யாழில் காணி அளவீட்டுப் பணிகள் தடுத்து நிறுத்தப்பட்டது-
யாழ். மாதகல் பிரதேசத்தில் கடற்படை முகாம் அமைக்கும் நோக்குடன், முன்னெடுக்கப்பட்ட காணிகளை சுவீகரிக்கும் நடவடிக்கை, பொதுமக்களின் எதிர்ப்பினால் கைவிடப்பட்டுள்ளது. மாதகல் கிழக்கு கோணவளை எனும் பகுதியில் து-150 கிராமசேவையாளர் பிரிவில் உள்ள 4 பரப்பு காணியினை கடற்படை முகாம் அமைப்பதற்காக சுவீகரிப்பதற்கு இன்று காணி அளவீட்டு பணிகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன. இதற்காக இளவாலை மற்றும் காங்கேசன்துறை பொலிஸ் நிலையத்தை சேர்ந்த நூற்றுக்கணக்கான பொலிசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு பொலிஸ் பாதுகாப்புடன் அளவீட்டு பணிகள் முன்னெடுக்கப்பட்டது. அதற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் கூட்டமைப்பின் வட மாகாணசபை உறுப்பினர்கள் பொது மக்களுடன் இணைந்து எதிர்ப்பைத் தெரிவித்தனர். பொதுமக்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் நில அளவீட்டு பணியை மேற்கொள்ள விடாது தடுக்கும்வகையில் நில அளவை உபகரணங்களை சுற்றி வளைத்து போராட்டம் நடாத்தினர். இந்த கடும் எதிர்ப்பின் காரணமாக நிலஅளவை திணைக்கள ஊழியர்கள் தமது பணியினை கைவிட்டுச் சென்றனர். இன்று அளவீடு செய்யப்படவிருந்த குறித்த 4 பரப்பு காணியானது முன்னர் பொதுமக்களுக்கு சொந்தமாகவிருந்து 1984ம் ஆண்டு இராஜராஜேஸ்வரி கிராமிய மீனவ சங்கத்திற்கு நன்கொடையாக கொடுக்கப்பட்டது. அக் காணியின் கடல் எல்லைப்பகுதி மீன்வாடி அமைந்துள்ள பகுதியாகும். அந்த மீன்வாடியிலிருந்து 43 படகுகளில் அப்பகுதி மீனவர்கள் கடற்தொழிலுக்கு செல்கின்றனர். அத்தடன் குறித்த காணி அமைந்துள்ள பகுதிகளில் தான் அவர்களது படகுகளும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இக் காணி சுவீகரிக்கப்பட்டு கடற்படை முகாம் அமைக்கப்படுமாயின் தமது மீன்பிடித் தொழில் முற்றாக பாதிக்கப்படும் என அப்பகுதி மீனவர்கள் கூறுகின்றனர்.