புகலிடக கோரிக்கையாளர் பிரச்சினை தொடர்பில் ஐ.நா அமைப்பு கவலை-

pugalida korikkaiyaalar pirachanaiஇலங்கையில் அரசியல் தஞ்சம் கோருகின்றவர்களை நாடுகடத்த வேண்டாம் என ஐக்கிய நாடுகளின் அகதிகள் பேரவை மீண்டும் கோரிக்கை விடுத்துள்ளது. அகதிகள் பேரவையின் இணையத்தளத்தில் இது தொடர்பான அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. இந்த மாதம் 3ம் திகதி முதல் 11ம் திகதி வரையில் 62 பாகிஸ்தானியர்களும், 2 ஆப்கானிஸ்தானியர்களும் இலங்கையில் இருந்து நாடுகடத்தப்பட்டதாக அகதிகள் பேரவை தெரிவித்துள்ளது. இன்னும் 102 பேர் வரையில் இலங்கையிலிருந்து நாடுகடத்தப்படவிருக்கும நிலையில், இந்த செயற்பாடுகளை நிறுத்துமாறு ஐ.நா அகதிகள் பேரவை கோரியுள்ளது. இலங்கை அரசாங்கம், ஜூன் 9ஆம் திகதி இதற்குரிய சிறப்பு நடவடிக்கையை ஆரம்பித்தது. ஓகஸ்ட் 15ஆம் திகதி அது ஸ்தம்பித்திருந்தது. எனினும் செப்டெம்பர் 3ஆம் திகதி மீண்டும் இந்நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது என ஐக்கிய நாடுகளின் அகதிகளுக்கான உயர்ஸ்தானிகராலயம் கவலை வெளியிட்டுள்ளது.

கொழும்பில் மொனோரெயில் சேவை-

கொழும்பு நகரில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த மொனோரெயில் சேவை ஆரம்பிக்கப்படவுள்ளது. உலகின் தனித்துவமான போக்குவரத்து சேவையான மொனோரெய்ல் திட்டத்தை கொழும்பு நகரிலும் நடைமுறைப்படுத்த விருப்பம் கொண்டுள்ளதாக ஹிட்டாச்சி மொனோரெயில் பிரிவு அறிவித்துள்ளது. இலங்கைக்கு வருகைத்தந்த ஜப்பானிய பிரதமருடனான வர்த்தகக்குழு இதனை அறிவித்துள்ளது. மொனோரெய்ல் திட்டம், போக்குவரத்துக்கு மிகவும் காத்திரமான பங்கை அளிக்கும் என்றும் ஹிட்டாச்சி மொனோரெய்ல் பிரிவு தெரிவித்துள்ளது. கொழும்பு நகரத்தை மையப்படுத்தும் இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்த 1.3பில்லியன் டொலர்கள் தேவை. இதற்கான ஆய்வுகளும் முடிவடைந்துள்ளன. ஜப்பானின் ஜெய்க்கா திட்டம் முதல்கட்ட நிதிகளை வழங்கவுள்ளது. இதன்படி ஒருகிலோமீற்றர் மொனோரெய்ல் திட்டத்தை அமைக்க 57 மில்லியன் டொலர்கள் தேவை. இத்திட்டம் மாலபே ஊடாக ரொபட் குணவர்த்தன மாவத்தை, பத்தரமுல்ல, தேசிய வைத்தியசாலை, உலக வர்த்தக மையம், கொழும்பு கோட்டை மற்றும் கொட்டாஞ்சேனை ஆகிய இடங்களை மையப்படுத்தி மொனோரெயில் சேவை ஆரம்பிக்கப்படவுள்ளது.

மேலும் செய்திகளை வாசிக்க……

பொதுநலவாய நாடுகளின் விசேட மாநாடு-

Pothunalavaaya naadukalin (2)ஐக்கிய நாடுகளின் பொதுச்சபைக் கூட்டத்தை ஒட்டியதாக, ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் தலைமையில் பொதுநலவாய நாடுகளின் விசேட அமர்வு ஒன்றும் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சர்வதேச இணையத்தளம் ஒன்று இதனைத் தெரிவித்துள்ளது. நியூயோர்க்கில் இந்த மாதம் 25ம் திகதி இந்த சந்திப்பு நடைபெறவுள்ளதாக கூறப்படுகிறது. இதன்போது அடுத்த ஆண்டுக்கான பொதுநலவாய நாடுகளின் மாநாடு மற்றும் நிகழ்ச்சித் திட்டங்கள் தொடர்பில் பேசப்படவுள்ளதாகவும், இம்மாநாட்டில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொள்வாராக இருந்தால், அவருக்கும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுக்கும் இடையிலான சந்திப்பு ஒன்றும் அதேதினத்தில் நடைபெறும் என்று இந்திய செய்திகள் கூறுகின்றன.

குழந்தை கேஷானியைக் கடத்தியவர் கைது-

குருநாகல் – வெல்லவ பிரதேசத்தில் 4 வயதான கேஷானி பண்டார எனும் சிறுமி கடத்தப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர் கைதுசெய்யப்பட்டுள்ளார். வெல்லவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட டீகம என்ற பகுதியில் வைத்தே இவர் கைதாகியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் கூறியுள்ளது. கடந்த 8ஆம் திகதி வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த கேஷானி இனந்தெரியாத நபர்களால் கடத்திச் செல்லப்பட்டதாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது. இந்நிலையில், நேற்றுமாலை 04.15 அளவில் 119 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு கிடைக்கப்பெற்ற அழைப்பினையடுத்து பொலிஸார் சிறுமியை மீட்டுள்ளனர். சந்தேகநபரின் உறவினரால் தொலைபேசி அழைப்பு ஏற்படுத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

இழுவை படகு மீன்பிடியை இடைநிறுத்த முடியாது-தமிழக மீனவர்கள்-

இழுவை படகு மீன்பிடி முறைமையை உடனடியாக இடைநிறுத்த முடியாது என்று தமிழ் நாட்டின் மீனவர்கள் தெரிவித்துள்ளனர். இலங்கை – இந்திய கடற்பரப்பில் தமிழ் நாட்டு மீனவர்கள் பொட்டம் – ட்ராவலிங் முறையில் மீன்பிடியில் ஈடுபடுவதாக கடல் வளம் பாதிக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. தமிழக மற்றும் இலங்கை மீனவர்களுக்கு இடையில் நடைபெற்றிருந்த பேச்சுவார்த்தைகளின்போது, பொட்டம் ட்ராவலர் படகுகளை பயன்படுத்த வேண்டாம் என்று இலங்கை மீனவர்கள் தமிழக மீனவர்களிடம் கோரிக்கை விடுத்தனர். எனினும் இதனை உடனடியாக இடைநிறுத்த முடியாது என்று, இலங்கையில் கைதாகும் மீனவர்களை விடுவிக்கும் இயக்கத்தின் தலைவர் அருளாநந்தம் தெரிவித்துள்ளார்.

சர்வதேச கண்காணிப்பில் அரசுடன் பேச்சு நடத்தத் தயார்- இரா.சம்பந்தன்-

சர்வதேச கண்காணிப்பில் இலங்கை அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த தயாராக உள்ளோம் என்று தமிழ் தேசிய கூட்டமைப்புத் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். இலங்கை ஜனாதிபதி ‘தி இந்து’வுக்கு அண்மையில் அளித்த பேட்டியில், மாகாண அரசுகளுக்கு அதிக அதிகாரங்கள் வழங்க வகை செய்யும் அரசியல் சாசனத்தின் 13-வது சட்டத் திருத்தம் குறித்தும் அதை அமல்படுத்தும் விதம் குறித்தும் தமிழ் தேசிய கூட்டமைப்புடன் பேச்சுவார்த்தை நடத்த தயாராக உள்ளேன் என்று கூறியிருந்தார். இந்த அழைப்பு குறித்து இரா. சம்பந்தன் தி இந்துவிடம் கூறியதாவது: 13-வது சட்டத் திருத்தம் தொடர்பான ஜனாதிபதியின் கருத்தை, பேச்சுவார்த்தைக்கான அழைப்பை வரவேற்கிறோம். இலங்கை அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த நாங்களும் தயாராகவே உள்ளோம். ஆனால் கடந்தகால அனுபவங்களில் கற்ற பாடத்தினால் தற்போது சர்வதேச கண்காணிப்பில் இலங்கை அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த விரும்புகிறோம். அப்போதுதான் இலங்கை ஜனாதிபதி அளிக்கும் உறுதிமொழிகள் எல்லோருக்கும் தெரியவரும். பாதுகாப்பற்ற சூழ்நிலையில் வசிப்பதாக தமிழர்களிடம் அச்ச உணர்வு மேலோங்கியுள்ளது. கடந்த காலங்களில் சட்டம், ஒழுங்கு சீர்குலைந்து பலமுறை வன்முறை சம்பவங்கள் நேரிட்டுள்ளன. எனவே 13-வது சட்டத் திருத்தத்தில் பொலிஸ் துறையைக் கட்டுப்படுத்தும் அதிகாரம் மாகாண அரசுக்கு வழங்கப்படாது என்று கூறுவதை ஏற்க முடியாது. இராணுவ அதிகாரம் வேண்டும் என்று நாங்கள் கோரவில்லை. சட்டம் ஒழுங்கைப் பராமரிக்க பொலிஸ் துறை அதிகாரத்தை மட்டுமே கேட்கிறோம். இது அதிகார பகிர்வின் முக்கிய அங்கமாகும். இது தொடர்பாக இந்தியாவிடமும் ஐ.நா. சபையிடமும் இலங்கை அரசு ஏற்கனவே உறுதி அளித்துள்ளது என்று கூட்டமைப்பின் தலைவர் இh.சம்பந்தன் மேலும் தெரிவித்துள்ளார