அரசியலமைப்பு சட்டத்தின் பிரகாரம் மாத்திரமே ஒரு ஆளுநரை நீக்க முடியும்-
மக்கள் நலன் சார்ந்த விடயத்திற்கு என்றைக்கும் தடையாக இருக்க மாட்டேன் என வடமாகாண ஆளுநர் ஜீ,ஏ சந்திரசிறி தெரிவித்துள்ளார். வடமாகாண ஆளுநரின் அலுவலகத்தில் இன்றுகாலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இதனைக் கூறியுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், மாகாண சபையுடன் நெருங்கி செயற்பட தயாராகவே இருக்கின்றேன். மாகாணசபை சட்ட திட்டங்களுக்கு அமைவாக மாகாணசபை செயற்பட்டால் ஒத்துழைக்க தயாராக இருக்கின்றேன். அரசியலமைப்பு சட்டத்தின் பிரகாரம் ஒரு ஆளுனரை நீக்குவதாயின் ஆளுனர் அரசியலமைப்புக்கு எதிராக செயற்பட்டு இருந்தால், அரச நிதியை கையாண்டு இருந்தால், லஞ்சம் ஊழல் மோசடி செய்திருந்தால் தான் பின்பற்ற வேண்டிய ஒழுக்கத்தை கைவிட்டு இருந்தால் ஆளுநரை நீக்க முடியும். இந்த செயற்பாடுகள் மாகாண சபையினால் நிரூபிக்கப்பட்டு மாகாணசபை ஜனாதிபதிக்கு அறிவித்தால் ஜனாதிபதியாhல் ஆளுநர் நீக்கப்படுவார். இந்நடைமுறை தவிர்ந்து வேறு எவ்விதத்திலும் மாகாண சபையால் ஆளுநரை நீக்கமுடியாது அதற்குரிய தகுதியோ சட்டமோ இல்லை. வடமாகாண பிரதம செயலாளர் முதலமைச்சருக்கு கீழ் பணியாற்றுபவரல்லர். ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டவர். மாகாண நிதிக்கு பொறுப்பானவர் என்ற வகையில் முதலமைச்சருடன் இணைந்து செயற்படுவார். சட்டரீதியான முதலமைச்சரின் பணிப்பினை அவரினால் புறந்தள்ள முடியாது. தற்போதைய வடமாகாண பிரதம செயலர் மிக திறமையாக சட்டத்திற்கு அமைவாக செயற்படுபவர் என்றார்.
பாகிஸ்தானுக்காக வேவு பார்த்தவருக்கு விளக்கமறியல்-
பாகிஸ்தானுக்காக இந்தியாவில் வேவு பார்த்ததாக தெரிவிக்கப்பட்டு கைதுசெய்யப்பட்ட அருண் செல்வராஜ் 15 நாட்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். இந்திய தேசிய புலனாய்வு பிரிவினரால் கைதுசெய்யப்பட்ட அவர் நேற்று பூந்தமல்லி நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட போது அவரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டது. அவர் தற்போது தேசிய புலனாய்வுப் பிரிவினரால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். தமிழகத்தின் துறைமுகங்கள், வானூர்தி நிலையம் உள்ளிட்ட பல முக்கிய பிரதேசங்களின் வரைபடங்களை அவர் பாகிஸ்தானுக்கு தயாரித்து வழங்கியிருப்பதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது. அதேவேளை அருண் செல்வராஜா, புலிகளுடனும் தொடர்பு கொண்டிருந்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. அவர் இலங்கையில் புலிகளின் உறுப்பினர்களுக்கு சட்ட ஆலோசனைகளை வழங்கியமைக்காக தேடப்பட்டு வருபவர் என்று த ரைம்ஸ் ஒப் இந்தியா தெரிவித்துள்ளது. இவரது வீட்டில் பொலிஸார் நடத்திய சோதனையில் வங்கி கணக்கு புத்தகங்கள் கிடைத்துள்ளன. இவரது வங்கி கணக்கில் இந்திய ரூ.2 கோடி வரை பணம் இலங்கையிலிருந்து இணையம் மூலம் பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளது. அந்த பணம் இவருக்கு உளவு பார்த்ததற்கான கூலியாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது. அண்மையில் கைதுசெய்யப்பட்ட ஐ.எஸ்.ஐ. உளவாளி சாகிர் உசேன், கடந்த 2012-ம் ஆண்டு கைதுசெய்யப்பட்ட தமீம் அன்சாரி ஆகியோருடன் அருண் செல்வராஜூக்கு இடையே நிறைய தகவல் பரிமாற்றங்கள் நடந்திருப்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
மேலும் செய்திகளை வாசிக்க……....
கதிரவெளி பாழடைந்த கிணற்றிலிருந்து துப்பாக்கி, ரவைகள் மீட்பு-
மட்டக்களப்பு கதிரவெளி பிரதேசத்திலுள்ள பாழடைந்த கிணற்றிலிருந்து, துப்பாக்கி ஒன்றினையும் அதற்கு பயன்படுத்தும் துப்பாக்கி ரவைகளையும் இராணுவத்தினர், நேற்றுப் பிற்பகல் மீட்டுள்ளதாக வாகரை பொலிஸார் தெரிவித்துள்ளனர். இன்றுமாலை வீட்டு உரிமையாளர்கள் தமது வளவிற்குள் சென்று கைவிடப்பட்ட நிலையில் காணப்பட்ட கிணற்றினை துப்பரவு செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தபோது அதனுள்ளிருந்து மர்மப்பொருள் ஒன்று தென்படுவதை கண்டு அருகிலிருந்த படையினருக்கு தகவல் வழங்கியுள்ளனர். இதனையடுத்து இராணுவத்தினர் அங்கு சென்று கிணற்றினுள்ளிருந்து பொருட்களை மீட்டுள்ளனர். இதன்போது ரி.56-1 ரக துப்பாக்கி-01, ரவைக்கூடு-2, மற்றும் 30 ரவைகள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நெடுந்தீவில் கடத்தப்பட்ட குதிரைகள் திருமலை கடற்படை முகாமில்-
நெடுந்தீவில் இருந்து கடத்திச் செல்லப்பட்டதாக பொதுமக்களால் முறைப்பாடு செய்யப்பட்ட நான்கு குதிரைகளும் கடற்படையினரால் திருகோணமலைக் கடற்படை முகாமுக்கு எடுத்துச் செல்லப்பட்டிருப்பதாக வடக்கு மாகாண விவசாய, கமநல சேவைகள், கால்நடை அபிவிருத்தி, நீர்ப்பாசனம் மற்றும் சுற்றாடல் அமைச்சர் பொ.ஐங்கரநேசன் தெரிவித்துள்ளார். நெடுந்தீவில் இருந்து படையினரால் குதிரைகள் கடத்தப்படுவதாக அண்மையில் ஊடகங்களில் செய்திகள் வெளியாகியிருந்த நிலையில், யாழ் மாவட்ட இராணுவத்தளபதி உதய பெரேரா தரைப்படையினர் இத்தகைய நடவடிக்கைகள் எதிலும் ஈடுபடவில்லையென ஊடகங்களுக்குத் தெரிவித்திருந்தார். இந்நிலையில், இதன் பின்னணி பற்றித் தெரிந்து கொள்வதற்காக அமைச்சர் பொ.ஐங்கரநேசன் மாகாணசபை உறுப்பினர் விந்தன் கனகரத்தினத்துடன் நேற்று நெடுந்தீவு சென்றிருந்தார். நெடுந்தீவில் மேய்ச்சல் நிலங்களில் குதிரைகளைப் பார்வையிட்ட அமைச்சர் பொ.ஐங்கரநேசன் பிரதேசசபை அதிகாரிகள், கடற்படை முகாமைச் சேர்ந்த லெப்டினன்ட் கொமாண்டர் கருணாரட்ன மற்றும் பொதுமக்களைச் சந்தித்துக் கலந்துரையாடியிருந்தார். அதன் பின்னர் ஊடகங்களுக்கு அவர் கருத்துத் தெரிவித்தபோதே கடத்தப்பட்டதாகக் குறிப்பிடப்பட்ட நான்கு குதிரைகளும் வனஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களத்தின் அனுமதியுடன் கடற்படையினரால் திருகோணமலைக் கடற்படை முகாமுக்கு எடுத்துச் செல்லப்பட்டிருப்பதாக கூறியுள்ளார்.
முன்னாள் புலி உறுப்பினர் ரி.ஐ.டி யிடம் ஒப்படைப்பு-
கிளிநொச்சி பகுதியில் இடம்பெற்ற குற்ற செயல்களுடன் தொடர்புடையவர் என கைது செய்யப்பட்ட முன்னாள் புலி உறுப்பினர் ஒருவர், பயங்கரவாத குற்றத்தடுப்பு பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக கிளிநொச்சி பொலிஸார் நேற்றையதினம் தெரிவித்துள்ளனர். கடந்த திங்கட்கிழமை கைதுசெய்யப்பட்ட கிளிநொச்சி விநாயகர்புரத்தை சேர்ந்த பீற்றர் விக்கினேஸ்வரன் (வயது 34) என்பவரே இவ்வாறு ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறுகின்றனர். கிளிநொச்சி பகுதியில் இடம்பெற்ற குற்றச் செயல்களுடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தின்பேரில் கைது செய்யப்பட்டு விசாரணைகள் மேற்கொள்ளப்பட்ட பின்னரே அவரை ரி.ஐ.டி யினரிடம் ஒப்படைத்துள்ளதாக பொலிஸார் மேலும் சுட்டிக்காட்டியுள்ளனர்.