சீன ஜனாதிபதி இலங்கைக்கு விஜயம்
சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங், இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இலங்கையை வந்தடைந்தார். விமான நிலையத்தில் வைத்து அவருக்கு செங்கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ விமான நிலையத்துக்கு சென்று அவரை வரவேற்றார். தனது பாரியாருடன் வருகைதந்த அவரை, விமான நிலையத்தில் விரிக்கப்பட்டிருந்த செங்கம்பளத்துக்கு இரு பக்கங்களிலும் நடனக்கலைஞர்கள் நடமாட, பாடசாலை மாணவர்கள் சீன, இலங்கை ஆகிய இருநாடுகளின் தேசிய கொடிகளையும் அசைத்து வரவேற்றனர். விமான நிலையத்தை விட்டு வெளியேறும் வீதியின் ஒரு பக்கத்திலும்; அலங்கரிக்கப்பட்டிருந்த யானைகளும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. அவரை வரவேற்கும் முகமாக விமான நிலையத்தை சுற்றி இருநாட்டு கொடிகளும் பறக்கவிடப்பட்டுள்ளன. அத்துடன் கட்டுநாயக்க- கொழும்பு அதிவேக நெடுஞ்சாலையின் இருபுறங்களிலும் கொழும்பில் அவர், பயணிக்கும் இடங்களிலும் இருநாட்டு கொடிகளும் பறக்கவிடப்பட்டுள்ளன
இந்திய துணைத் தூதுவரின் கருத்து தொடர்பில் விளக்கம் கோரப்படும் – இந்தியா
யாழ்ப்பாணத்தில் உள்ள இலங்கைக்கான இந்திய துணைத் தூதர் எஸ்.டி.மூர்த்தி அங்குள்ள தமிழ் மக்களிடம், இந்தியாவில் வட, கிழக்கு மாகாணங்களில் உள்ள மக்கள், ஹிந்தி மொழியை தொடர்பு மொழியாக பேச கற்றுக்கொண்டுள்ளனர். நீங்களும், சிங்கள மொழியை பேச கற்றுக்கொள்ள வேண்டும் என்று கூறியிருந்தார். இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளர் டி.ராஜா, ‘மொழி என்பது ஒரு நாட்டின் கொள்கை பிரச்சினை. அதில் தூதரக அதிகாரிகளின் தலையீடு இருக்கக் கூடாது. இது குறித்து இந்திய அரசு தெளிவுபடுத்த வேண்டும்’ என்று கோரியிருந்தார். இந்நிலையில், டெல்லியில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய இந்திய வெளிவிவகார அமைச்சின் செய்தித் தொடர்பாளர் சையது அக்பருதீனிடம் இது குறித்து கேட்டதற்கு, ‘இந்த பிரச்சினை பற்றி இன்னும் எங்களுக்கு முழுமையான தகவல் கிடைக்கவில்லை. எனினும், இலங்கையில் உள்ள இந்தியத் தூதரக அதிகாரிகளிடம் துணைத் தூதர் எந்தக் கண்ணோட்டத்தில் அத்தகைய கருத்தை வெளியிட்டார் என்பது பற்றி விளக்கம் கேட்கப்படும்’ என்று கூறினார். மேலும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, அண்மையில் ஊடகமொன்றுக்கு அளித்த பேட்டியில், இலங்கை அரசியலமைப்பின் 13ஆவது திருத்தச் சட்டம் அமுல்படுத்துவது சாத்தியமற்றது என்று கூறியிருந்தார். இது குறித்தும் அக்பருதீனிடம் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த அவர், ‘இலங்கை அரசியலமைப்பின் 13ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக அமல்படுத்த வேண்டும் என்ற இந்தியாவின் நிலைப்பாட்டில் எவ்வித மாற்றமும் இல்லை. இலங்கை அரசிடம் அதையே இந்திய அரசும் தொடர்ந்து வலியுறுத்தும். இந்த விடயத்தில் இந்தியாவின் கோரிக்கையை இலங்கை அதிகாரப்பூர்வமாக நிராகரிக்கவில்லை. எனவே, இலங்கை அளித்த உறுதிமொழி நிறைவேற்றப்படும் என நம்புகிறோம்’ என்றார்
வடமாகாண சபையின் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் (EPDP) கந்தசாமி கமலேந்திரன் பிணையில்
நெடுந்தீவு பிரதேச சபைத் தலைவர் டானியல் றெக்ஷிசன், கடந்த 2013ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 26ஆம் திகதி அவரது வீட்டில் வைத்து சுட்டுக்கொல்லப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். இந்த கொலை தொடர்பில், வடமாகாண சபை எதிர்க்கட்சித் தலைவர் கமலேந்திரனை 2013ஆம் ஆண்டு டிசெம்பர் 3ஆம் திகதி, பயங்கரவாதக் குற்றத் தடுப்புப் பிரிவினர் கொழும்பில் வைத்து கைது செய்தனர். அத்துடன் றெக்ஷிசனின் மனைவி அனிடா மற்றும் மேலும் ஒரு இளைஞர் ஆகியோரும் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. இந்தக் கொலை தொடர்பிலான வழக்கு ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றத்தில் விசாரணை இடம்பெற்ற நிலையில், கடந்த 9 மாதங்களாக இடம்பெற்று மூவரும் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர். கமலேந்திரனை பிணையில் செல்ல யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி அன்னலிங்கம் பிரேம்சங்கர் கடந்த ஓகஸ்ட் மாதம் 29ஆம் திகதி அனுமதி வழங்கினார. பிணை வழங்கப்பட்டு இதுவரை காலமும் பிணையெடுப்பதற்கு ஆட்கள் இல்லாமல் இருந்த கமலேந்தினை அவரது உறவினர் ஒருவரே இன்று செவ்வாய்க்கிழமை இந்நிலையில், 2 இலட்சம் ரூபாய் காசுப்பிணை மற்றும் தலா 5 இலட்சம் பெறுமதியான இரண்டு சரீர பிணைகளில பிணையில் எடுத்தார். இந்த வழக்குடன் தொடர்புடைய றெக்ஷிசனின் மனைவி அனிடா, கடந்த 9ஆம் திகதி பிணையில் விடுதலையானார். அத்துடன், வழக்கு முடிவடையும் வரையில் யாழ்ப்பாணத்தில் கமலேந்திரன் இருக்க முடியாது எனவும், வாரத்தில் ஒரு நாள், வெள்ளவத்தை பொலிஸ் நிலையத்திற்குச் சென்று கையொப்பமிட வேண்டும் என்றும் நீதிபதி அறிவுறுத்தியிருந்தார். .
யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் கவனயீர்ப்பு போராட்டம்
யாழ்ப்பாண பல்கலைக்கழக கலைப்பீட சிறப்பு பட்டங்கள் பெறுவதற்கான பாடத் தெரிவில் மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கக் கோரி கவனயீர்ப்பு போராட்டமொன்றில் செவ்வாய்க்கிழமை (16) ஈடுபட்டனர். கலைப்பீடத்தில் முதலாம் ஆண்டு பரீட்சையில் சித்தியடைபவர்கள் 3.0 ஜி.பி.ஏ அடைவு மட்டத்தை பெற்றால் இரண்டாம் வருடத்தில் இருந்து சிறப்பு கலை பட்டம் (4 வருடங்கள்) பெறுவதற்கு விரும்பிய பாட தெரிவுகளை மேற்கொள்ள முடியும். 3.0 ஜி.பி.ஏ பெறாதவர்கள் பொது கலைமாணி பட்டத்துடன் (3 வருடங்கள்) வெளியேற வேண்டும். இந்நிலையில், தற்போது இரண்டாம் வருட மாணவர்களில் 644 மாணவர்கள் இருக்கின்றனர். வழமையாக கலைப்பீடத்திற்கு 400 தொடக்கம் 450 வரையிலான மாணவர்களே உள்வாங்கப்படுவார்கள். இந்நிலையில், தற்போது சிறப்பு கலைப்பட்டத்திற்கு மாணவர்களை உள்வாங்கும் போது 3.0 என்ற ஜி.பி.ஏ விட கூடுதலான ஜி.பி.ஏ.யின் பெறுமானத்தை அதிகரித்து, ஒவ்வொரு பாடத்திலும் வழமையான எண்ணிக்கையான 40 என்ற மாணவர்கள் தொகையே உள்வாங்கப்பட்டுள்ளது. குறிப்பாக புவியியல், அரசியல் விஞ்ஞானம், பொருளியல் ஆகிய பாடங்களில் இந்த நடைமுறையை கலைப்பீடம் பின்பற்றியுள்ளது. அதிகளவான மாணவர்கள் முதலாம் வருடத்தில் கற்றவர்கள் என்பதனை கருத்திற்கொள்ளாமல் நிர்வாகம் வழமையான மாணவர் எண்ணிக்கையில் பாடங்களுக்கு மாணவர்களை உள்வாங்கும் நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. இதனால், ஜி.பி.ஏ 3.0 க்கு மேல் பெற்ற பல மாணவர்கள் சிறப்பு கலை பட்டத்திற்கான பாடங்களை தெரிவு செய்து படிக்க முடியாமல் பாதிக்கப்பட்டுள்ளனர். பல்கலைக்கழகத்தில் உள்வாங்கப்பட்ட மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பிற்கு ஏற்ப சிறப்பு பாட தெரிவிலும் மாணவர்கள் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என்று கோரியே இந்த கவனயீர்ப்பு போராட்டத்தை மேற்கொண்டு வருவதாகவும். அத்துடன், தற்காலிக விரிவுரையாளர்களுக்கு நிரந்தர நியமனங்கள் வழங்கப்படாமல் இருப்பதால், விரிவுரைகளும் இடம்பெறுவது குறைவு எனவும் ஒன்றியத்தினர் தெரிவித்தனர். இத்தகைய பிரச்சினைகளுக்கு நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுக்கக்கோரியே இந்த கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்ததாகவும், சரியான தீர்வு கிடைக்கப்பெறாவிட்டால் தொடர்ந்து வரும் காலங்களில் வகுப்பு பகிஷ்கரிப்பிலும் ஈடுபடவுள்ளதாக இந்த போராட்டம் தொடர்பில் கலைப்பீட மாணவர்கள், ஒன்றியம் தெரிவித்தது.