விரைவில் நீதிமன்றங்களில் மொழிபெயர்ப்பாளர்களை நியமிக்க நடவடிக்கை-

untitledநீதிமன்றங்களில் சிங்களம் மற்றும் தமிழில் தயாரிக்கப்படும் குற்றப்பத்திரங்கள் மற்றும் ஆவணங்களை அந்தந்த மொழிகளில் மொழிபெயர்ப்பதற்கு மொழி பெயர்ப்பாளர்கள் விரைவில் நியமிக்கப்படுவார்கள் என சட்டமா அதிபர் பாலித பெர்ணான்டோ உறுதியளித்துள்ளார். யாழிற்கு விஜயம் மேற்கொண்ட சட்டமா அதிபர் பாலித பெர்ணான்டோ இன்று யாழ். நீதிமன்றில் நீதிபதிகள் மற்றும் சட்டத்தரணிகளை சந்தித்து கலந்துரையாடினார். அச்சந்திப்பின்போது, பொலிஸாரினால் தாக்கல்செய்யப்படும் குற்றப்பத்திரங்கள் சிங்களத்தில் இருப்பதனால் மொழிபெயர்ப்பு செய்வதற்கு சிரமங்களை எதிர்நோக்குவதாக சட்டத்தரணிகள் தெரிவித்துள்ளனர். அத்துடன், சட்டமா அதிபர் திணைக்களத்தினால் அனுப்பி வைக்கப்படும் குற்றப்பத்திரம் மற்றும் ஆவணங்களை மொழிபெயர்ப்பு செய்வதற்கு பல சிக்கல்கள் ஏற்படுவதாகவும், இவ்வாறு மொழிபெயர்ப்பிற்கான காலம் நீடிப்பதால் வழக்குகளின் கால எல்லைகளும் நீடிக்கப்படுகின்றன எனவும், அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். பொலிஸாரினால் தயாரிக்கப்படும் குற்றப்பத்திரங்கள் மற்றும் சட்டமா அதிபர் திணைக்களத்தினால் அனுப்பி வைக்கப்படும் ஆவணங்களை அந்தந்த மொழிகளில் மொழிபெயர்ப்பு செய்வதற்கான மொழிபெயர்ப்பாளர்கள் விரைவில் நீதிமன்றங்களில் நியமிப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படுமென்றும் சட்டமா அதிபர் குறிப்பிட்டார்.

வவுனியா பிரதேச செயலாளர் வீட்டின்மீது கல்வீச்சு-

avuniyavil kadum kaatruவவுனியா பிரதேச செயலாளர் கே.உதயராசாவின் வீட்டின்மீது நேற்றிரவு 9.45மணியளவில் கல்வீச்சுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவிக்கின்றனர். வவுனியா உத்யான வீதியில் அமைந்துள்ள பிரதேச செயலரின் உத்தியோகபூர்வ இலத்தின்மீதே தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதுடன் வீட்டு ஜன்னல் கண்ணாடி உடைந்து சேதமாகியுள்ளதென பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். தாக்குதலால் பிரதேச செயலருக்கோ எவருக்குமோ பாதிப்பு ஏற்படவில்லை. தாக்குதல் தொடர்பில் வவுனியா பொலிஸ் நிலையத்திற்கு அறிவித்துள்ளதாக பிரதேச செயலாளர் கே.உதயராசா தெரிவித்துள்ளார். பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

கோணேஸ்வரம் ஆலய வளாகத்தில் சாரதியின்றி பயணித்த பஸ் மோதி வைத்தியர் பலி-

koneswaram aalaya valaakamதிருகோணமலை திருக்கோணேஸ்வரம் ஆலய வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பஸ் ஒன்று திடீரென பள்ளத்தை நோக்கி நகர்ந்ததால் பஸ்ஸில் மோதுண்டு ஒருவர் உயிரிழந்துள்ளார். சாரதி பஸ்ஸை நிறுத்திவிட்டு சென்றவேளை பஸ் இவ்வாறு பள்ளத்தை நோக்கி நகர்ந்தவேளை அதில் மோதுண்ட ஒருவர் பாதுகாப்பு கொங்றீட் தூணில் நசுங்குண்டு பள்ளத்தில் வீழ்ந்துள்ளார். பின்னர் அவர் திருகோணமலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளார். திருக்கோணேஸ்வரம் ஆலயத்திற்கு வழிபாட்டுக்குச் சென்ற சீதுவ – ரத்தொலுகம பகுதியைச் சேர்ந்த ஓய்வு பெற்ற வைத்தியரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். விபத்தை அடுத்து ஆலயத்தில் கூடியிருந்தவர்கள் பஸ்ஸின் சாரதியை தாக்கியுள்ளனர். காயமடைந்த சாரதி திருகோணமலை வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வடக்கு முதல்வர் – சட்ட மா அதிபர் சந்திப்பு-

வடமாகாண முதலமைச்சரும், முன்னாள் உயர் நீதிமன்ற நிதியரசருமான சீ.வி.விக்னேஸ்வரனை சட்டமா அதிபர் பாலித பெர்ணான்டோ சந்தித்து கலந்துரையாடினார். யாழிற்கு நேற்று சென்ற சட்டமா அதிபர் யாழ். நீதிமன்றிற்கு விஜயம் மேற்கொண்டதுடன், பொலிஸார் மற்றும் பல தரப்பினரை சந்தித்தார். இதன்போது, வடமாகாண முதலமைச்சரின் வாசஸ்தலத்தில் நேற்று மாலை அவரைச் சந்தித்து பல விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடியுள்ளனர்.

மேலும் செய்திகளை வாசிக்க…

பலஸ்தீன ஜனாதிபதியிடம் 1 மில்லியன் அமெ.டொலர்கள் கையளிப்பு-

palestine president meetingஐக்கிய நாடுகள் பொதுச் சபைக் கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக நியூயோர்க்கில் சென்றுள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட குழுவினர், அங்கு வருகை தந்திருந்த பலஸ்தீன் நாட்டு ஜனாதிபதி மொஹமட் அப்பாஸை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இதேவேளை பலஸ்தீனுக்கு வழங்குவதாக ஜனாதிபதியினால் ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்த ஒரு மில்லியன் அமெரிக்க டொலர்களை, இந்த சந்திப்பின் பாது பலஸ்தீன் ஜனாதிபதியிடம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உத்தியோகபூர்வமாக கையளித்துள்ளார்.

அருண் செல்வராஜன் மீண்டும் நீதிமன்ற காவலில்-

pakistan kkaaka vevu paarthaசென்னையில் கைதுசெய்யப்பட்ட ஐ.எஸ்.ஐ உளவாளி என கூறப்படும் அருண் செல்வராஜனை 25ஆம் திகதிவரை நீதிமன்ற காவலில் வைக்க பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனையடுத்து அவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டார். தேசிய புலனாய்வு அமைப்பு அதிகாரிகளின் 6 நாட்கள் விசாரணைக்கு பிறகு சென்னை பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றத்தில் அருண் ஆஜர்படுத்தப்பட்டார். விசாரணைக்கு அருண் செல்வராஜன் முழு ஒத்துழைப்பு அழைக்கவில்லை என தேசிய புலனாய்வு அமைப்பினர் தெரிவித்துள்ளனர். இதனால், அறிவியல்பூர்வமான முறையில் உண்மையை கண்டறியும் சோதனை நடத்தப்பட்டுள்ளது. மேலும், அவரிடமிருந்து கைப்பற்றப்பட்ட முக்கிய ஆவணங்களை கொண்டு யார் யாரிடம் அவர் தொடர்பு கொண்டார் என்று அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். அத்துடன், இலங்கை அகதி முகாமில் உள்ள ஒருவருடன் அருண் செல்வராஜன் தொடர்பு கொண்டு பேசியது தெரியவந்தது. இதனையடுத்து, அவரை, இலங்கை அகதி முகாமிற்கு கொண்டுசென்று விசாரணை நடத்தியுள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும், மருத்துவக்கல்லூரி மாணவி உட்பட இருவரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. அருண் செல்வராஜனிடம் உள்ள இரண்டு பாஸ்போர்ட்டுகளில் இந்திய பாஸ்போட் போலியானது என தெரியவந்துள்ளது. இதனை வாங்கிக்கொடுத்த இரு அதிகாரிகளையும் கைதுசெய்து என்.ஐ.ஏ அதிகாரிகள் ரகசிய விசாரணை நடத்தியுள்ளனர்.

காணி சுவீகரிப்பும் ஓர் இனவழிப்பே: சிவாஜிலிங்கம்-

வடக்கில் தமிழ் மக்களின் காணிகள் அபகரிக்கப்படும் செயற்பாடும் ஒரு இனவழிப்பு நடவடிக்கையே என்று வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் குற்றஞ்சாட்டியுள்ளார். வடமாகாண சபையின் மாதாந்த கூட்டத்தொடர், கைதடியில் அமைந்துள்ள வடமாகாண சபை கட்டிடத் தொகுதியில் நேற்று இடம்பெற்றது. இன்றைய அமர்வில் வடமாகாண சபை உறுப்பினர் தாமோதரம்பிள்ளை லிங்கநாதன், வடக்கின் வசந்தம் அபிவிருத்தி திட்டத்தில் மாகாண அரசாங்கத்தின் ஈடுபாடு இல்லாமல் மத்திய அரசாங்கம் ஈடுபட்டு வருகின்றது என்ற கருத்தை முன்வைத்தார்.இதன்போது குறுக்கிட்ட சிவாஜிலிங்கம் மேற்கண்டவாறு கூறினார். தொடர்ந்து உரையாற்றிய அவர், ‘நீங்கள் வடக்கின் வசந்தம் பற்றி கதைக்கின்றீர்கள். ஆனால் எங்கள் மக்களுடைய காணிகள் சுவீகரிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது .எமது உரிமைகள் கிடைக்க வேண்டும். உரிமைகள் கிடைத்துவிட்டால் அபிவிருத்தி வேலைத்திட்டங்களை புலம்பெயர் உறவுகள் மற்றும் வெளிநாடுகளின் உதவிகளுடன் மேற்கொள்ள முடியும். தமிழர்களாகிய நாங்கள் எலும்புத் துண்டுக்கு ஆசைப்பட்டு எமது உரிமைகளை விட்டுக்கொடுக்கக் கூடாது’ என்றார். தென்னாபிரிக்கா கண்டத்தில் எபோலா வைரஸ் எவ்வாறு பரவியதோ அதேபோல் எமது மக்களுடைய காணிகளை அரசாங்கம் அபகரித்து வருகின்றது. எமது காணிகளை அபகரித்து பௌதீக வளங்களை அழிக்கும் செயற்பாட்டில் ஈடுபட்டு வருகின்றது. இன்றுகூட கட்டைக்காட்டு பகுதியில் காணி சுவீரிக்கும் நோக்கில் நிலஅளவை செய்யும் பணிகள் முன்னெடுக்கப்படுவதாக கூறினார். அத்துடன், வடக்கில் இடம்பெறும் காணி அபகரிப்புக்கள் தொடர்பில் வடமாகாண சபையில் விசேட கூட்டத்தொடர் ஒன்று நடத்தப்பட வேண்டும் என சிவாஜிலிங்கம் கோரிக்கை விடுத்தார். அதற்கு அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம், காணி அபகரிப்பு தொடர்பில் விசேட கூட்டத்தொடரிற்கான திகதியை இன்றை அமர்வு முடிவடையும் போது அறிவிப்பதாக தெரிவித்துள்ளார்.