மட்டக்களப்பு சிவன் ஆலயத் தேர் சில்லில் அகப்பட்டு ஒருவர் மரணம் நால்வர் காயம்
மட்டக்களப்பு மாவட்டத்தின் பிரசித்தமான சிவன் ஆலயங்களில் ஒன்றான தான்தோன்றீஸ்வரர் ஆலயத்தின் தேரோட்ட உற்சவத்தின் போது தேர் சில்லில் அகப்பட்டு முனைக்காடு வாசியான எஸ். ஜீவானந்தம் (வயது 42) பலியானதாகவும் மேலும் காயம்பட்ட நால்வர் உடனடியாக மகிழடித்தீவு பிரதேச வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும்.கொக்கட்டிச்சோலைப் பொலிஸார் தெரிவித்தனர்.
பிள்ளையார் வலம் வந்த தேர், ஆலய உள் வீதியில் உலா வரும்போது அக்கினி மூலையில் வைத்து ஜீவானந்தம் தேரின் பின்புறச் சில்லுக்குள் அகப்பட்டு மரணமாகியுள்ளார். சற்று மழை பெய்து கொண்டிருந்ததால் ஜீவானந்தமும் காயம் பட்ட ஏனைய நால்வரும் வழுக்கி விழுந்து தேரின் மரச் சில்லுக்குள் அகப்பட்டிருக்கலாம் என்று கூடவே தேரோட்டத்தில் கலந்துகொண்ட அடியார்கள் தெரிவித்தனர்.
தான்தோன்றீஸ்வரர் ஆலய தேரோட்ட உற்சவ வரலாற்றில் தேர்ச் சில்லுக்குள் அகப்பட்டு ஒருவர் மரணமடைந்திருப்பது இதுவே முதன் முறையாகும் என்று ஆலய நிர்வாகத்தினர் தெரிவிக்கின்றனர். சம்பவம் குறித்து கொக்கட்டிச்சோலைப் பொலிஸார் விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.