண்பாடு வந்தது. அந்த முரண்பாட்டையும், 77ஆம் ஆண்டே பாராளுமன்றத்துக்குச் செல்லக்கூடிய வாய்ப்பிருந்த அண்ணன் சேனாதிராஜா அவர்களே முன்நின்று தீர்த்து வைத்தார். அண்ணன் அமிர்தலிங்கத்திடம், ‘அமுதண்ணை, நீங்கள் காங்கேசன்துறைக்கு வாருங்கள். வட்டுக்கோட்டையை காங்கிரஸ் திருநாவுக்கரசண்ணருக்கு கொடுத்துவிடுங்கள் இந்தப் பிரச்சினை தீர்ந்து விடும்’ என்றார். தனக்கு கிடைக்க இருந்த பாராளுமன்றப் பதவியை அன்று முழு மனதுடன் துறந்தவர். எதற்காக? ஒற்றுமைக்காக, தமிழர்களுடைய ஒற்றுமை உடைந்துவிடக்கூடாது என்பதற்காக. 

அதேபோல, தமிழரசுக் கட்சியின் 61ஆம் ஆண்டு சத்தியாக்கிரகத்திலேயே இளைய வழக்கறிஞராக திருகோணமலையை தலைமைவகித்து நடாத்திய சம்பந்தண்ணர் அவர்களை, தந்தை செல்வநாயகம் பலமுறைகள், பொதுத் தேர்தல் வருகின்ற ஒவ்வொரு முறையும் அவரை நீங்கள் தேர்தலிலே நின்று பாராளுமன்ற உறுப்பினராக வரவேண்டுமென வற்புறுத்திக் கொண்டே இருந்தார். இருந்தாலும், பாராளுமன்றத்திற்கு வெளியிலே இருந்து எனது சேவையை செய்வேனென்று கூறி தட்டிக்கழித்துவந்த சம்பந்தண்ணன் அண்ணர் அவர்கள், 77ஆம் ஆண்டு தமிழ் மக்களுடைய ஒற்றுமையை கிழக்கிலும் பலப்படுத்த வேண்டுமென்ற நோக்கத்திற்காக அன்று தமிழர் விடுதலைக் கூட்டணியால் விடுக்கப்பட்ட கோரிக்கையை ஏற்று திருகோணமலையிலே போட்டியிட்டு மிகப்பெரும்பான்மையால் வெற்றியடைந்தார்.

61ஆம் ஆண்டு சத்தியாக்கிரகத்தைப் பற்றிக் கூறினேன். தனது கணவரால் கொண்டுவரப்பட்ட சிங்களமொழிச் சட்டத்தை அமுல்நடத்துவேன் என்று கங்கணங்கட்டி திருமதி சிறீமாவோ பண்டாரநாயக்க அவர்கள், வடகிழக்கிற்கு சிங்கள அதிகாரிகளை அனுப்பினார். அதைத் தடுக்க வேண்டுமென்று அதற்கு முன்பு நடந்த தமிழரசுக் கட்சி மகாநாட்டிலேயே (நான் நினைக்கிறேன் திருகோணமலை என) தீர்மானம் எடுக்கப்பட்டது, அதன்படி வடக்குக் கிழக்கிலே இருந்த ஒவ்வொரு அரச அலுவலகங்களும் இரண்டரை மாதங்களுக்கு முடக்கப்பட்டது. ‘ரத்தமின்றி யுத்தமொன்று வருகிறது, மக்களே எதிர்கொள்வோம் வாருங்கள்’ என்று தந்தை செல்வாவின் அறைகூவலை ஏற்று, கட்சி பேதமற்று இலட்சோபலட்சம் மக்கள் இருபத்தினாலு மணித்தியாலங்கள் தொடர்ச்சியாக கச்சேரியிலே சத்தியாக்கிரகம் செய்தார்கள். இரவுபகலாக ஊர்வலங்கள் செல்லும், மருதனார்மடத்திலே இருந்து கச்சேரிவரையும் தீவட்டிப் பந்தமேற்றி ஊர்வலம் சென்றது. அதற்கு ஒழுங்கு செய்தவர்களில் சேனாதியண்ணர், சேர்மனாக இருந்த முத்துலிங்கம் அண்ணர் போன்றவர்கள் முக்கிய காரணமாக இருந்தார்கள். அந்த ஊர்வலத்திலே மருதனார்மடத்திலிருந்து கச்சேரிவரையும் சிறுவனாக நடந்த அனுபவம் எனக்கு இருக்கின்றது. இப்படியாக தமிழரசுக் கட்சியின் போராட்ட வரலாற்றினாலேயே தமிழ் தேசியம் என்பது உருவாகியது.

72ஆம் ஆண்டு தந்தை செல்வநாயகம் அவர்கள், அன்று கொண்டுவரப்பட்ட அரசியலமைப்பை எதிர்த்து தனது பதவியை இராஜினாமா செய்தார். இராஜினாமா செய்தபோது அவரது பாராளுமன்ற உரையில், ‘இன்று நீங்கள் எங்களுடன் இந்தப் பிரச்சினையைத் தீர்க்கத் தவறினால், வருங்காலத்திலே தீவிரவாத அமைப்புக்களுடனும், தீவிரவாதத் தலைவர்களுடனும்தான் பேசவேண்டிய நிலைமை ஏற்படும்’ என அன்றே அவர் சிறீலங்கா அரசாங்கத்தையும் சிங்களத் தலைமைகளையும் எச்சரித்திருந்தார். அதேநேரத்தில் தமிழ் இளைஞர்களுக்கும் சாத்வீகப் போராட்டம் தோற்றுக்கொண்டு வருகிறது என்ற செய்தியை மறைமுகமாகக் கொடுத்தார்.

அதேபோல 74ஆம் ஆண்டு அண்ணன் அமர்தலிங்கம் தமிழரசுக் கட்சியின் 25ஆவது ஆண்டு மலரிலே ‘தியாக வரலாறு’ என்ற கட்டுரையை எழுதியிருந்தார். அதனை எத்தனைபேர் படித்தீர்களோ தெரியவில்லை. அதில் கடைசியிலே ‘தியாகி சிவகுமாரன் போன்ற விடிவெள்ளிகள் தோன்றிவிட்டார்கள். நாம் தொடர்ந்தும் செல்வோம், வெல்வோம்….’ என்று முடிக்கின்றார். அவரும் மறைமுகமாக சாத்வீகப் போராட்டம் சரிவராது என்பதையே குறித்து நின்றார். இதையெல்லாம் நான் ஏன் கூறுகிறேன் என்றால், ஆயுதப்போராட்டம் வெறுமனே உணர்வுகளால் உந்தப்பட்ட இளைஞர்களால் ஆரம்பிக்கப்பட்ட போராட்டம் அல்ல. ஒட்டுமொத்தமான தமிழ் மக்களுடைய உணர்வுகளின் பிரதிபலிப்பே ஆயுதப் போராட்டமாக பரிணமித்தது. அன்று இளைஞர்களாக இருந்தவர்கள் அதற்குத் தலைமையேற்றார்கள். ஆயுதப் போராட்டத்தில் நடந்த சரிகள் பிழைகளைப் பற்றி நான் இங்கு பேச வரவில்லை. சரிகளும் நடந்திருக்கின்றது. பிழைகளும் நடந்திருக்கின்றது. இவைகளையெலலாம் மறந்து இன்று தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு சர்வதேசமே ஏற்றுக்கொள்ளுகின்ற, மகிந்த அரசு ஏற்றுக்கொள்ளுகின்ற, தமிழ் மக்கள் ஒட்டுமொத்தமாக ஏற்றுக்கொள்ளுகின்ற ஒரு மிகப்பெரிய தலைவர் இருக்கின்றார். அவர் மிக நிதானமாக, எதிர்காலத்தைப் பற்றி ஆழமாக சிந்தித்து நடக்கின்றார் என்று பலர் கூறுகிறார்கள். அவருடைய நிதானம் இன்று தேவையாக இருக்கின்றது. இன்று மீண்டும் ஒருமுறை வன்முறைப் போராட்டமோ, அல்லது தேவையில்லா அசம்பாவிதங்களோ நடந்துவிடக்கூடாது என்பதிலே அவர் கவனமாக இருக்கின்றார். மிகப்பெரிய அழிவை எதிர்கொண்ட ஒரு இனம், அந்த அழிவிலேயிருந்து இன்னமும் நாங்கள் மீளவில்லை. இலட்சக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். மக்கள் மிகப்பெரும்பான்மையோர் தங்கள் உயிரைத்தவிர அனைத்தையுமே இழந்து வாழுகிறார்கள். அந்த மக்களை வாழவைக்க வேண்டும். மீண்டும் ஒரு அழிவுக்கு முகம்கொடுக்க முடியாது. அதேநேரத்தில் எங்களுடைய உரிமைகளை நோக்கிய பயணத்தில் ஒரு முக்கிய முன்னேற்றம் காணவேண்டும். அதற்கு சாத்வீக, ஜனநாயக முறையிலே சர்வதேச அனுசரணையுடன் எங்களுடைய உரிமைகளை வென்றெடுப்பதற்கு அவர் தயாராக இருக்கின்றார். அவருக்கு உறுதுணையாக இருப்பதற்கு மற்றைய கட்சிகள் நாங்கள் அனைவருமே தயாராக இருக்கின்றோம்.

ஒரு விடயத்தைக் கூறி முடிக்கின்றேன். எங்களுடைய ஒற்றுமை எவ்வளவு முக்கியம் என்பதை 2010ஆம் ஆண்டு மட்டக்களப்பு தேர்தலைப் பாத்தீர்களென்றால் உங்களுக்குத் தெரியும். அப்போது மூன்று கட்சிகள்தான் கூட்டமைப்பிலே இருந்தது. அந்த மூன்று கட்சிகளும் கூட்டாக போட்டியிட்டபோது வெறும் 4ஆயிரம் வாக்குளால்தான் தமிழ் தேசியக் கூட்டமைப்பு அரச கூட்டணியை மட்டக்களப்பில் வென்றது. 2ஆயிரம் வாக்குகள் எதிர்த்தரப்பிற்கு போயிருந்தால் அரச கூட்டணிக்கு மூன்று பாராளுமன்ற உறுப்பினர்களும் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு ஒரு பாராளுமன்ற உறுப்பினருமே கிடைத்திருக்கும். இதை நாங்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும். அதன்பிறகு 2012ஆம் ஆண்டு நடைபெற்ற மாகாணசபைத் தேர்தலிலே மட்டக்களப்பு மாவட்டத்திலே 40ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் ஐந்து கட்சிகள் இணைந்த தமிழ் தேசியக் கூட்டமைப்பு வெற்றிபெற்றது. நாங்கள் சேர்ந்ததால்தான் இது நடந்தது என்று நான் கூறவரவில்லை. தமிழ் மக்கள் தமிழ் கட்சிகள் ஒற்றுமைப்பட்டுவிட்டதைப் பார்க்கின்றார்கள். ஒற்றுமையையே விரும்புகிறார்கள். அந்த ஒற்றுமையையே ஆதரிக்கிறார்கள். அதற்காகவே வாக்களித்தார்கள் இதனை நாங்கள் மனதிலே கொள்ள வேண்டும்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஒற்றுமை இங்கே வலியுறுத்திக் கூறப்பட்டது. சுரேஸினால் கூறப்பட்டது, செல்வத்தால் கூறப்பட்டது, சேனாதியண்ணர் கூறினார், நேற்று சம்பந்தண்ணர் கூறினார், சர்வதேசமும் கூறியிருக்கின்றது நீங்கள் ஒற்றுமையாக இருங்கள் என்று. தமிழ் கட்சிகள் மாத்திரமல்ல முஸ்லிம் மலையகக் கட்சிகள் அனைத்துமே ஒரு ஒற்றுமைக்கு வாருங்கள் என்று கூறுகிறார்கள். அந்த ஒற்றுமையை வலுப்படுத்துவதன்மூலம் நிச்சயமாக எங்களுடைய இலக்கை அடைவோம். மக்களும் அதற்கு தயாராக இருக்கிறார்கள் என்று கூறி விடைபெறுகின்றேன். நன்றி, வணக்கம். (07.09.2014)