இலங்கையின் நல்லிணக்கத்துக்கு உதவ தயார் – பிரித்தானியா-
இலங்கையில் சமாதானம் காரணமாக பல நன்மைகள் ஏற்பட்டுள்ளன. இந்தநிலையில் பிரித்தானிய அரசாங்கம் இலங்கையின் நல்லிணக்கம் மற்றும் சமாதானக்கு தொடர்ந்தும் உதவும் என்று இலங்கையில் உள்ள பிரித்தானிய உயர்ஸ்தானிகரகம் அறிவித்துள்ளது 32வது சர்வதேச சமாதான தினம் நேற்று நினைவு கூறப்பட்டமையை முன்னிட்டு பிரித்தானிய உதவி உயர்ஸ்தானிகர் லோரா டேவியஸ் விடுத்துள்ள அறிக்கையிலேயே இந்த உறுதிமொழி வழங்கப்பட்டுள்ளது இலங்கையில் சமாதானம் அரசியல் பங்கேற்றல் மற்றும் பொருளதார அபிவிருத்தியை ஏற்படுத்தியுள்ளது என்று அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்
காணாமல் போனோர் தொடர்பில் 19,452 முறைப்பாடுகள் பதிவு-
காணாமல் போனவர்கள் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழு கிளிநொச்சியில் காணாமல் போனவர்கள் தொடர்பில் விசாரணை நடத்த உள்ளது. எதிர்வரும் 27ம் திகதிமுதல் 4ம் திகதிவரை விசாரணை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என ஆணைக்குழுவின் பேச்சாளர் ஒருவர் கூறியுள்ளார். 27ம் திகதி மற்றும் 28ம் திகதிகளில் முழங்காவில் பிரதேசத்தில் தமிழ் மகா வித்தியாலயத்தில் விசாரணைகள் நடத்தப்படவுள்ளன. 29ம் மற்றும் 30ம் திகதிகளில் பூநகரி பிரதேச செயலகத்தில் விசாரணைகள் நடைபெறவுள்ளன. கடந்தமுறை நடைபெற்ற விசாரணைகளில் முறைப்பாடுகளை முன்வைக்க முடியாதுபோன ஸ்கந்தபுரம் கிராமசேவகர் பிரிவைச் சேர்ந்த மக்கள் 30ம் திகதி ஆணைக்குழுவில் முறைப்பாடுகளை செய்ய சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது. ஆணைக்குழு 7வது தடவையாக தனது கூட்டத்தை நடத்தவுள்ளதுடன் ஆணைக்குழுவிடம் இதுவரை 19,452 முறைப்பாடுகள் கிடைத்துள்ளன. இவற்றில் சுமார் ஆயிரம் முறைப்பாடுகள் விசாரித்து முடிக்கப்பட்டுள்ளதாக ஆணைக்குழுவின் பேச்சாளர் கூறியுள்ளார்.
மேலும் செய்திகளை வாசிக்க…..
திஸ்ஸ அத்தநாயக்க தலைமைத்துவ சபையிலிருந்து இராஜினாமா-
ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைத்துவ சபை உறுப்பினர் பதவியிலிருந்து இராஜினாமா செய்துள்ளார். திஸ்ஸ அத்தநாயக்க தனது இராஜினாமா கடிதத்தை எதிர்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க மற்றும் தலைமைத்துவ சபைத் தலைவர் கரு ஜயசூரிய ஆகியோருக்கு அனுப்பி வைத்துள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் உள்ளகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் எதிர்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க இந்த இராஜினாமா கடிதத்தை ஏற்றுக் கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவராக சஜித் பிரேமதாஸ நியமிக்கப்படவுள்ள நிலையில் தலைமைத்துவ சபை இல்லாது செய்யப்படவுள்ளதாகவும் அதில் உள்ள சிரேஷ்ட தலைவர்களுக்கு வேறு பதவிகள் வழங்கப்படவுள்ளதாகவும் தெரியவருகிறது. மேலும் ஊவா மாகாணசபைத் தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளராக போட்டியிட்டு சாதனை வெற்றிபெற்ற ஹரேன் பெனாண்டோவிற்கு முக்கிய பதவி வழங்கப்படவுள்ளதாகவும் தெரிகிறது.
யாழில் ரயில் பாதையை மறித்து போராட்டம்-
யாழ். சாவகச்சேரி ஆதார வைத்தியசாலைக்கு அருகில் அமைந்துள்ள சப்பச்சிமாவடி பிள்ளையார் கோவில் வீதியை மூடிவிட்டு, புகையிரத பாதை அமைக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் இன்று போராட்டமொன்றை நடத்தினர். இந்நிலையில், அப்பகுதிக்கு விரைந்த பாரம்பரிய கைத்தொழில் மற்றும் சிறுகைத்தொழில் அபிவிருத்தி அமைச்சர் கே.என்.டக்ளஸ் தேவானந்தா, பிள்ளையார் கோவில் வீதியை அமைத்து தருவதாக உறுதியளித்ததை அடுத்து போராட்டம் கைவிடப்பட்டது. யாழ்.தேவி பரீட்சார்த்த புகையிரதம் நேற்றுக்காலை உத்தியோகபூர்வமாக யாழ்ப்பாணம் பயணிக்கவிருந்த நிலையில், தங்கள் வீதியை அமைத்து தந்தால் மட்டுமே புகையிரதத்தை செல்ல அனுமதிப்போம் என பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதன்போது, அங்கு சென்ற பாரம்பரிய கைத்தொழில் மற்றும் சிறுகைத்தொழில் அபிவிருத்தி அமைச்சர் கே.என்.டக்ளஸ் தேவானந்தா பொதுமக்களுடன் கலந்துரையாடியதுடன், பாதை அமைத்து தருவதற்கு நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். இதனையடுத்து அமைச்சரிடம் மகஜரை கையளித்துவிட்டு பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டுச் சென்றனர்.
வேலணையில் மனித எச்சம் தோண்டும் பணி நிறுத்தம்-
யாழ். வேலணையில் கண்டுபிடிக்கப்பட்ட மனித எச்சங்கள் அடங்கிய பகுதியை இன்று தோண்டுவதற்காக இருந்த போதும் இறுதி நேரத்தில் நீதவானின் உத்தரவில் நிறுத்தப்பட்டுள்ளது. வேலணை பிரதேச சபையின் வளாகத்தில் குழி தோண்டப்பட்ட போது மனித மண்டை ஓடுகள் மற்றும் எலும்புகள் கண்டுபிடிக்கப்பட்டன. அதனையடுத்து மனித புதைகுழியாக இருக்கலாம் என்ற சந்தேகத்தில் இன்று மேலும் தோண்டுவதற்கு ஆயத்தங்கள் மேற்கொள்ளப்படவிருந்தது. எனினும் குறித்த இடத்திற்கு வந்த ஊர்காவற்றுறை பதில் நீதவான் இ. சபேசன் குறித்த பகுதி முன்னர் மயானமாக இருந்தமையால் வரைபடங்கள் மற்றும் இட அமைவு குறித்த வரலாறுகள் என்பன குறித்த அறிக்கையினை சமர்ப்பிக்குமாறு ஊர்காவற்றுறை பொலிஸாருக்கு உத்தரவிட்டார். மேலும் வேலணை பிரதேச சபை எத்தனையாம் ஆண்டு குறித்த காணியை பெற்றுக் கொண்டது என்றும் அங்கு எப்போது கட்டடம் கட்டப்பட்டது என்ற அறிக்கையினையும் சமர்ப்பிக்குமாறும் உத்தரவிட்டுள்ளார். இதனையடுத்து தோண்டும் பணி இன்று நிறுத்தப்பட்டுள்ளது. எனினும் தொடர்ந்தும் பொலிஸார் பாதுகாப்பு கடமையில் அமர்த்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நில அபகரிப்புக்கு எதிராக புதுக்குடியிருப்பில் போராட்டம்-
இராணுவத் தேவைக்காக தமிழர் நிலங்கள் அபகரிக்கப்படுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து இன்று முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் போராட்டம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இன்று காலை 10 மணியளவில் புதுக்குடியிருப்பு சந்தை பகுதியில் ஆரம்பித்த இப்போராட்டம் பிரதேச சபையில் முடிவடைந்தது. இராணுவமே வெளியேறு, எங்கள் நிலம் எங்களுக்கு வேண்டும், எங்கள் வீடு எங்களுக்கு வேண்டும், அபிவிருத்திகள், இழப்பீடுகள் வேண்டாம் காணமல் போன உறவுகளுக்கு முதலில் பதில் சொல், இராணுவத்திற்கு வயல் எதற்கு எமது வயல் எமக்கு வேண்டும். சந்தைக் காணி எமது சொத்து ஆக்கிரமிப்பை கைவிடு, அரச அதிகாரிகளே இராணுவ ஆக்கிரமிப்புக்கு துணைபோகாதீர், ஆக்கிரமிப்பை நிறுத்து இராணுவமே வெளியேறு,காணமல் ஆக்கப்பட்ட எங்கள் பிள்ளைகளை விடுதலை செய்,சிங்கள குடியேற்றத்தை நிறுத்து, சட்டவிரோத மீன்பிடிக்காரர்களை வெளியேற்று, எமது விவசாய நிலங்களை ஆக்கிரமிக்காதே, காணாமல் போவதற்கு தமிழர் என்ன விலங்குகளா?, காணமல் போனவர்களுக்கு என்ன நடந்தது அரசே பதில் சொல், அனர்த்த நிவாரணம் தென்பகுதிக்கு மட்டுமா? போன்ற கோஷங்கள் மற்றும் பதாதைகளை தாங்கியவாறு போராட்டத்தில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்படுகிறது. இதில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான வினோநோகராதலிங்கம், சிவசக்தி ஆனந்தன் மற்றும் மாகாணசபை உறுப்பினர்கள் மற்றும் நூற்றுக்கணக்கான பொதுமக்களும் கலந்து கொண்டனர். போராட்டத்தின் இறுதியில் பிரதேசபையிடம் மகஜர் ஒன்றும் கையளிக்கப்பட்டுள்ளது.
காணி சுவீகரிப்பிற்கு எதிராக நாளை ஆர்ப்பாட்டம்-
முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் பிரதேசத்தில் இடம்பெறும் காணி சுவீகரிப்பிற்கு எதிராக, நாளை ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுக்கவுள்ளதாக வடமாகாணசபை பிரதி அவைத்தலைவர் அன்ரனி ஜெகநாதன் இன்று தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், முல்லைத்தீவு பரந்தன் (ஏ-35) வீதியில் வட்டுவாகல் பாலத்திற்கான வீதியிலிருந்து இருந்து முள்ளிவாய்க்கால் கிழக்கு கிராம அலுவலர் பிரிவுக்கு உட்பட்ட கடற்கரையோர பகுதி உள்ளடங்கலான 614 ஏக்கர் காணி பொதுமக்களுக்கு சொந்தமாக இருக்கின்றது. காணி அமைச்சின் கட்டளைக்கு அமைவாக இந்த காணி முல்லைத்தீவு கடற்படைக்கு ஒதுக்கப்பட்டுள்ளதாக பிரதேச செயலரால் துண்டுப்பிரசுரங்கள் இரண்டு மாதத்திற்கு முன்னர் ஒட்டப்பட்டிருந்தன. இது தொடர்பாக பிரதேச செயலாளருக்கு எமது ஆட்சேபணையை தெரிவித்திருந்தோம். தற்போது அந்தக்காணிகளை சுவீகரிக்கும் நோக்கில் அளவீடு செய்யவுள்ளதாக கடந்த ஒரு வாரத்திற்கு முன்னர் நிலஅளவை திணைக்களத்திலிருந்து காணி உரிமையாளர்களுக்கு கடிதம் அனுப்பப்பட்டிருந்தது. அந்தக்கடிதத்தில், உங்கள் காணிகளை எதிர்வரும் 23ஆம் திகதி அளவீடு செய்யவிருக்கின்றோம், தங்களுடைய ஆவணப் பிரதிகளுடன் எல்லைகளை காண்பிப்பதற்காக காலை 9 மணிக்கு வருகை தருமாறு குறிப்பிடப்பட்டிருந்தது. இந்நடவடிக்கைக்கு நாங்கள் எதிர்ப்பு தெரிவிப்பதுடன், காணி அளவீடு செய்யும் நடவடிக்கைகளுக்கு எதிராக, எனது தலைமையில் நாளை போராட்டம் நடைபெறும் என்றார்.