கலாநிதி ராஜினி திராணகம அவர்களின் நினைவுதினம் அனுஷ்டிப்பு-
மனித உரிமைகள் மற்றும் பெண் உரிமைகளுக்கான செயற்பாட்டாளரான மறைந்த கலாநிதி ராஜினி திராணகம அவர்களின் 25ஆம் ஆண்டு நினைவுதினம் யாழ். ரிம்மர் மண்டபத்தில் இன்றுமுற்பகல் ராஜினி திராணகம நினைவு ஏற்பாட்டுக் குழுவினரால் அனுஷ்டிக்கப்பட்டது. இந்த நினைவுதின நிகழ்வில் தென்னிலங்கை உட்பட இலங்கையின் பல பாகங்களிலும் இருந்து மூவின மக்களும் பெருமளவில் வந்து கலந்துகொண்டிருந்தார்கள். அமரர் ராஜினி திராணகம (ராஜினி ராஜசிங்கம் திராணகம) அவர்கள் யாழ். பல்கலைக்கழகத்தில் மருத்துவபீட உடற் கூறியல் விரிவுரையாளராகவும், அப்பிரிவின் தலைவராகவும் பணியாற்றியவர் என்பதுடன், உடற் கூறியல் துறையில் இங்கிலாந்தில் பட்டப்படிப்பையும் மேற்கொண்டவர். 90களில் வெளியிடப்பட்ட முறிந்த பனை என்கின்ற ஆங்கில நூலை எழுதியவர்களுள் ஒருவரான இவர், மனித உரிமைகளுக்கான யாழ் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தினை ஆரம்பித்தவர்களுள் ஒருவராவார். 80களில் தமிழீழ விடுதலைப் புலிகளுடன் இணைந்து செயற்பட்டு பின்பு ஆயுதப் போராட்ட செயற்பாடுகளில் இருந்த குறைபாடுகள் கண்டு அதிலிருந்து விலகி, மனித உரிமைகள் மற்றும் பெண் விடுதலை தொடர்பிலான செயற்பாடுகளில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டவர்.
ஊவா மாகாண சபைத் தேர்தல்; வாக்குப் பதிவுகள் நிறைவு-
பதுளை மற்றும் மொனராகலை ஆகிய இரு மாவட்டங்களையும் உள்ளடக்கிய ஊவா மாகாண சபைத் தேர்தலுக்கான வாக்களிப்பு 834 மத்திய நிலையங்களிலும் இன்றுகாலை 7 மணிக்கு ஆரம்பமாகி மாலை 4 மணியுடன் நிறைவடைந்துள்ளது என மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பதுளை மாவட்டத்தில் 516 மத்திய நிலையங்களிலும் மொனராகலை மாவட்டத்திலும் 318 நிலையங்களிலும் வாக்களிப்புகள் இடம்பெற்றன. பதுளை மாவட்டத்தில் 60 வீதத்திற்கும் அதிகமான வாக்குகள் பதிவாகியுள்ளதாக மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரி ரோஹண கீர்த்தி திசாநாயக்க தெரிவித்துள்ளார். மொனராகலை மாவட்டத்தில் 50 வீதத்திற்கும் அதிகமான வாக்குகள் பதிவாகியுள்ளதாக மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரி அந்தோனிபிள்ளை பத்திநாதன் குறிப்பிட்டுள்ளார். வாக்குப்பெட்டிகள் வாக்கெண்ணும் மத்திய நிலையங்களுக்கு கொண்டுசெல்லப்பட்டதன் பின்னர், மாலை 6 மணியளவில் தபால் மூல வாக்குகள் எண்ணப்படும். நள்ளிரவுக்கு முன்னர் முதலாவது பெறுபேற்றை வெளியிடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று தேர்தல்கள் திணைக்களம் அறிவித்துள்ளது.
யாழ் மக்களுக்கு புகையிரத திணைக்களம் அவசர வேண்டுகோள்-
யாழ். மக்களுக்கு இலங்கைப் புகையிரத திணைக்களம் அவசர வேண்டுகோள் ஒன்றினை விடுத்துள்ளது. பளைக்கும் – யாழ்ப்பாணத்திற்குமிடையே புதிதாக நிர்மாணிக்கப்பட்ட புகையிரதப் பாதையில் அதிவேகமான புகையிரத பரீட்சார்த்த வெள்ளோட்டம் இடம்பெறவுள்ளது. புகையிரத பரிட்சார்த்த நடவடிக்கைகள் இடம்பெறவுள்ளதால் புகையிரதப் பாதையின் அருகில் செல்லும்போது, அவதானத்துடன் செல்லுமாறும், மக்களின் கால்நடைகளின் நடமாட்டத்தை புகையிரதப் பாதையருகில் கட்டுப்படுத்தும்படியும் மக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இவ் அறிவித்தல்களை புகையிரத திணைக்களத்தினர் ஒலிபெருக்கியில் அறிவிப்பதுடன் துண்டுப்பிரசுங்களும் யாழ் நகரில் விநியோகிக்கப்பட்டுள்ளன. எதிர்வரும் திங்கட்கிழமை பளையில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு நேரடியான பரிட்சார்த்த பயணம் இடம்பெறவுள்ளது.