வட மாகாண சபைக்கு புதிய செயலாளர் நியமனம்-

வடக்கு மாகாண சபையின் புதிய செயலாளராக சிவபாதசுந்தரம் நியமிக்கப்பட்டுள்ளார். வடக்கு மாகாண சபையின் விசேட அமர்வு யாழ். கைதடியில் அமைந்துள்ள மாகாண சபைக் கட்டடத்தில் இன்றுகாலை 9.30 மணியளவில் ஆரம்பமாகி நடைபெற்றது. இன்றைய அமர்வு புதிய செயலாளருடனேயே நடைபெறுவதாக அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் அறிவித்திருந்தார். இதன்படி இன்றிலிருந்து செயலாளராக சிவபாதசுந்தரம் தனது கடமையினை பெறுப்பேற்றுக் கொண்டுள்ளார். இதற்கு முன்னர் பேரவைச் செயலாளராக கிருஸ்ணமூர்த்தி கடமையாற்றி வந்தார். எனினும் அவரின் ஒப்பந்த காலம் நிறைவடைந்திருக்கும் நிலையில் அவருடைய இடத்திற்கு சிவபாதசுந்தரம் நியமிக்கப்பட்டுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

கிளிநொச்சி நகரில் எட்டு கடைகளில் திருட்டு-

கிளிநொச்சி நகரில் எட்டு கடைகளின் பூட்டுக்கள் உடைப்பு ஆடைகளும் திருடப்பட்டுள்ளன கிளிநொச்சி நகரிலுள்ள 8கடைகளின் பூட்டுக்கள் அடையாளம் தெரியாதவர்களால் உடைக்கப்பட்டமை தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். கிளிநொச்சி பொதுச் சந்தையிலுள்ள எட்டு கடைகளின் பூட்டுகள் நேற்றிரவு உடைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. இதன்போது ஒரு கடையிலிருந்த ஆடைகள் சிலவும் திருடப்பட்டுள்ளன. இச்சம்பவம் தொடர்பில் சந்தேகநபர்கள் எவரும் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. இது தொடர்பில் கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில், வர்த்தகநிலைய உரிமையாளர்கள் முறைப்பாடு செய்துள்ளனர் இதற்கமைய பொதுச் சந்தையிலிருந்த இரு காவலாளிகளிடம் விசாரணை முன்னெடுக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

அரச சார்பற்ற நிறுவனங்கள் பாதுகாப்பு செயலர் இடையே சந்திப்பு-

பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவிற்கும் இலங்கையில் செயற்படும் அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகளுக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. அரச சார்பற்ற நிறுவனங்கள் வரம்புமீறிச் செயற்படக்கூடாது என அண்மையில் பாதுகாப்பு அமைச்சு அறிக்கை ஒன்றின்மூலம் அறிவித்திருந்து. இந்நிலையில் அரசுக்கும் அரச சார்பற்ற நிறுவனங்களுக்கும் இடையில் நல்லுறவை ஏற்படுத்தும் வகையில் இச்சந்திப்பு இடம்பெற்றுள்ளது. இச்சந்திப்பில் அரச சார்பற்ற நிறுவனங்களை அரசாங்கம் கண்காணித்தல், காணாமல் போனவர்கள் தொடர்பிலான பிரச்சினைகள், அரசாங்கத்துடன் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் பேச விரும்பாமைக்கான காரணங்கள் உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பில் ஆராயப்பட்டுள்ளது. பதினொரு அரச சார்பற்ற நிறுவனங்கள் இந்த சந்திப்பில் பங்கேற்றிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

பிரித்தானிய பிரதி உயர்ஸ்தானிகர் கல்முனை மாநகர முதல்வர் சந்திப்பு-

பிரித்தானியாவின் இலங்கைக்கான பிரதி உயர்ஸ்தானிகர் லாரா லேவிஸ் இன்று கல்முனை மாநகர சபைக்கு விஜயம்செய்து மாநகர முதல்வர் சட்டத்தரணி எம்.நிஸாம் காரியப்பரை சந்தித்து கலந்துரையுள்ளார். கல்முனை மாநகர சபையில் அமைந்துள்ள முதல்வர் செயலகத்தில் இன்று மதியம் இச்சந்திப்பு இடம்பெற்றுள்ளது. இதன்போது கல்முனைப் பிராந்தியத்தின் தற்போதைய அரசியல் மற்றும் சமூக, கலாசார விடயங்கள் குறித்து பிரித்தானிய பிரதி உயர்ஸ்தானிகர், கல்முனை மாநகர முதல்வரிடம் கேட்டறிந்து கொண்டார். குறிப்பாக யுத்தம் மற்றும் சுனாமி அனர்த்தங்களின் பின்னர் இப்பிராந்தியத்தின் மீள்கட்டுமானப் பணிகள், மக்களின் வாழ்வாதாரம் போன்றவை தொடர்பிலும் சமாதான சூழலில் சமூகங்கள் இடையிலான நல்லிணக்கம் மற்றும் முரண்பாடுகள் தொடர்பிலும் மாநகர முதல்வர் சட்டத்தரணி எம்.நிஸாம் காரியப்பர், பிரித்தானிய பிரதி உயர்ஸ்தானிகருக்கு விளக்கிக் கூறியுள்ளார்.

மாலைத்தீவு உயர்மட்டக் குழு இலங்கைக்கு விஜயம்-

இலங்கையில் நாளை நடைபெறவுள்ள மாலைத்தீவு – இலங்கை கூட்டு ஆணைக்குழு கூட்டத்தில் மாலைத்தீவின் முக்கிய பிரதிநிதிகள் கலந்து கொள்ளவுள்ளனர். மாலைத்தீவு வெளிவிவகார அமைச்சர் துன்யா மவுமூன், மீன்பிடி மற்றும் விவசாய அமைச்சர் மொஹமட் சினி, கல்வி அமைச்சர் ஆய்சாத் சிஹாம் உள்ளிட்ட அரசாங்கத்தின் சிரேஷ்ட பிரதிநிதிகள் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளனர். இந்த கூட்டு ஆணைக்குழு கூட்டம் தொடர்பில் இலங்கை வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் மற்றும் மாலைத்தீவு வெளிவிவகார அமைச்சர் துன்யா மவுமூன் ஆகியோருக்கு இடையில் கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது. மாலைத்தீவு – இலங்கை கூட்டு ஆணைக்குழு 1994ஆம் ஆண்டு இரு நாடுகளுக்கும் இடையிலான உறவை வலுப்படுத்தும் வகையில் ஏற்படுத்தப்பட்டது. கடந்த ஜூன் மாதம் மாலைத்தீவு சென்ற ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, இலங்கைக்கு மாலைத்தீவு வழங்கி வரும் ஆதரவிற்கு நன்றி தெரிவித்திருந்தார்.

ஐ.நா அமைதி காக்கும் பணியில் இலங்கை விமானப்படை இணைவு-

ஐக்கிய நாடுகளின் அமைதிகாக்கும் பணிகளில் ஈடுபடுவதற்காக மூன்று ஹெலிகொப்டர்களில் விமானப்படை வீரர்களை அனுப்பவுள்ளதாக விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் கொலித குணதிலக்க தெரிவித்துள்ளார். ஐ.நா பாதுகாப்பு பேரவையின் தீர்மானத்திற்கு அமைய, இந்தப் படையணி மூன்று மத்திய ஆபிரிக்க நாடுகள் மற்றும் சூடானின் அமைதிகாக்கும் பணிகளுடன் இணைக்கப்படவுள்ளன. ஐக்கிய நாடுகளின் பணிகளில் இலங்கை விமானப்படை இணைந்து செயற்படவுள்ள முதல் சந்தர்ப்பம் இதுவாகும். மூன்று எம்.ஐ 17ரக ஹெலிகொப்டர்கள், விமானிகள் மற்றும் பொறியியலாளர்கள் உள்ளிட்ட 122பேர் அடங்கிய குழுவொன்று மத்திய ஆபிரிக்க நாடுகளுக்கு அனுப்பப்படவுள்ளது. படையினரை அழைத்துச் செல்லுதல், உணவுப்பொருட்களை கொண்டு செல்லுதல், உள்ளக விமானப் பயணங்கள், பெரசூட் ஊடாக பொருட்களை இறக்குதல் மற்றும் மருத்துவ வசதிகளை வழங்குதல் உள்ளிட்ட நடவடிக்கைகளுக்காக இந்த ஹெலிகொப்டர்கள் ஈடுபடுத்தப்படவுள்ளதாக கூறப்படுகின்றது.

சுப்பிரமணியன் சுவாமிக்கு அழைப்பாணை-

தமிழக முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா தாக்கல் செய்த மனுவில் பிரதிவாதியாக குறிப்பிடப்பட்டுள்ள பாரதிய ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணியன் சுவாமியை ஒக்டோபர் 10ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு தமிழ்நாடு நீதிமன்றம் இன்று அழைப்பாணை விடுத்துள்ளது. தமிழக மீனவர் விவகாரத்தில் நடவடிக்கை எடுக்காமல், கடிதம் மட்டும் எழுதுவதாக தமிழக முதலமைச்சரை விமர்சித்து ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு சுப்பிரமணியன் சுவாமி பேட்டி அளித்திருந்தார். இதனையடுத்து, ஜெயலலிதா, சுப்ரமணியனுக்கு எதிராக அவதூறு வழக்கு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவை விசாரணைக்கு எடுத்துகொண்டபோதே தமிழ்நாடு நீதிமன்றம் மேற்கண்டவாறு உத்தரவிட்டுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

மூத்த பத்திரிகையாளர் மாணிக்கவாசகர் காலமானார்-

மூத்த பத்திரிகையாளர் செல்லத்தம்பி மாணிக்கவாசகர் கொழும்பில் காலமானார். ஊடகத்துறையில் அனைவருடனும் நட்போடு பழகிய மூத்த பத்திரிகையாளர் செல்லத்தம்பி மாணிக்கவாசகர், நேற்றுமாலை கொழும்பில், தனது 75ஆவது வயதில் காலமானார். சுகவினம் காரணமாக கடந்த இரு வாரமாக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் நேற்றுமாலை 6 மணியளவில் உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் பருத்தித்துறை புலோலியை பிறப்பிடமாகக் கொண்ட மாணிக்கவாசகர், 40 ஆண்டுகளுக்கும் மேலாக கொழும்பில் வாழ்ந்து வந்தார். டைம்ஸ் ஒப் சிலோன் என்ற ஆங்கில நாளேட்டில் செய்தியாளராக பணிபுரிந்தார். பின்னர் சன்டே ஒப்சேவர் வார ஏட்டில் 30 ஆண்டுகள் பணிபுரிந்து, பத்திரிகைத் துறையிலிருந்து ஓய்வுபெற்றார். ஓய்வுபெற்ற பின்னரும் வீரகேசரி, தினக்குரல், சுடர் ஒளி ஆகிய நாளேடுகளிலும் அதன் வார ஏடுகளிலும் ஆக்கங்களை எழுதி வந்தார்.

இந்தியப் பிரதமர் மோடிக்கு தமிழக முதல்வர் மீண்டும் கடிதம்-

இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்கள் 21 பேரையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா ஜெயராம் பிரதமர் நரேந்திர மோடிக்கு அனுப்பியுள்ள கடிதம் ஒன்றில் மூலம் அவர் இந்த கோரிக்கையை விடுத்துள்ளார். பாக்குநீரிணைப் பகுதியில் பாரம்பரியமாக மீன்பிடி தொழிலை மேற்கொண்டு வரும் தமிழக மீனவர்கள் கடும் இன்னல்களை சந்தித்து வருகின்றனர். கடலில் தத்திளிக்கும் மீனவர்களை காப்பாற்றுவதற்காக வரும் மீனவர்களின் படகுகளும் தாக்குதலுக்கு உள்ளாகின்றது. இவ்வாறு கடலில் தத்தளிக்கும் மீனவர்களை கைது செய்து நீதிமன்றக் காவலில் வைப்பது மனிதாபிமானமற்ற அணுகுமுறையாகும். இந்த நிலையில், இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்;டுள்ள தமிழக மீனவர்களையும், அவர்களது படகுகளையும் விடுவிக்க மத்திய அரசாங்கம் உடன் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் தமிழக முதல்வர் ஜெயலலிதா கோரிக்கை விடுத்துள்ளார்

சீன ஜனாதிபதி இலங்கைக்கு விஜயம்-
சீன ஜனாதிபதி ஸி ஜிங்பிங் இரண்டு நாள் விஜயத்தை மேற்கொண்டு எதிர்வரும் 16ஆம் திகதி, இலங்கைக்கு வரவுள்ளதாக வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அழைப்பின்பேரில் அவர், இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார். இந்த விஜயத்தின் போது இருதரப்பு உடன்படிக்கைகள் பல கைச்சாத்திடப்படவுள்ளன. சீன ஜனாதிபதி ஒருவர் இலங்கைக்கு 28 வருடங்களுக்கு பின்னர் எதிர்வரும் 16ஆம் திகதி அன்று விஜயம் செய்யவிருக்கின்றமை இங்கு குறிப்பிடக்கூடிய ஒன்றாகும்.

பயங்காரவாதத்தை ஒழிக்க அமெரிக்காவிடம் ஒத்துழைப்பு கோரல்-

பயங்கரவாதத்தை முழுமையாக ஒழிக்க இலங்கைக்கு ஆதரவளிக்குமாறு சிங்கள ராவய அமைப்பு அமெரிக்காவிடம் கோரிக்கை விடுத்துள்ளது. கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகத்திற்கு இன்றுகாலை சென்ற சிங்கள ராவய அமைப்பு இது தொடர்பான மனுவொன்றை கையளித்துள்ளது. பின்னர் அந்த அமைப்பின் தலைவர் அக்பீமன தயாரத்ன ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் இலங்கையில் பயங்கரவாதம் ஒழிக்கப்பட்டுள்ளது. எனினும் அதனை மீண்டும் உயிர்ப்பிக்க சில சக்திகள் முயன்று வருகின்றன. இந்நிலையில், அமெரிக்கா பயங்காரவாதத்தை முற்றாக ஒழிக்க ஆதரவு வழங்க வேண்டும் என கோரிக்கை கூறியுள்ளார்.

ஊவா மாகாணசபை தேர்தலை குறித்த திகதியில் நடத்துவதில் சிக்கல்-

எதிர்வரும் 20ஆம் திகதி ஊவா மாகாணசபைத் தேர்தல் நடைபெறுவது சந்தேகத்திற்கிடமாகியுள்ளது. மொனராகலை மாவட்டத்தில் நிலவிவரும் அமைதியற்ற அசாதாரண சூழ்நிலையின் காரணமாக இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மொனராகலை மாவட்டத்தில் அமைதியான நிலை திரும்பாத வரைக்கும் ஊவா மாகாண சபைத் தேர்தலை எதிர்வரும் 20ம் திகதி நடத்துவதா என்று இறுதி முடிவு எடுக்கப்படாது என தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.