ஐ.நா பொதுச் சபைக் கூட்டத்தில் ஜனாதிபதி உரை-
ஐக்கிய நாடுகள் சபையின் 69ஆவது பொதுச்சபைக் கூட்டத் தொடரில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ இன்று உரை நிகழ்த்தவுள்ளார். இலங்கை நேரப்படி இன்றுபிற்பகல் 6.30ற்கு ஜனாதிபதியின் உரை இடம்பெறவுள்ளதாக ஜனாதிபதியின் பேச்சாளர் மொஹான் சமரநாயக்க தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் நியூயோர்க் நகரிலுள்ள ஐ.நா தலைமையகத்தில் இந்தக் கூட்டத் தொடர் நேற்று ஆரம்பமாகியிருந்தது. ஐ.நா சபையில் அங்கத்துவம் வகிக்கும் 193 நாடுகளில் அநேகமான நாடுகளைச் சேர்ந்த அரச தலைவர்கள் இம்முறை பொதுச் சபைக் கூட்டத் தொடரில் பங்கேற்றுள்ளனர். அதேநேரம் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ இன்றும் பல அரச தலைவர்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவிருப்பதாக செய்திகள் கூறுகின்றன.
ஐ.தே.கட்சி பிரதித் தலைவராக சஜித் பிரேமதாச எம்.பி நியமனம்-
ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவராக ஹம்பாந்தோட்டை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாச நியமிக்கப்பட்டுள்ளார். கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவில் இன்று நடைபெற்ற செயற்குழுக் கூட்டத்தில் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது. கட்சியின் உதவித் தலைவராக கொழும்பு மாவட்ட எம்.பி ரவி கருணாநாயக்க நியமிக்கப்பட்டுள்ளார். கட்சியின் இளைஞர் முன்னணி தலைவராக அண்மையில் ஊவா மாகாணசபைத் தேர்தலில் போட்டியிட்ட ஹரேன் பெனாண்டோ நியமிக்கப்பட்டுள்ளார். பொருளாளராக எரான் விக்ரமரட்ன எம்.பியும், கட்சியின் சிரேஸ்ட உப தவிசாளராக ரஞ்சித் மத்துமபண்டார எம்.பியும், கட்சியின் பிரதிப் பொதுச்செயலராக அகிலவிராஜ் காரியவசம் எம்.பியும் நியமிக்கப்பட்டுள்ளதோடு கட்சியின் தேர்தல் செயலாளராக தலதா அதுகோரல எம்.பி நியமிக்கப்பட்டுள்ளார்.
மேலும் செய்திகளை வாசிக்க…..
அமெரிக்க இராஜாங்க செயலர் ஜனாதிபதி சந்திப்பு-
அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் ஹிலாரி கிளின்டனுக்கும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. நியூயோர்க்கில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் தலைமையகத்தில் இடம்பெற்ற காலநிலை உச்சிமாநாட்டில் வைத்தே, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, ஹிலாரியை சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.
வவுனியாவில் கடும் காற்றினால் மூவர் காயம்-
வவுனியாவில் வீசிய கடும் காற்றின் காரணமாக பல பகுதிகளில் மரக்கிளைகள் முறிந்து வீழ்ந்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. இதில் மூவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அத்துடன் பல இடங்களில் வீடுகள், கட்டிடங்களுக்கும் சேதங்கள் ஏற்பட்டுள்ளன. குறிப்பாக அரபாநகர், பம்பைமடு, கூமாங்குளம், மரக்காரம்பளை, நெளுக்குளம், இராசேந்திரன்குளம், உக்கிளாங்குளம், போன்ற பகுதிகளில் காற்று பாதிப்புகளை ஏற்படுத்தியது.
யாழ். பஸ் சேவை இரத்மலானை வரை நீடிப்பு-
இலங்கை போக்குவரத்து சபையின் யாழ்ப்பாணம் – புறக்கோட்டை வரையிலான பஸ் சேவை இன்றுமுதல் இரத்மலானை வரையில் விஸ்தரிக்கப்படவுள்ளதாக கோண்டாவில் போக்குவரத்து சாலை முகாமையாளர் எஸ்.குலபாலசெல்வம் தெரிவித்துள்ளார். இ.போ.சவையால் இதுவரை யாழ்ப்பாணத்திலிருந்து புறக்கோட்டை மத்திய பஸ் நிலையம் வரை பஸ்சேவை இடம்பெற்று வந்தது. வெள்ளவத்தை வரை இந்த பஸ் சேவையை நடத்துமாறு பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்திருந்தனர். அதற்கமைய, இ.போ.ச அதிகாரிகளுடன் கலந்துரையாடி சேவையை நீடிப்பது தொடர்பாக தீர்மானம் எடுக்கப்பட்டு, இன்றுமுதல் இரத்மலான வரை பஸ் சேவை இடம்பெறுகிறது. தினமும் மாலை ஆறு மணிக்கு இரத்மலானையிலிருந்து புறப்படும் பேருந்து காலிவீதி ஊடாக புறக்கோட்டையை சென்றடைந்து, அங்கிருந்து இரவு 8 மணிக்கு யாழ் புறப்படவுள்ளது.
பெண் சமுர்த்தி உத்தியோகத்தர் மீது தாக்குதல்-
திருகோணமலை, தம்பலகாமம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட முள்ளிப்பொத்தானை பகுதியில் பெண் சமுர்த்தி உத்தியோகத்தர்மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. நேற்று நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் காயமடைந்த சமுர்த்தி உத்தியோகத்தர் தம்பலகாமம் கிராமிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, மேலதிக சிகிச்சைகளுக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார். இந்த தாக்குதலை மேற்கொண்ட சந்தேகநபர் கைதுசெய்யப்பட்டு, பிணையில் விடுவிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். இதேவேளை, தாக்குதல் சம்பவத்தை கண்டித்து, தம்பலகாமம் பகுதியில் சமுர்த்தி உத்தியோகத்தர்கள் எதிர்ப்பில் ஈடுபட்டிருந்தனர்.