குற்றச் செயல்களுக்கு தண்டனை அவசியம் – அல் ஹூசெய்ன்-

Navaneethampillaiyin paathaiyilஇலங்கையின் இறுதிக்கட்ட யுத்தத்தின்போது புரியப்பட்டதாகக் கூறப்படும் குற்றச் செயல்களுக்கு தண்டனை வழங்க வேண்டியது அவசியம் என ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை ஆணையாளர் இளவரசர் அல் ஹூசெய்ன் தெரிவித்துள்ளார். ஐ.நா மனித உரிமைப் பேரவை அமர்வுகளில் இலங்கை தொடர்பான வாய்மொழிமூல அறிக்கையை சமர்ப்பிக்கும்போது தெரிவிக்கப்படும் விடயங்கள் உள்ளடங்கிய அறிக்கை வெளியாகியுள்ளது. அந்த அறிக்கையில் மனித உரிமை ஆணையாளர் மேலும் கூறியுள்ளதாவது, கடந்தகால மற்றும் நிகழ்கால மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டியது. புனர்வாழ்வு பணிகளில் இலங்கை அரசாங்கம் சிறந்த முன்னேற்றத்தை பதிவு செய்துள்ளது. ஆனால் குற்றச் செயல்களுக்கு தண்டனை விதிக்கப்படாத நிலைமை தொடர்ந்தும் நீடித்து வருகிறது. சட்டம் ஒழுங்கை நிலைநாட்டவும், இனங்களுக்கு இடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். எனவே ஐக்கிய நாடுகள் சபையின் விசாரணைக்கு இலங்கை அரசாங்கம் முழு அளவில் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். அதன்மூலம் இலங்கை மக்களுக்கு நீண்ட கால அடிப்படையில் நன்மைகளை ஏற்படுத்தப்படும். இலங்கை ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட பிரேரணைகளை நிராகரித்தது மற்றும் விசாரணைகளுக்கு ஒத்துழைக்க மறுப்பது குறித்து ஆழ்ந்த கவலைகொண்டுள்ளேன். இலங்கையின் நீண்டகால நலன்களை கருத்தில்கொண்டு சர்வதேச விசாரணைக்குழுவுடனும் விசேட அறிக்கையாளர்களுடனும் ஒத்துழைக்க வேண்டும் என சுட்டிக்காட்டியுள்ளார்.

பா.ஜ.க.வின் முரளிதர் ராவ் விஜய், ஜொலி, கலாநிதி நல்லையா குமரகுருபரன் அவர்களுடன் சந்திப்பு-

02இலங்கைக்கு வருகை தந்திருந்த பாரதீய ஜனதா கட்சியின் முக்கிய பிரமுகர்கள் தேசிய செயலர் முரளிதர் ராவ் மற்றும் பா.ஜ.கவின் உலக வெளிநாட்டு விவகாரங்களுக்கான பொறுப்பாளரும், தேசிய நிறைவேற்று உறுப்பினருமான விஜய் ஜொலி ஆகியோர் இன்று மதியம் இந்தியா புறப்படுவதற்கு முன்பதாக ஜனநாயக தேசிய முன்னணியின் தலைவர் கலாநிதி நல்லையா குமரகுருபரன் அவர்களை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர். இவர்களை பட்டாடை போர்த்தி குமரகுருபரன் அவர்கள் வரவேற்றார். இலங்கை அரசியல் அமைப்பில் 13வது திருத்தம் ஒருபொழுதும் அபிலாசைகளுக்கேற்ற அரசியல் தீர்வாக அமைய முடியாது என்பதை பா.ஜ.கவின் முரளிதர் ராவ், விஜய் ஜொலி ஆகியோர் புரிந்து கொண்டிருப்பதும், இங்கு அதை வலியுறுத்தி கூறியிருப்பதும் மகிழ்ச்சியை அளிக்கின்றது ஆனால், அரசியல் தீர்வு விவகாரங்கள் தொடர்பில் இலங்கையிலுள்ள கட்சிகளும் மக்களுமே தீர்மானிக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பை இலங்கை அரசாங்கம் நடைமுறை சாத்தியமற்றதாக்கிவிட்டது. 13வது திருத்தத்தை கூட வட மாகாணத்தில் அமுல்படுத்த முடியாத நிலையும் அரசாங்கத்தினால் ஏற்படுத்தப்பட்ட ஒன்றுதான். எனவே இந்தியாவினுடைய கண்காணிப்பும் அழுத்தமும் அவசியமாகிறது, 3ம் தரப்பின் அனுசரணை தேவையாகின்றது. மாகாண சபை என்பது இந்தியாவினுடைய குழந்தை தான். அதை அநாதரவாக நீங்கள் விட்டுவிட முடியாது. 13ன் அமுலாக்கம் என்பதை வேறாகவும் அரசியல் தீர்வென்பதை வேறாகவும் கையாள வேண்டும் என்று கலாநிதி நல்லையா குமரகுருபரன் அவர்கள் இதன்போது எடுத்துக் கூறியுள்ளார்.

மேலும் செய்திகளை வாசிக்க…..

வாக்காளர் இடாப்பில் பெயர் உள்ளதா என்பதை அறியும் முறை-

vaakkaalar idaappil peyar ullathaaசெப்டெம்பர் 30ஆம் திகதிவரை 2014ஆம் ஆண்டுக்கான வாக்காளர் இடாப்பு www.slelections.gov.lk என்ற இணையத்தள முகவரியில் காட்சிப்படுத்தப்படும் என தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். இணையத்தள முகவரிக்குச் சென்று தனது மாவட்டம் மற்றும் தேசிய அடையாள அட்டை இலக்கத்தை கொடுத்து தனது பெயர் வாக்காளர் இடாப்பில் உள்ளதாக என உறுதி செய்து கொள்ள முடியும். அத்துடன் 2014 வாக்காளர் இடாப்பு 30ஆம் திகதிவரை பிரதேச கிராம சேவகர் அலுவலகத்தில், பிரதேச செயலாளர் அலுவலகத்தில், உள்ளுராட்சி சபை அலுவலகங்களில் காட்சிப்படுத்தப்படும். வாக்காளர் இடாப்பில் பெயர் இல்லாத நபர்கள் செப்டெம்பர் 30ஆம் திகதிக்கு முன்னர் கிராம சேவகர் ஊடாக விண்ணப்பப்படிவம் ஒன்றை பெற்று மாவட்ட தேர்தல் அலுவலகத்திற்கு அனுப்பி வாக்காளர் இடாப்பில் இடம்பெற முடியும் என தேர்தல்கள் செயலகம் தெரிவித்துள்ளது.

13 ஆவது திருத்தம் இறுதி தீர்வாகாது-ஜனதா கட்சி முக்கியஸ்தர்கள்-

13vathuஇலங்கை அரசியலமைப்பின் 13ஆவது திருத்தச் சட்டமானது இனப்பிரச்சினைக்கான இறுதி தீர்வென எம்மால் கூற முடியாது. ஏற்றுக்கொள்ளப்பட்ட அரசியல் தீர்வு முன்வைக்கப்படவேண்டும். அரசியல் தீர்வு விவகாரங்கள் இலங்கை கட்சிகளினாலும் மக்களினாலும் தீர்க்கப்படவேண்டும். நாம் கடந்த காலத்திலும் உதவியளிக்கும் வகிபாகத்தையே கொண்டிருந்தோம். அந்தவகையில் உதவி வழங்கும் வகிபாகத்தை தொடருவோம் என்று இலங்கை வந்துள்ள பாரதிய ஜனதாக் கட்சியின் முக்கியஸ்தர்களான முரளிதர் ராவ் மற்றும் விஜய் ஜொலி ஆகியோர் தெரிவித்துள்ளனர். தீர்வு குறித்த ஏனைய விடயங்கள் நாட்டுக்குள்ளேயே தீர்க்கப்படவேண்டும். ஆனால் அதிகாரப் பரவலாக்கம் தீர்வுக்கு மிகப் பிரதானம் என்பதனை நாங்கள் காண்கின்றோம் என்றும் அவர்கள் சுட்டிக்காட்டியிருக்கின்றனர். இலங்கையில் நடைபெற்ற ஆசிய அரசியல் கட்சிகளின் மாநாட்டில் கலந்துகொள்வதற்கு பாரதிய ஜனதாக் கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் முரளிதர் ராவ் மற்றும் கட்சியின் வெளிவிவகார அமைப்பாளர் விஜய் ஜொலி ஆகியோர் வருகை தந்திருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.

முள்ளிவாய்க்கால் காணி அளவீடு கைவிடப்பட்டது-

mulli vaaikkaal kaani alaveeduமுல்லைத்தீவு, முள்ளிவாய்க்கால் பகுதியில் பொதுமக்களின் எதிர்ப்பால் காணி அளவிடும் நடவடிக்கைகளை கைவிட்டு நிலஅளவையாளர்கள் சென்றுவிட்டதாக வடமாகாணசபை பிரதி அவைத்தலைவர் அன்ரனி ஜெகநாதன் இன்று தெரிவித்துள்ளார். முல்லைத்தீவு – பரந்தன் (ஏ35) வீதியில், வட்டுவாகல் பாலத்தின் பிரதான வீதியில் இருந்து முள்ளிவாய்க்கால் கிழக்கு கிராம அலுவலர் பிரிவுக்கு உட்பட்ட கடற்கரையோர பகுதியிலுள்ள பொதுமக்களுக்கு சொந்தமான 614 ஏக்கர் காணிகள், கடற்படை முகாம் அமைக்கும் நோக்கில் நிலஅளவை செய்யும் பணிகள் இன்று முன்னெடுக்கப்படவிருந்தன. இது தொடர்பில் நிலஅளவை திணைக்களத்தினர் ஒரு வார காலத்திற்கு முன்னர் காணி உரிமையாளர்களுக்கு அறிவித்தல் விடுத்து, இன்றுகாலை 9 மணிக்கு நிலஅளவை செய்யும் உபகரணங்களுடன் நிலஅளவையாளர்கள் வருகை தந்திருந்தனர். இந்நிலையில், அங்கு ஏற்கனவே குழுமியிருந்த காணிகளின் உரிமையாளர்களான மற்றும் பொதுமக்கள், நிலஅளவை செய்வதற்கு கடும் எதிர்ப்பை தெரிவித்தனர். இதன்போது, பெரும்பான்னை இனத்தைச் சேர்ந்த இரு உரிமையாளர்கள், தங்களின் காணிகளை அளப்பதற்கு சம்மதம் தெரிவித்திருப்பதாக கூறி நிலஅளவையாளர்கள் அவர்களின் காணிகளை, அந்த இரண்டு காணி உரிமையாளர்களின் முன்னிலையில் அளவீடு செய்தனர். இருந்தும், தமிழ் மக்களுக்கு சொந்தமான மிகுதி காணிகள் அளவீடு செய்வதற்கு காணி உரிமையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து நில அளவையாளர்கள் திரும்பிச்சென்றனர். அத்துடன், நில அளவையாளர்களின் கோரிக்கைக்கமைய, காணி அளவீடு செய்வதற்கு சம்மதம் தெரிவிக்காமை தொடர்பில் எதிர்ப்பு கடிதத்தை எழுதி ஒவ்வொரு காணி உரிமையாளர்களும் நிலஅளவையாளர்களிடம் கொடுத்தனர். மக்களுடன் இணைந்து இப்போராட்டத்தில் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வினோ நோகரதலிங்கம், வடமாகாணசபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம், ஆகியோரும் கலந்துகொண்டனர் என அன்ரனி ஜெகநாதன் கூறினார்.