Posted by plotenewseditor on 27 September 2014
Posted in செய்திகள்
புலிகள்மீதான தடை நியாயமானது – இந்தியா-
இந்தியாவில் தமிழீழ விடுதலைப் புலிகள்மீது தடை விதிக்கப்பட்டுள்ளமையை நியாயப்படும் வகையிலான ஆவணங்களை இந்திய அரசாங்கம், இந்த தடை குறித்து ஆராயும் தீர்ப்பாயத்திடம் கையளித்துள்ளது. புலிகள் மீது இந்திய விதித்துள்ள தடை நீக்கப்பட வேண்டுமா? என்பது தொடர்பில் ஆராய்வதற்காக நீதிபதி ஜீ.பி.மிட்டல் தலைமையிலான தீர்ப்பாயம் ஒன்று உருவாக்கப்பட்டு விசாரணை நடத்தப்படுகிறது. இந்த தீர்ப்பாயம் நேற்று சென்னையில் தமது அமர்வை நடத்தியிருந்தது. இதன்போது இந்தியாவின் பிரதி மன்றாடியார் நாயகம், புலிகள் தடை செய்யப்பட்டமையை நியாயப்படுத்தும் வகையிலான ஆதாரங்களை தீர்ப்பாயத்தில் முன்வைத்தார். கடந்த 2012ம் ஆண்டு மூன்று புலி உறுப்பினர்கள் இந்தியாவில் கைதுசெய்யப்பட்டமை, இந்த தடை நீடிப்புக்கான காரணங்களில் ஒன்றாக இந்திய அரசாங்கத்தினால் கூறப்பட்டுள்ளது. இந்த தீர்ப்பாயத்தில் புலிகளின் சார்பில் வாதாடுகின்ற மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக்கழகத்தின் பொது செயலாளர் வை.கோ. கைது செய்யப்பட்ட மூன்று பேரும் புலிகளுடன் தொடர்புடையவர்கள் என்பதற்கு போதிய ஆதாரங்கள் இல்லை என்று கூறினார். அதேநேரம் புலிகள் இந்தியாவின் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலான இயக்கம் என்றும் இந்திய மத்திய அரசாங்கம் குற்றம் சுமத்தியது. இதனை மறுத்துள்ள வை.கோ. புலிகள் இலங்கையில் தமிழீழத்தை கேட்டார்களே தவிர, இந்தியாவில் ஒரு அங்குலத்தையேனும் கேட்டிருக்கவில்லை என்று கூறினார். இந்த தீர்ப்பாயத்தின் விசாரணை இன்றும் சென்னையில் இடம்பெறுகின்றது.
ஜனாதிபதி- ஆஸி. பிரதமர் சந்தித்து கலந்துரையாடல்-
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்க்ஷ மற்றும் அவுஸ்திரேலிய பிரதமர் டோனி அபோட் ஆகியோர் நியூயோர்க் நகரில் இன்று காலை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். ஐ.நா பொதுச்சபையின் 69ஆவது அமர்வின் ஓரமாக இடம்பெற்ற இந்த சுமூகமான கலந்துரையாடலின் போது இருதரப்புச் சம்பந்தமான பல விடயங்கள் தொடர்பாக இரு தலைவர்களும் கலந்துரையாடியுள்ளனர். பொருளாதார, அபிவிருத்தி துறைகளில் இலங்கையின் அண்மைய விருத்திநிலை தொடர்பாகவும், இலங்கையின் நல்லிணக்கப் பணிகள் தொடர்பாகவும் பிரதமருக்கு ஜனாதிபதி ராஜபக்ஷ விளக்கியுள்ளார். மேலும் நல்லிணக்க ஆணைக்குழு சிறப்பாக செயற்படுவதாகவும் இலங்கையின் மொத்த உள்நாட்டு வளர்ச்சி 7.8 சதவீதமாக இருப்பது சிறப்பான ஒரு விடயம் எனவும் டோனி அபோட் ஜனாதிபதிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இதேவேளை அவுஸ்திரேலியா எதிர்கொள்ளும் மனிதக் கள்ளக்கடத்தலை எதிர்கொள்ள இலங்கை வழங்கிய உதவிக்கு மிக நன்றி தெரிவிப்பதாகவும் டோனி அபோட் கூறியுள்ளார்.
மேலும் செய்திகளை வாசிக்க… Read more