நாடு கடத்தல் தொடர்பில் இலங்கையுடன் ரஷ்யா உடன்படிக்கை-

நாடு கடத்தல் விடயம் தொடர்பில் இலங்கை அரசாங்கத்துடன் புரிந்துணர்வு உடன்படிக்கை ஒன்றை செய்துகொள்ள ரஷ்யா இணக்கம் தெரிவித்துள்ளது. இலங்கையுடன் நாடு கடத்தல் உடன்படிக்கையில் கைச்சாத்திடுமாறு ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் அந்நாட்டு நீதியமைச்சருக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்தத் தகவலை ரஷ்யாவின் உத்தியோகபூர்வ இணையத்தளம் வெளியிட்டுள்ளது. இவ்வாறானதொரு உடன்படிக்கையை செய்துகொள்ள இலங்கை அமைச்சரவை ஏற்கனவே அங்கீகாரம் வழங்கியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. இந்த உடன்படிக்கையின் பின்னர் இரு நாடுகளிலும் குற்றச்சாட்டுக்களுக்கு உள்ளாகி சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளவர்கள் பரஸ்பரம் இடமாற்றப்படுவர் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தஞ்சம் கோரி ஆஸி. செல்வோரை கம்போடியாவுக்கு அனுப்ப முடிவு-

படகுமூலம் தஞ்சம்கோரி அவுஸ்திரேலியா செல்லும் அகதிகளை கம்போடியாவிற்கு அனுப்ப தீர்மானிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் கம்போடிய அரசுடன் ஒப்பந்தம் செய்து கொண்டதை அவுஸ்திரேலியா உறுதி செய்துள்ளது. படகுகள்மூலம் விசா இல்லாமல் வந்தவர்களையும் நௌரு, மனுஸ், பப்புவாநியூகினியா தீவுகளில் உள்ளவர்களை கம்போடியாவுக்கு அனுப்புவதற்க்கான ஒப்பந்தந்தம் செய்துள்ளதாக அவுஸ்திரேலியா குடிவரவு அமைச்சர் ஸ்கொட் மொரிசன் தெரிவித்துள்ளார். இந்நடவடிக்கை மிக விரைவில் நடைமுறைப்படுத்தப்படும் என அவர் கூறியுள்ளார். இந்நடவடிக்கைக்கு ஆஸி எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு வெளியிட்டுள்ளன. ஆனால் கிலாரட் பதவியில் இருந்தபோது புகலிடம் கோரியவர்களை மலேசியா அனுப்பியது போன்ற நடைமுறைதான் இதுவும் என மொரிசன் விளக்கியுள்ளார். இதேவேளை, இந்நடவடிக்கையானது மனித உரிமை மீறலாகும் என மனித உரிமை அமைப்பு குற்றம் சுமத்தியுள்ளது. கம்போடியாவில் அகதிகள் வாழ்வதற்கான சரியான சூழலும் இல்லை என அவ்வமைப்பு குறிப்பிட்டுள்ளது.

மேலும் செய்திகளை வாசிக்க…  Read more