தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக்குழு கூட்டம்-
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் தலைவர் இரா. சம்பந்தன் தலைமையில் பாரளுமன்ற கட்டிடத் தொகுதியில் இன்றுமாலை இடம்பெற்றது. இதில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் அங்கத்துவக் கட்சிகளின் பிரதிநதிகள் கலந்து கொண்டனர். இங்கு, இன்றிருக்கக்கூடிய அரசியல் நிலைமைகள், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் எதிர்கால நடவடிக்கைகள் போன்ற பல விடயங்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டது. இதில் முக்கிய சில முடிவுகள் ஏகமனதாக எடுக்கப்பட்டது
1. தமிழ் தேசியக் கூட்டமைப்பை ஒழுங்கமைக்கப்பட்ட ஒரு ஸ்தாபனமாகவும், சில கட்டுப்பாடுகள் சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு கூட்டமைப்பை கொண்டு நடத்த வேண்டியிருப்பதனால் இவற்றை உள்ளடக்கிய யாப்பொன்று தயாரிக்கப்பட வேண்டுமென முடிவு செய்யப்பட்டது.
2. ஈ.பி.ஆர்.எல்.எவ், தமிழரசுக் கட்சி ஆகியவற்றின் தேசிய மாநாட்டின் தீர்மானங்களுக்கேற்ப தமிழ் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தக்கூடிய பல்வேறுபட்ட மக்கள் அமைப்புக்களை உள்ளடக்கி தமிழ் தேசிய சபையொன்றை நிறுவுவதெனவும் முடிவுசெய்யப்பட்டது
3. வடக்கு மாகாணசபை தொடர்பான விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடுவதற்கும், அதற்கான ஆலோசனைகளை பரிமாறிக்கொள்வதற்குமாக மாதாந்த கூட்டமொன்றை முதலமைச்சருடன் இணைந்து மேற்கொள்வதெனவும் முடிவுசெய்யப்பட்டது.
4. தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உள்ளுராட்சி சபைகள், மாகாண சபைகள், பாராளுமன்ற உறுப்பினர்கள் தொடர்பாக முறையான ஒழுங்காற்று நடவடிக்கைகளை உருவாக்கும் பொருட்டும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சட்டதிட்ட வரைமுறைகளுக்கும் கொள்கைகளுக்கும் எதிராகவோ முரணாகவோ செயற்படுவோர்மீது ஒழுங்காற்று நடவடிக்கைகளை எடுக்கக்கூடிய வகையில் குழுவொன்றை அமைப்பது தொடர்பாகவும் தீர்மானிக்கப்பட்டது.