13ஆவது திருத்த சட்டம் குறித்து கூட்டமைப்புடன் பேசத் தயார்: ஜனாதிபதி-

imagesCAEVMZZHஅரசியலமைப்பின் 13ஆவது திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பாக, தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் பகிரங்க பேச்சுவார்த்தைக்கு தான் தயாhக இருப்பதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இந்தியாவிலிருந்து வெளிவருகின்ற தி இந்து பத்திரைகைக்கு வழங்கிய செவ்வியிலேயே, ஜனாதிபதி மேற்கண்டவாறு கூறியுள்ளார். தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்கள், இந்திய பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியது தொடர்பில் தான் அதிருப்தி அடைந்திருப்பதாக வெளியான செய்திகளில் உண்மையில்லை என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார். இம்மாத இறுதியில் ஆரம்பிக்கப்படவுள்ள ஐ.நா பொதுச்சபைக் கூட்டத்தின்போது இந்திய பிரதமரைச் சந்தித்து பேசவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். இதேவேளை, எதிர்வரும் 2015ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்படுவதற்கான சாத்தியமிருப்பதாக வெளியாகும் செய்திகள் மறுப்பதற்கில்லை என்றும் ஜனாதிபதி இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்திய மீனவர்கள் இலங்கை கடல் வளத்தை நாசப்படுத்துகின்றனர்-ஜனாதிபதி-

ilankai india meenavar pechchuஇந்திய மீனவர்கள் இலங்கை கடல் வளத்தை நாசப்படுத்துவதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இந்திய மீனவர்கள் சர்வதேச அளவில் தடைசெய்யப்பட்டிருக்கும் படகுகளை பயன்படுத்துவதாகவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார். இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்படும் மீனவர்கள் உடனே விடுவிக்கப்படுவதாகவும், அவர்கள் இலங்கை கடல் பகுதிக்கு மீண்டும் வராமலிருக்கவே, படகுகளை விடுவிடுப்பதில்லை என்றும் ஜனாதிபதி கூறியுள்ளார். 2009 போருக்கு பின் தமிழர்கள் வாழும் பகுதியிலிருந்து 90 சதவிகித இராணுவத்தினர் வெளியேறிவிட்டனர்; மீதமுள்ளவர்கள், மக்களின் பாதுகாப்பிற்காக அங்கு உள்ளனர். இராணுவத்தினர் இலங்கையில்தான் இருக்க முடியும். அவர்களை இந்தியாவில் வைக்க முடியாது. இலங்கையில் தற்போது அமைதி நிலவி வருகிறது. வடக்கு பகுதியில் இருப்பவர்கள் சுதந்திரமாக தெற்கு பகுதிக்கு சென்று வருவதற்கு முடிகின்றது தமிழ் இளைஞர்கள் மத்தியில் இலங்கை அரசாங்கத்தின் மீதான கண்ணோட்டம் மாறி வருகின்றது. கற்றுத்தந்த பாடங்கள், நல்லிணக்க ஆணைக்குழு அளித்த 35 பரிந்துரைகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. மற்றயவைகளை நிறைவேற்ற கால அவகாசம் வேண்டும் என ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச மேலும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் செய்திகளை வாசிக்க……

சாவகச்சேரி வாகன விபத்தில் இருவர் படுகாயம்-

யாழ். சாவகச்சேரி ஜூனியன் பேக்கரி பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் படுகாயமடைந்துள்ளனர். இச் சம்பவம் நேற்றிரவு 7 மணியளவில் இடம்பெற்றுள்ளது. மோட்டார் சைக்கிளும், ஊனமுற்றவர் பயன்படுத்தும் துவிச்சக்கர வண்டியும் மோதியதாலேயே இந்த விபத்து நேர்ந்துள்ளது. சம்பவத்தில், உசனைச் சேர்ந்த கந்தையா செல்வரத்தினம் (66), நுணாவில் மேற்கு சாவகச்சேரியைச் சேர்ந்த செல்லன் யோகராசா (70) ஆகிய இருவருமே படுகாயடைந்துள்ளார்கள். காயமடைந்த இருவரும் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர். சாவகச்சேரிப் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

55 இந்திய மீனவர்கள் மன்னார், யாழில் கைது-

தலைமன்னார் மற்றும் பருத்தித்துறை ஆகிய கடற்பரப்புகளில் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள் 55 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தலைமன்னார் பகுதியில் 30 இந்திய மீனவர்களும் பருத்தித்துறையில் 25 இந்திய மீனவர்களும் கைது செய்யப்பட்டதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர். இது குறித்து இந்திய ஊடகமொன்றில் வெளியான செய்தி வருமாறு, இராமேஸ்வரத்தைச் சேர்ந்த 30 மீனர்கள் 6 படகுகளில் நேற்று மீன்பிடிக்கச் சென்றுள்ளனர். இவர்களை இன்று அதிகாலை கைதுசெய்த இலங்கை கடற்படை தலைமன்னாருக்கு அழைத்துச் சென்றுள்ளனர். இதேபோன்று பூம்புகாரைச் சேர்ந்த 23 மீனவர்களையும் இலங்கை கடற்படையினர் கைதுசெய்து யாழ்பாணம் சிறைக்கு கொண்டு சென்றுள்ளனர். இப்படி ஒரே நாளில் தமிழகத்தைச் சேர்ந்த 53 பேர் கைது செய்யப்பட்டிருப்பது மீனவர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி அமெரிக்காவிற்கு விஜயம்-

ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ இம்மாதம் 21ஆம் திகதி அமெரிக்காவுக்கான விஜயத்தை மேற்கொள்ளவிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. நியூயோர்க்கில் இந்த மாதம் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகளின் பொதுச்சபைக் கூட்டத்தில் கலந்துகொள்ளும் பொருட்டு அவர் இந்த விஜயத்தை மேற்கொள்ளவுள்ளார். இந்த அமர்வின் போது ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ விசேட உரை ஒன்றையும் நிகழ்த்தவுள்ளார். அதேநேரம் இந்த நிகழ்வுக்கு புறம்பாக, ஜனாதிபதி மகிந்தராஜபக்ஷவுக்கும், இந்திய பிரதமர் நரேந்திரமோடிக்கும் இடையிலான சந்திப்பு ஒன்றும் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இரண்டு நாட்டு தலைவர்களும் நிகழ்ச்சி நிரல்களில் இந்த சந்திப்புக்கான நேரம் ஒதுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.